ரயில்வே உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கு: ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி ஜாமீன்

ரயில்வே உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மனைவி
ரயில்வே உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கு: ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி ஜாமீன்


புதுதில்லி: ரயில்வே உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி உள்ளிட்டோருக்கு தில்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

லாலு பிரசாத், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேயின் ஐஆர்சிடிசிக்குச் சொந்தமான உணவகங்களை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பாட்னா, ராஞ்சி, புவனேசுவரம், குருகிராம் உள்ளிட்ட 12 இடங்களில் சிபிஐ கடந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை நடத்தியது. பின்னர், வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்த சிபிஐ, கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 

அதில், லாலு பிரசாத், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, புரி மற்றும் ராஞ்சி நகரங்களில் ரயில்வே துறையின் ஐஆர்சிடிசிக்குச் சொந்தமான ஹோட்டல்களை நடத்துவதற்கான ஒப்பந்தம், சுஜாதா ஹோட்டல்ஸ் நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை சுஜாதா ஹோட்டல்ஸ் நிர்வாகத்துக்கே வழங்கும் வகையில், அதன் விதிகளில் முறைகேடாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதற்குப் பிரதிபலனாக, பாட்னாவில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை ரூ.1.47 கோடிக்கு டிலைட் மார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு சுஜாதா ஹோட்டல்ஸ் நிர்வாகம் கடந்த 2005-ஆம் ஆண்டு விற்பனை செய்தது. லாலு பிரசாதின் நெருங்கிய நண்பரும், முன்னாள் அமைச்சருமான பிரேம் சந்த் குப்தாவின் மனைவி சரளா குப்தா, டிலைட் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் இயக்குநர் ஆவார். 

பின்னர் கடந்த 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த நிலம், லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டது என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி உள்ளிட்ட அனைவரும், வரும் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 31) நேரில் ஆஜராக வேண்டும் என்று தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜரான நிலையில், லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி முன்ஜாமீன் வழங்கியது. மேலும் தேஜஸ்விக்கு ரூ.1 லட்சம் ரூபாய் சொந்த ஜாமீன் வழங்கி தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com