

பணம் ஒரு தனிமனித வாழ்வை மட்டும் தீர்மானிக்கும் சக்தியாக இல்லை ஒரு நாட்டின், ஏன் உலகலாவிய சக்தியாவே அது மாறி இருக்கிறது. அதனால்தான் காசேதான் கடவுளடா என்று சொன்னார்கள் போலும்.
எண்சான் உடம்புக்கு தலையே பிரதானம் என்பது போல் உலக அளவில் எந்த நாடாக இருந்தாலும் தன்னை சக்தி மிகுந்த நாடாக காட்டிக் கொள்ள பணமே பிரதானமாக இருக்கிறது. அத்தகைய பணத்தைத்தான் தனிமனிதன் முதல் சர்வதேச நாடுகள் வரை எங்கே தேடுவேன் உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன் என்று என்.எஸ் கிருஷ்ணன் குரலில் பாடிப்பார்த்துக் கொள்கிறது என்று சொல்ல வேண்டும்.
பணம்தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கிறது என்ற நிலையில் இந்திய பொருளாதாரத்தை சீர் செய்யும் முயற்சியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு முக்கிய அறிவிப்பாக, இனி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவித்த பிரதமர், இனி டிஜிட்டல் பரிவர்த்தனையை அனைவரும் கடைப்பிடிக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நடவடிக்கையால் நாட்டில் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவே பல்வேறு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சாமானியன் முதல் பெரும் நிறுவன முதலாளிகள் வரை அனைவரும் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளானதோடு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரும் பொருளாதார முன்னேற்றமோ கருப்பு பண ஒழிப்பில் வெற்றியோ கண்டு விட்டதாக தெரியவில்லை.
இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான யஸ்வந்த் சின்ஹா தான் எழுதிய கட்டுரையில் நிதியமைச்சராக அருண் ஜேட்லி பொறுப்பேற்று மூன்றாண்டுகளுக்கு பிறகும், தனியார் முதலீடுகள், நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் வளர்ச்சிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பாதிப்புகள் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்படாத அளவுக்கு பெரிய பாதிப்பு எனவும் கட்டுமான தொழில், விவசாயம், ஏற்றுமதி துறை என அனைத்து தொழில் பிரிவுகளும் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த பொருளாதார சீரழிவு என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக சரிந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.
யஷ்வந்த் சின்காவின் இந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும் போது "இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. உலக நாடுகளும் இதை ஏற்றுக்கொண்டு உள்ளன. இதனால் உலக நாடுகளிடையே, இந்தியாவின் மீதான நம்பகத்தன்மையும் அதிகரித்து இருக்கிறது. இதை யாரும் மறந்து விடக்கூடாது" என்றார். இதற்கிடையில், ஆளும் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து சுப்பிரமணியன் சுவாமி, இந்திய பொருளாதாரம் ஒரு விபத்தில் சிக்கியிருப்பதாக எச்சரித்துள்ளார்.
இந்த மாறுபட்ட கருத்துக்கள் ஒரு சாதாரண குடிமகனுக்கு குழப்பதை ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மையாக இருக்கிறது. இதற்கிடையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது உண்மைதான் என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஆய்வு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய பொருளாதாரத்தை நிர்ணயிக்க கூடிய வரிசையில் உள்ள இரு பெரும் நிறுவனங்களின் தலைவர்கள் சமீபத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பேசினர். ஹிந்துஸ்தான் யூனிலீவர் தலைமை நிர்வாகி சஞ்சீவ் மேத்தா கூறும்போது பணமதிப்பீட்டிழப்பினாலும் விவசாயிகள் தற்கொலை கராணமாகவும் முதலீட்டாளர்கள் தங்கள் தயாரிப்புகளை சந்தைப் படுத்துவதில் பல்வேறு பிரச்னைகள் எதிர்கொள்ள நேரிட்டது என்றார். லார்ஸென் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் அனில் நாயக் கூறுகையில், தனியார் நிறுவனங்கள் புதிய திட்டங்களை தொடங்க முடியாத நிலை இருந்தது. ஏனெனில் அவர்களின் இருப்புநிலை அதிகமான கடன் சுமையில் இருந்தன என்று தெரிவித்தார்.
பெருநிறுவனங்களின் பாடே இப்படி என்றால் சாதாரண குடிமகன்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை அனுபவித்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் நாட்டின் வளர்ச்சிக்காக சிரமங்களை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டுள்ள மக்களை நினைத்து பெருமிதம் கொள்வதாகவும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறிய பிரதமர் மோடி பணமதிப்பிழபினால் இன்றளவில் ஏற்பட்ட நாட்டின் வளர்ச்சி குறித்தும் கருப்பு பணம் குறித்தும் தகவல் தெரிவிக்காமல் மெளனமாக இருப்பது ஏன் என்று எதிர்க்கட்சிகளைப் போலவே ஒவ்வொரு குடிமகனும் கேட்கிறான் என்பதை அந்த மகாகணம் பொருந்திய பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய பொருளாதார சிக்கல்கள் குறித்தும், மோடி மற்றும் அருண் ஜேட்லியின் நடவடிக்கைகள் குறித்தும் பல தலைவர்களுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அதனை வெளியில் பேசாமல் இருப்பது அந்த நடவடிக்கையின் தோல்வியையே காட்டுகிறது.
விரைவில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் பா.ஜ.க. பணமதிப்பீட்டிழப்பு விவகாரத்தில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர். வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற முடிந்ததோ இல்லையோ.. சில நடவடிக்கைகளினால் ஏற்பட்ட வெற்றி தோல்வி குறித்து ஆளும் தரப்பில் இருந்து பொது விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதை பிரதமர் உணர்ந்து குறைந்த பட்சம் மனதின் குரல் நிகழ்ச்சியிலேனும் விளக்க வேண்டும் என்றே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டின் பொருளாதார நிலையை அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள வேண்டிய கடமையும் உரிமையும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்கிறது. தனிமனிதனாக ஒருவன் தன் அளவில் அனைத்து நுகர்பொருளுக்கு வரி செலுத்துவதோடு எல்லாவிதமான வரிவிதிப்புகளுக்குள்ளும் அவன் வந்து விட்ட நிலையிலும் விலை ஏற்றம், வேலையின்மை, பொருளாதார நெருக்கடி போன்ற பாதிப்புகள் நாட்டில் இருப்பதை அரசு தரப்பில் ஒப்புக் கொண்டு விளக்க வேண்டும் என்றே அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.