தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை... சொல்ல இயலாத துயரத்தில் பொதுமக்கள்! 

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களின் விலை, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மத்திய அரசால் உயர்த்தப்பட்டு
தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை... சொல்ல இயலாத துயரத்தில் பொதுமக்கள்! 


பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களின் விலை, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மத்திய அரசால் உயர்த்தப்பட்டு அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் திணிக்கப்பட்டுள்ளது. இதனால் பால், காய்கறி என அன்றாட தேவைக்கான பொருள்கள் முதல் அனைத்து பொருள்களின் விலையேற்றத்துக்கும் வழி வகுத்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் அது வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் 3 காசுகள், 5 காசுகள் என தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் விலை சென்னையில் திங்கள்கிழமை மட்டும் ஒரே நாளில் 32 காசுகள் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ.81.92 -க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், திங்கள்கிழமை ரூ. 82.24 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. அதன்படி தில்லியில் ரூ. 79.31, மும்பையில் ரூ. 86.72, கொல்கத்தாவில் ரூ. 82.33, சென்னையில் ரூ. 82.41-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலை தில்லியில் ரூ. 71.34, மும்பையில் ரூ.75.74, கொல்கத்தாவில் ரூ.74, சென்னையில் 75.39 ரூபாயாகவும் இருந்தது. டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ளதால், விலைவாசி உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.71.37 தொட்டு வரலாற்றில் இல்லாத சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது காரணமாகவும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பதாகவும், சர்வதேச அளவில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தக போர் விரைவில் தீர்க்கப்படாவிடில், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றிற்கு ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தில்லியில் பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு ரூ.79.99, மும்பையில் ரூ. 87.39 ஆகவும், தில்லியில் டீசல் லிட்டருக்கு ரூ.72.07, மும்பையில் லிட்டருக்கு ரூ.76.51 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் சொல்ல இயலாத துயரத்துக்கும், கடும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com