கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

படிப்பை இடையில் நிறுத்திய பொறியியல் மாணவர் கட்டிய பணம் ரூ.93 ஆயிரத்தை வட்டி அபராதத்துடன் வழங்க உத்தரவு

எம்.டெக். படிப்பில் சேர்ந்த 5 நாட்களுக்கு மட்டுமே கல்லூரிக்குச் சென்றுவிட்டு இடைநின்ற மாணவர் செலுத்திய தொகையை கல்லூரி சென்ற நாட்களுக்கான கல்விக் கட்டணத்தைக் கழித்துக் கொண்டு மீதத் தொகை ரூ.93,815-ஐ 10 சதவீத வட்டியுடனும், மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் மற்று

News image
Updated On :30 செப்டம்பர் 2015, 9:13 am

கோ.ஜெயக்குமார்

எம்.டெக். படிப்பில் சேர்ந்த 5 நாட்களுக்கு மட்டுமே கல்லூரிக்குச் சென்றுவிட்டு இடைநின்ற மாணவர் செலுத்திய தொகையை கல்லூரி சென்ற நாட்களுக்கான கல்விக் கட்டணத்தைக் கழித்துக் கொண்டு மீதத் தொகை ரூ.93,815-ஐ 10 சதவீத வட்டியுடனும், மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவிற்கு ரூ.5 ஆயிரம் சேர்த்து இரண்டு மாதங்களுக்கு வழங்க சிவகாசி மெப்கோ கல்லூரி நிர்வாகத்திற்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி, தானா விக்கிரமசிங்கபுரம், வாட்மேன் மிடில் தெருவைச் சேர்ந்தவர் எஸ்.விக்னேஷ்வரன். இவர் சிவகாசி-விருதுநகர் சாலையில் ஆமத்தூர்-மத்தியசேனையில் உள்ள மெப்கோ பொறியியல் கல்லுரியில் 5.9.2013-ம் தேதி எம்.டெக். பயோ டெக்னாலஜி மாணவராக ரூ.99,815 கட்டணம் செலுத்தி சேர்ந்துள்ளார். சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 16.9.13-ம் தேதியிலிருந்து கல்லூரி செல்வதிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். கல்லூரி படிப்பை நிறுத்துவது தொடர்பாக 10.9.13-ம் தேதி கல்லூரிக்கு தகவல் கொடுத்துள்ளார். செப்டம்பர் 5 முதல் 15-ம் தேதி வரை அவர் படித்துள்ள 10 நாட்களில் 5 நாட்கள் கல்லூரிக்கு விடுமுறையாகும். 5 நாட்கள் மட்டுமே கல்லூரி வகுப்பில் படித்துள்ளார்.

விக்னேஷ்வரன் 16.9.13-ம் தேதி கல்லூரியில் மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) கேட்டு மனு கொடுத்துள்ளார். 7.10.13-ம் தேதி கல்லூரிக்கு வந்து அவருடை சான்றிதழைத் திரும்பக் கேட்டபோது, அடுத்த வருடத்திற்குரிய கட்டணத்தையும் செலுத்தினால்தான் சான்றிதழ் தரப்படும் என்று கூறினார்களாம்.

இதனையடுத்து விக்னேஷ்வரன் தான் உறுப்பினராக உள்ள நுகர்வோர் அமைப்பின் உதவியை நாடியுள்ளார். இதுபோன்ற புகார்களில் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கிய தீர்ப்புகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்புகளின் நகல்களை இணைத்து நுகர்வோர் அமைப்பு கல்லூரிக்கு தபால் எழுதியுள்ளது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் விக்னேஷ்வரனின் ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும் ரூ.29170-க்கான காசோலையை இணைத்து அனுப்பியுள்ளார்கள். ஆனால் காசோலையை விக்னேஷ்வரன் தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் 1.11.13-ம் தேதி கல்லூரி வழங்கிய காசோலையை அவர்களுக்கே ஒரு கடிதம் மூலம் திருப்பி அனுப்பிவிட்டார்களாம்.

இதனையடுத்து விக்னேஷ்வரன், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், தான் கல்லூரி சென்ற 5 நாட்களுக்கான கட்டணத்தை யுஜிஜூ மற்றும் எம்.எச்.ஆர்.டி. வழிகாட்டுதல்படி ரூ.1000 மட்டும் கழித்துக் கொண்டு மீதி பணத்தை கல்லூரி நிர்வாகம் தர வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தார்.

மனுவை நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் விசாரித்தனர்.
அவர்கள் வழங்கிய தீர்ப்பு விவரம்: கல்லூரி நிர்வாகம் மாணவர்க்கு ரூ.29170 மட்டுமே கொடுக்க முன் வந்தது சட்ட விரோதமானது. கல்லூரியின் சேவையில் சேவைக் குறைபாடு உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணைய உத்தரவைப் பின்பற்றி, இந்த வழக்கிலும் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று நீதிமன்றம் கருதுகிறது.

கல்லூரி நிர்வாகம் மாணவருக்கு ரூ.93,815-ஐ இந்த வழக்கு தாக்கல் செய்த 1.8.2014-ம் தேதியிலிருந்து 6 சதவீத வட்டியுடன் உத்தரவு பிறப்பித்த இரு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். அதற்குள் செலுத்த தவறினால் ரூ.93,815-ஐ மனு தாக்கல் செய்த தேதியிலிருந்து வசூலாகும் தேதி வரை 10 சதவீத வட்டியுடன் திரும்பத் தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் மாணவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவிற்காக ரூ.5 ஆயிரமும் சேர்த்து வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.