பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்திய நுகர்வோருக்கு உள்ள உரிமைகளும் முக்கியத்துவமும்!

இந்திய நுகர்வோருக்கு உள்ள உரிமைகளை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட நுகர்வோர் உரிமைகள் பற்றி...

News image
நுகர்வோர் உரிமைகள்- ANI
Updated On :4 மார்ச் 2026, 5:56 am

இணையதளச் செய்திப் பிரிவு

நுகர்வோர் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு இயற்றியதே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986-ன் திருத்தமே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்- 2019.

இந்த சட்டமானது நேரடியாக சந்தை நடவடிக்கைகளில் பங்கேற்கும் நுகர்வோரின் பொது நலனை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தனியார் மற்றும் பொதுத் துறைகளின் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளையும் பெறும் நுகர்வோர்களுக்கானதாக உள்ளது.

நுகர்வோர் உரிமைகளை நடைமுறைப்படுத்தவும், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் சுரண்டல்களுக்கு எதிராகப் போராடும், நுகர்வோர்களுக்கு ஒரு ஆயுதமாக உதவுகிறது.

நுகர்வோர் உரிமைகளின் முக்கியத்துவம் என்ன?

தரமற்ற, காலாவதியான, மாசுபட்ட பொருள்கள் அல்லது சேவைகளைப் பெறும்போது, அதற்கான முழு விலையையும் அவர்கள் செலுத்தியும், அதனால் ஏற்படும் தீங்கு அல்லது இழப்பை நுகர்வோர் எதிர்கொள்கிறார்கள்.

எனவே, நுகர்வோர் பாதுகாப்பு முன்னுரிமை பெறுகிறது. அவர்களின் நலன்களைப் பாதுகாக்க அரசு சில நுகர்வோர் உரிமைகளை சட்டமாக இயற்றி வைத்திருக்கிறது.

நுகர்வோர் உரிமைகளின் வகைகள்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மக்களுக்கு ஆறு விதமான நுகர்வோர் உரிமைகளை வழங்குகின்றன. அவற்றில்,

பாதுகாக்கும் உரிமை

பாதுகாக்கும் உரிமை என்பது சொத்து மற்றும் உயிருக்கு ஆபத்தான பொருள்கள், பொருள்கள் அல்லது சேவைகளை சந்தைப்படுத்துவதில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்கிறது. மின் சாதனங்கள், எரிவாயு சிலிண்டர்கள் போன்ற பொருள்களில் உற்பத்தி குறைபாடு, நுகர்வோரின் உடல்நலம், வாழ்க்கை மற்றும் சொத்துகளுக்கு தீங்கு அல்லது இழப்பை ஏற்படுத்தும்.

பாதுகாக்கும் உரிமையின் கீழ், வாங்குவதற்கு முன் பொருள்களின் உத்தரவாதம் மற்றும் தரத்தை வலியுறுத்தும் உரிமையை நுகர்வோருக்கு வழங்குகிறது. எனவே அக்மார்க் (AGMARK) அல்லது ஐஎஸ்ஐ (ISI) சான்றிதழ் பெற்ற அதாவது தரமான பொருள் என அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொருள் அல்லது தயாரிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தகவல் பெறும் உரிமை

தகவல் பெறும் உரிமை என்பது, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, பொருள்கள், பொருள்கள் அல்லது சேவைகளின் அளவு, தரம், தரநிலை, தூய்மை, அந்தப் பொருளின் வீரியம் மற்றும் விலை குறித்து வாடிக்கையாளர்கள் தகவல்களைப் பெறுவதற்கான உரிமையை வழங்குகிறது.

ஒரு பொருளை வாங்கும் போது வாடிக்கையாளர் சிந்தித்து செயல்படும் வகையில், நுகர்வோருக்குத் தேவையான அனைத்து தயாரிப்பு விவரங்களையும் விற்பனையாளர்கள் அல்லது உற்பத்தியாளர்கள் வழங்க தகவல் பெறும் உரிமை வகை செய்கிறது.

தெரிவு செய்யும் உரிமை

தெரிவு செய்யும் உரிமை என்பது நுகர்வோருக்கு பல்வேறு பொருள்கள், பொருள்கள் அல்லது சேவைகளை அலசி ஆராய்ந்து வேறுபாடுகளைக் கண்டறிந்து வாங்கும் உரிமையை வழங்குகிறது.

ஒரு பொருளின் போட்டி விலை என்பது நியாயமான விலையைக் குறிக்கிறது. விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் அல்லது வணிகர்கள் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனத்தின் பொருள்களை வாங்க நுகர்வோரை கட்டாயப்படுத்த முடியாது.

நுகர்வோர், தங்கள் முன் இருக்கும் வாய்ப்புகளில், தங்களுக்கு உகந்ததை, விலைகளை ஒப்பிட்டு, பொருத்தமான பொருள்களைத் தெரிவு செய்யலாம். நல்ல தரமான, பொருள் அல்லது சேவை, உரிய விலையில் நுகர்வோருக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதும் இதில் அடங்கும்.

கேட்கப்படும் உரிமை

கேட்கப்படும் உரிமை என்பது நுகர்வோரின் நலன்கள் பொருத்தமான அமைப்புகளால் கேட்கப்பட்டு பரிசீலிக்கப்படுவதை உறுதி செய்கிறது. இந்த உரிமையினால், நுகர்வோர் ஒரு பொருளை அல்லது சேவைகளை பெறும்போது சந்திக்கும் பிரச்னைகளை அது தொடர்பான அமைப்புகளில் எழுப்பி தீர்வுக்கான வழிகளைப் பெற வகை செய்கிறது.

இந்த முறையீடுகளில், விற்பனையாளரால் நியாயமற்ற வணிக நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் பொருத்தமான அமைப்புகளில் நுகர்வோர் புகார் அளிக்கலாம். அவை, நுகர்வோர் தங்கள் குறைகளைத் தெரிவிக்க நியாயமான வாய்ப்பை வழங்கும். இந்த உரிமையைச் செயல்படுத்த நுகர்வோரைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளின் உதவியை பெற வழி வகை செய்கிறது.

தீர்வு காணும் உரிமை

நியாயமற்ற வணிக நடைமுறைகள் அல்லது நுகர்வோரை நேர்மையற்ற முறையில் சுரண்டுவதற்கு எதிராக தீர்வு காண நுகர்வோருக்கு உரிமை உண்டு. நுகர்வோரின் குறைகளுக்கு நியாயமான தீர்வு காணும் உரிமையும் இதில் அடங்கும். நுகர்வோர் தாங்கள் பெற்ற பொருள்கள் அல்லது சேவைகளில் நியாயமான குறைகள் இருப்பதை அறியும்போது அது குறித்து புகார் அளிக்கலாம்.

பல்வேறு நுகர்வோர் அமைப்புகளின் ஒத்துழைப்புடன், நுகர்வோர் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் முடியும். இழப்பீடு என்பது நுகர்வோரின் பிரச்சினைக்கு ஏற்ப பணம், குறைபாடுள்ள பொருள்களை சரிசெய்தல் அல்லது பொருள்களை மாற்றிக் கொடுப்பது என இருக்கலாம்.

நுகர்வோர் உரிமைகளை அறிவதன் அவசியம் என்ன?

நுகர்வோருக்கு எதிராக நடக்கும் சுரண்டலைத் தவிர்க்க நுகர்வோர் தங்கள் உரிமைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.

மேலும் இந்த உரிமைகள் யாவும், ஒருவர் தகவலறிந்த நுகர்வோராக இருப்பதற்குத் தேவையான திறன்களையும் அறிவையும் பெற உரிமையை வழங்குகிறது. நுகர்வோர் தங்கள் உரிமைகளை அறிந்திருந்தால்தான், ​​அவர்களின் உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளின்போது, அவற்றைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவேதான், மத்திய, மாநில அரசுகள், பள்ளி மற்றும் கல்லூரிப் பாடங்களில் நுகர்வோர் கல்வியை இன்றியமையாததாக்கியிருக்கிறது.

இதையும் படிக்க..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.