காவிரி பிரச்சனையில் மீண்டும் பேச்சுவார்த்தையா? குமாரசாமிக்கு ராமதாஸ் கண்டனம் 

காவிரி பிரச்சனையை தமிழக, கர்நாடக அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறிய கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்கவுள்ள குமாரசாமியின் கண்டனத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
காவிரி பிரச்சனையில் மீண்டும் பேச்சுவார்த்தையா? குமாரசாமிக்கு ராமதாஸ் கண்டனம் 
Published on
Updated on
2 min read

கர்நாடகாவின் புதிய முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி வரும் புதன்கிழமை பதிவியேற்கவுள்ளார். இந்நிலையில், அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் காவிரி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "காவிரி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். இதற்கு தமிழகம் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார். 

காவிரி விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அது அமைக்கப்பட்டாலும் அரைகுறையாக தான் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கர்நாடகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமி காவிரி விவகாரத்தில் தீர்வு காண இருமாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

"தமிழகமும் கர்நாடகமும் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் தான் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று அம்மாநில புதிய முதல்வராக பதவி ஏற்கவுள்ள குமாரசாமி கூறியுள்ள யோசனை மிகவும் ஆபத்தானது. இது காவிரியில் தமிழகத்திற்கு உள்ள கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் தட்டிப்பறிக்கும் செயலாகும்.

இதில், தீர்வு காண்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் உள்ள அணைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்த அமைப்புக்கு இல்லாத நிலையில் இது பயனற்ற அமைப்பு என்பது தான் பாமக வின் நிலைப்பாடு. அதே நேரத்தில் இயல்பான மழைக்காலங்களில் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், வறட்சிக்காலங்களில் இடர்பாட்டுக்கால நீர்ப்பகிர்வு முறைப்படியும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீரை திறந்து விடுவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

இந்த ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்தினால் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டுவிடும். எனவே, காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கர்நாடக புதிய முதல்வர் குமாரசாமி நினைத்தால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்தும் என்று அறிவிக்க வேண்டும்.

ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுவது உச்சநீதிமன்றம் போன்ற சட்ட அமைப்புகளையும், தமிழக மக்களையும் முட்டாள்களாக்கும் செயலாகும். காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விஷயத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தமிழகத்திற்கு முழுமையான திருப்தி அளிக்கவில்லை என்றாலும் கூட இன்றைய நிலையை எட்ட தமிழகம் பட்ட பாடுகளும், நடத்திய சட்டப் போராட்டங்களும் ஏராளமானவை.

அண்ணா காலத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி காலம் வரை காவிரிப் பிரச்சினை தொடர்பாக இருமாநிலங்களுக்கும் இடையே நூற்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளால் எந்த பயனும் ஏற்படவில்லை. இதற்கு காரணம் கர்நாடகத்தின் பிடிவாதமும், சட்டத்தை மதிக்காத போக்கும் தான்.

காவிரிப் பிரச்சினை குறித்த கடந்த கால உண்மைகள் இவ்வாறு இருக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தப்பிரச்சினையின் ஆழம் புரியாமல் கர்நாடக அரசுடன் பேசி காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று கூறிவருகின்றனர். 

இந்த யோசனைகள் காவிரிப் பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலாக்கி விடும். எனவே, காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்த காலத்திலும் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. மாறாக காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் ஒப்படைக்க வைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com