திருநெல்வேலி மாவட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு்ள்ள அரசு ஊழியர்கள் 6 ஆவது நாளாக திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 127 பெண்கள் உள்பட 222 பேர் கைது செய்யப்பட்டனர்.
2011 இல் தேர்தல் வாக்குறுதி அளித்தவாறு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு நடத்தை விதிகளை ரத்து செய்ய வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு காத்திருப்போருக்கு நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதம் 10 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் சங்கம், வணிகவரி பணியாளர்கள் சங்கம், சாலை பணியாளர்கள் சங்கம், சத்துணவு ஊழியர்கள் சங்கம், அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம், மருத்துவத்துறை தொழில்நுட்பர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் பாளையங்கோட்டை ஏ.ஆர். லைன் பிரதான சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கையை வலியுறுத்தி 6 ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக பாளையங்கோட்டையில் நெடு்ஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலுக்கு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர். ராஜேஸ்வரன் தலைமை வகித்தார்.
மறியலில் பங்கேற்ற வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் குருசந்திரன், மருத்துவத்துறை தொழில்நுட்பர் சங்க மாநில செயலர் பார்த்தசாரதி, ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்கள் சங்கத் தலைவர் பொன்ராஜ், வணிகவரி்ப் பணியாளர்கள் சங்கத் தலைவர் மதி மற்றும் 127 பெண்கள் உள்பட 222 பேரை போலீஸார் கைது செய்தனர்.