திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தினால் பொதுமக்கள், மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை நடைபெற்ற மறியலில் 2000 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாநிலம் முழுவதும் அரசுத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இம்மாதம் 10 ஆம் தேதி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சமூகநலம், மருத்துவத்துறை உள்ளிட்ட அரசுப் பணியாளர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் 7000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதேபோல், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆரம்பப் பள்ளிகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் இம்மாதம் 15 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு ஊழியர்களுடன் இணைந்து ஆசிரியர் கூட்டணி அமைப்பும் தொடர் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். புதன்கிழமை பாளையங்கோட்டையில் லூர்துநாதன் சிலை அருகில் நடைபெற்ற மறியலில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ஆர். ராஜேஸ்வரன், குருசந்திரன், பார்த்தசாரதி, ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள் செ. பால்ராஜ், ராஜ்குமார், மணிமேகலை மற்றும் 250 பெண்கள் உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
இப்போராட்டத்தினால் வருவாய்த்துறை மூலம் சான்றுகள் பெற முடியாமல் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தென்காசி, நான்குனேரி, சேரன்மகாதேவி, சங்கரன்கோவில், பாப்பாக்குடி, மானூர் உள்பட மாவட்டம் முழுவதும் 60 க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 4 இடங்களில் நடைபெற்ற மறியலில் 2000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.