பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுவை மாநில முன்னாள் முதல்வர் ராமசாமி காலமானார்: நாராயணசாமி, வைத்திலிங்கம் அஞ்சலி

புதுவை முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி (83),  வாணரப்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் திங்கள்கிழமை காலை காலமானார்.

News image
Updated On :15 மே 2017, 1:35 pm

சுஜித்குமார்

புதுச்சேரி:  புதுவை முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி (83),  வாணரப்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் திங்கள்கிழமை காலை காலமானார்.

கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தினமும் காலையில் எழுந்து நடைபயிற்சி செல்வது வழக்கம். தி்ங்கள்கிழமை காலை அவர் எழுந்திருக்கவில்லை. இந்நிலையில் குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்ற போது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

பின்னர் அவரது உடல் வாணரப்பேட்டை வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் முதல்வர் நாராயணசாமி, பேரவைத் தலைவர்  வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னாள் முதல்வர் ராமசாமி தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தார். அவருக்கு சிறப்பு அழைப்பாளர் பதவி வழங்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது அந்த கட்சியில் அவர் இணைந்தார். அப்போது புதுவை அ.தி.மு.க.வில் முக்கிய பிரமுகராக திகழ்ந்தார்.

கடந்த 1974-ம் ஆண்டு புதுவை சட்டப்பேரவை அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அப்போது எஸ்.ராமசாமி முதல்வராக பதவியேறறார். அவர் பதவி ஏற்று 22-வது நாளில் பட்ஜெட் கூட்டம் நடந்தது. ஆனால், பட்ஜெட் முன்கூட்டியே கசிந்து விட்டது. மேலும் அ.தி.மு.க.வில் பல எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவி விட்டனர். இதனால் பதவி ஏற்ற 22-வது நாளிலேயே ராமசாமி ஆட்சியை இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 

அடுத்து 1977-ல் நடந்த தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. எஸ்.ராமசாமி மீண்டும் முதல்வர் ஆனார். அப்போதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் கட்சி மாறியதால் 15 மாதத்தில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. 

பின்னர் அ.தி.மு.க.வில் இருந்து விலகிய அவர் மக்கள் முன்னணி என்ற கட்சியை தொடங்கினார். காரைக்கால் தெற்கு தொகுதியில் இருந்து 4 முறை அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

எஸ்.ராமசாமியின் சொந்த ஊர் காரைக்கால் ஆகும். புதுவையில் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் திங்கள்கிழமை மாலை காரைக்காலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.