
லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூர் நகரில் உள்ள தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் குழந்தைகள் வைத்துக்கொண்டு விளையாடும் கள்ளநோட்டுகள் கலந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம், புலந்த்ஷஹர் மாவட்டத்திற்குட்பட்ட கான்பூர் நகருக்கு அருகாமையில் உள்ள கிட்வாய்நகர் மார்பிள் மார்க்கெட் பகுதியில் ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்றுள்ளது. இந்த மையத்தில் பணம் எடுத்த சிலருக்கு குழந்தைகள் விளையாடும் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கலந்து வந்துள்ளது.
குறிப்பாக, 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்த ராமேந்திரா அவாஸ்தி என்பவருக்கு குழந்தைகள் விளையாடும் ஒரு 500 ரூபாய் கள்ளநோட்டும், 10 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்த சச்சின் என்பவருக்கு ஒரு 500 ரூபாய் கள்ளநோட்டும் சேர்ந்து வந்துள்ளது. இதுகுறித்து எ.டி.எம். மைய காவலர்களிடம் புகார் தெரிவித்துவிட்டு அங்குள்ள புகார் புத்தகத்தில் புகாரை பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ஏ.டி.எம் மையத்தை மூடிவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் ஒப்பந்தத்தை பெற்றுள்ள நிறுவனத்திடம் விசாரணை நடத்தி, இந்த குற்றத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சம்மந்தப்பட்ட எ.டி.எம் மையத்தில் இருந்து பெறப்பட்ட கள்ளநோட்டுகள் நாளை திங்கள்கிழமை மாற்றித்தரப்படும் என்று ஆக்சிஸ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.