அமைச்சர் தங்கமணி சாதியை சொல்லி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்: ஈ.ஆர். ஈஸ்வரன் கண்டனம்

பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கண்டித்தும், போராட்டங்களை நடத்தியும் அரசாங்கம் அதை தடுக்க முன்வரவில்லை. அப்படிப்பட்ட போராட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள்
அமைச்சர் தங்கமணி சாதியை சொல்லி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்: ஈ.ஆர். ஈஸ்வரன் கண்டனம்


நாமக்கல் மாவட்டத்தில் வன்னிய சமுதாயமும், அருந்ததிய சமுதாயமும் தான் ஆற்று மணலை திருடுவதை போல அமைச்சர் தங்கமணி சாதியை சொல்லி கொச்சைப்படுத்தி பேசியிருப்பதும், சாதியை சொல்லி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பது கண்டனத்திற்குரியது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல்லில் காவிரி ஆற்றங்கரைகளில் அளவுக்கு அதிகமான மணல் தோண்டப்பட்டு லாரிகளில் கர்நாடகாவுக்கும், கேரளாவுக்கும் தொடர்ந்து எடுத்து செல்லப்படுகிறது என்பது அந்தப்பகுதி பொதுமக்கள் அறிந்த விஷயம். 

பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கண்டித்தும், போராட்டங்களை நடத்தியும் அரசாங்கம் அதை தடுக்க முன்வரவில்லை. அப்படிப்பட்ட போராட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் தலைமை தாங்காததால் வெற்றி பெற முடியவில்லை. 

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் AKP.சின்ராஜ் வெற்றிபெற்று மக்கள் பணிகளில் களமிறங்கி இருக்கிறார். ஆற்று மணல் பெரிய லாரிகளில் ஒவ்வொரு லாரிகளிலும் 10 யூனிட் அளவுக்கு எடுத்து செல்லப்படுகிறது என்ற செய்தியை பொதுமக்கள் மூலமாக அறிந்து களத்திற்கு நேரடியாக சென்று அந்த லாரிகளை பிடித்து காவல்துறையிடம் சட்டப்படி ஒப்படைத்து வழக்கு போட வைத்திருக்கிறார். அந்தப்பகுதி மக்கள் தங்களோடு சேர்ந்து மணல் திருட்டை தடுக்க ஒரு மக்கள் பிரதிநிதி உருவாகியிருப்பதை மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள். தொடர்ந்து புகார்களை நாமக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கொடுத்து கொண்டிருக்கிறார்கள். 

பொதுமக்களின் புகார்களின் அடிப்படையில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் அவர்கள் மணல் திருட்டை தடுக்கின்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார். மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுவதை நாடாளுமன்ற உறுப்பினர் தடுக்கவும் இல்லை, பிடிக்கவும் இல்லை. ஏழை எளிய மக்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கிறார்கள் என்பது எங்களுக்கும் தெரியும். 

சட்டவிரோதமாக நாமக்கல் மாவட்டத்தில் மணல் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் முன்னால் மேடையில் சவால்விட்ட அமைச்சர் தங்கமணி தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் திருட்டு மணல் பிடிக்கப்படுவதை பார்த்து குழம்பிப்போய் இருக்கிறார். இப்போது அதற்கு சாதி சாயம் பூச ஆரம்பித்திருக்கிறார்.

நாமக்கல் மாவட்டத்தில் வன்னியர் சமுதாயமும், அருந்ததியர் சமுதாயமும் வாழ்கின்ற கிராமங்களில் அந்த சமுதாய மக்களால் தான் ஆற்றில் மணல் அள்ளப்படுவது போலவும் அதனால்தான் நாடாளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் மணல் அள்ளுவதை தடுக்க பார்க்கிறார் என்று AKP.சின்ராஜ் மீது சாதி சாயம் பூச பார்க்கிறார். இதன் மூலம் சாதி கலவரத்தை ஏற்படுத்த ஒரு அமைச்சரே முயற்சிக்கிறார். உங்கள் கனவு பலிக்காது என்பதை மட்டும் உறுதியாக சொல்லி கொள்கிறோம். 

அருந்ததிய சமுதாய மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியின் காரணமாக விஷ விதைகளை விதைக்க பார்க்கிறார். நாடாளுமன்ற தேர்தல் நேரத்திலேயே AKP.சின்ராஜ் அவர்களை சாதி கட்சி வேட்பாளர் என்று தேர்தல் பிரச்சாரத்தில் தொகுதி முழுவதும் பேசி கலவரங்களை ஏற்படுத்த அப்போதே முயற்சித்தவர்கள் தான் இவர்கள். அமைச்சரின் இந்த கருத்துகள் மூலமாக தேர்தல் தோல்வியை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்பதை மட்டும் புரிந்துக்கொள்ள முடிகிறது. 

மணலோடு பிடிப்பட்ட லாரிகளில் 3 யூனிட் அனுமதி சீட்டை வைத்துக்கொண்டு 10 யூனிட் கடத்தப்பட்டதை அமைச்சர் இல்லை என்று சொல்கிறாரா?. பொய்யான அனுமதி சீட்டோடும் மணல் லாரிகள் பிடிப்பட்டிருப்பதை இல்லை என்கிறாரா?. சாதி சாயம் பூசுகின்ற அமைச்சர் அந்த லாரி முதலாளிகள் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடித்துவிட்டு பேசுகிறாரா?. காவல் ஆய்வாளர் உண்மையை விசாரிக்க தயங்கிய போது தான் நாடாளுமன்ற உறுப்பினர் பொதுமக்களோடு சேர்ந்து காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

மணல் கொள்ளையை தடுக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் அவர்களின் முயற்சியை பாராட்டாமல் குற்றவாளிகளை பாதுகாக்கின்ற முயற்சியில் அமைச்சர் இறங்கியிருப்பது வேதனையளிக்கிறது. அதையும் தாண்டி நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியிருப்பது அதிகாரம் இருக்கிறது என்ற ஆணவப்போக்கை காட்டியிருக்கிறது. 

மோகனூர் ஆற்றங்கரைகளில் மணல் எடுத்ததை வாகன ஓட்டுநரே ஒப்புக்கொண்டு இருக்கும் போது கரூர் மாவட்டம், திருச்சி மாவட்டம் என்று அமைச்சர் தட்டிக்கழிக்க நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்திற்கு மட்டும் இவர் அமைச்சர் அல்ல. தமிழகம் முழுமைக்கும் அமைச்சர் என்பதை மறந்து விடக்கூடாது. 

தமிழகம் முழுவதும் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் பொதுமக்களோடு கைகோர்த்தால் மணல் கொள்ளையை தடுக்க முடியும். தண்ணீர் பஞ்சத்தை போக்க முடியும். அமைச்சர் அதற்கு தயாராக வேண்டுமென்று என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com