போஆவ் ஆசிய மன்ற மாநாடு 2018: சீன ஹைய்னான் மாநிலத்தில் தொடக்கம்

போஆவ் ஆசிய மன்ற மாநாடு 2018: சீன ஹைய்னான் மாநிலத்தில் இன்று ஏப்ரல் 8 தொடங்கி வரும்  11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
போஆவ் ஆசிய மன்ற மாநாடு 2018: சீன ஹைய்னான் மாநிலத்தில் தொடக்கம்
Updated on
2 min read

போஆவ் ஆசிய மன்ற மாநாடு 2018: சீன ஹைய்னான் மாநிலத்தில் இன்று ஏப்ரல் 8ம் நாள் தொடங்கி வரும்  11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

4 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டின் மிக முக்கியமான கொள்கை உலகமயமாக்கல், சிறப்பான ஆசியா, செழுமையான வளர்ச்சி, புத்தாக்கம், என்பதாகும். இந்த நான்கு முக்கிய அம்சங்கள் குறித்தும் 60க்கும் மேற்பட்ட விவாதங்கள் நடைபெறவுள்ளன. உலகம் முழுவதும் உள்ள தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

போஆவ் மன்ற மாநாடு

கடந்த 2001- ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அமைப்பானது ஆசிய ஒத்துழைப்பை மேம்படுத்தவும், பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், உலக அரங்கில் ஆசிய கண்டத்தின் செல்வாக்கை முன்னேற்றுவதற்கும் ஒரு தளமாக செயல்பட்டு வருகிறது. போஆவ் மன்ற மாநாடு 2002-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை 19 முறை நடத்தப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் "ஆசியா" என்ற ஒற்றைச் சொல் வலியுறுத்தி செயல்பட்டுள்ளது. குறிப்பாக ஆசிய கண்டத்தின், பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு, உலகமயமாக்கலில் ஆசிய அணுகுமுறை ஆகியவற்றை முன்னிறுத்தி கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு நடைபெறும் கூட்டத்தில் ஆசியாவின் வருங்கால வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் உலகளாவிய தொழிலதிபர்களும், கல்வியாளர்களும் கலந்து கொண்டு ஆசிய வளர்ச்சி குறித்து விவாதிக்கின்றனர். 

உலகப் பொருளாதர மீட்பு

சர்வதேச நாடுகள் அனைத்தும் உலகமயமாக்கல் எனும் அடுத்த கட்டத்திற்குள் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், மக்கள் தொகை  மற்றும் பாதுகாப்பு விசயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக சர்வதேச நிதிநெருக்கடி ஏற்பட்டதிலிருந்து உலகப் பொருளாதார மீட்பு மற்றும் வளர்ச்சிக்கு, ஆசியா மிகப் பெரிய பங்காற்ற வேண்டியுள்ளது. 

சமீபகாலமாக ஆசியாவில் வெளிநாட்டு முதலீடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. பெருமளவு மக்கள் தொகை, நடுத்தர வருமானம் கொண்ட வர்க்கத்தினர்  மற்றும் பெரும் நுகர்வு வாய்ப்புகள் ஆசியாவில் நிறைந்திருப்பதால் உலக அளவில் இங்கு முதலீடுகள் அதிகரித்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான சீனாவின் பங்களிப்பு 30 சதவீதத்தை தாண்டியுள்ளது.

ஆசியாவின் வளர்ச்சிக்கு இந்தியா - சீனா பங்களிப்பு

சீனாவும் இந்தியாவும் மிகப் பெரிய நுகர்வுச் சந்தையை கொண்டிருப்பதாலும் இருநாடுகளும் வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பதாலும் ஒட்டு மொத்த ஆசியாவின் வளர்ச்சிக்கு இருநாடுகளின் பங்களிப்பு என்பது மிக முக்கியமாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு சீனா - இந்தியா நட்புறவை பேணுவதில் இரு நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. மேலும் இருநாடுகளும் தங்கள் எல்லைப் பிரச்னைகளை சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்டிவருகின்றன. உலக பொருளாதாரத்தின் சரிபாதி பங்களிப்பை இந்தியாவும், சீனாவும் அளித்து வருகின்றன. 

பொருளாதார அடிப்படையில் இருபெரும் சக்திகளான இந்திய – சீன நாடுகளின் உறவு வலிமைப்படுவது, அந்த இருநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கும் நன்மை பயக்கக் கூடியது. பொருளாதார ஒப்பந்தங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் போதுதான் வளமான வளர்ச்சி சாத்தியமாகும். இது சர்வதேச பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி ஆசிய பிராந்தியத்திற்கும் முக்கியமானது.

சீனா போன்றே இந்தியாவும் மக்கள் தொகை, பெரிய சந்தை, பெரிய உழைப்புத்திறன் கொண்ட நாடு என்பதால், இருநாடுகளும் ஆசிய அளவில் மிகப்பெரிய சக்திகளாக விளங்குகின்றன. எனவே  தங்கள் நட்புறவை பேணுவது இந்நாடுகளுக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. அதன் மூலம் சர்வதேச அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதோடு, ஆசிய கண்டத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருந்து ஆசியாவின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு விசயங்களில் கவனம் செலுத்தவும் முடியும் என நம்பப்படுகிறது. 

சீன - இந்திய உறவுகள் நூற்றாண்டுகள் கடந்து பழமையானதாகவும், ஆன்மிகம், கற்றல், கலை, வர்த்தகம் மற்றும் பரஸ்பர நாகரீகம் மற்றும் வளமையை பங்கிடுதல் ஆகியவற்றிலும் சிறந்து விளங்குகின்றன. இந்தியா மற்றும் சீனாவின் ஒத்துழைப்புடன் கூடிய வளர்ச்சியின் மூலம் நெருக்கமான, அமைதியான மற்றும் வலிமையான ஆசியாவை உருவாக்க முடியும் என்பதால் பரஸ்பரம் மற்றும் நம்பகத்தன்மையை வளர்த்துக் கொள்வதில் இரு அரசுகளும் முனைப்பு காட்டுகின்றன.

ஆசியப் பொருளாதாரத்தின் ஒருமைப்பாடு

இந்நிலையில் இம்மாநாட்டில் துவக்க உரை ஆற்றிய சீன அதிபர் ஜி-ஜின்பிங் தற்போதைய சவால்களை சமாளிக்க மற்றும் சமூக கட்டமைப்பை ஊக்குவிக்க சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிப் பேசினார். ஆசியப் பொருளாதாரத்தின் ஒருமைப்பாடு, புதிதாக வளர்ந்து வரும் நாடுகள், ஆசியாவின் போட்டியாற்றல் ஆகியவை தொடர்பான 3 அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

ஆஸ்திரேலிய அதிபர்  அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன், பிலிப்பைன் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே, மங்கோலிய பிரதமர் குருஸ்சுக் உக்ஹானா, டச்சு பிரதமர் மார்க் ருட்டே, பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அபாசி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெச். ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

போஆவ் ஆசிய மன்றத்தின் 2018ஆம் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த  ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்ரேஸைச் சீன அதிபர் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது எதிர்காலத்தில், சீனா சர்வதேச விவகாரங்களில் மேலும் பெரிய அளவில் பங்காற்றும் என்று குட்ரேஸ் நம்பிக்கை தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com