அரசியல் லாபத்துக்காக என்ஐஏவை பயன்படுத்துவதா? மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் 

தேசிய புலனாய்வு முகமையை (என்.ஐ.ஏ.) கட்சி அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு பயன்படுத்துவதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும்
அரசியல் லாபத்துக்காக என்ஐஏவை பயன்படுத்துவதா? மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் 

சென்னை: தேசிய புலனாய்வு முகமையை (என்.ஐ.ஏ.) கட்சி அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு பயன்படுத்துவதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது: வருமான வரித்துறை, அமலாக்கத்துறை. சிபிஐ போன்ற சதந்திரமாகச் செயல்பட வேண்டிய அமைப்புகளை "அரசியல் மயமாக்கியது" போல், அவற்றின் தொடர்ச்சியாக, "பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள" அமைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு முகமையை, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தனது கட்சிஅரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதற்கு, திமுக  சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழகத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு என்று தனியாக ஒரு பிரிவு டிஜிபி அலுவலகத்தில் இருக்கிறது. அதற்கு டிஐஜி தலைமையில் ஒரு தனி அதிகாரியும் இருக்கிறார். துணை பிரிவுகளும் இருக்கின்றன. "க்யூ பிராஞ்ச்" என்று சொல்லப்படுகின்ற அந்தப் பிரிவு மாநில அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது மட்டுமின்றி - மாண்புமிகு முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. 

ஆனால் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் துறையையும் மீறி- தேசியப் புலனாய்வு முகமையை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து- இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் அபாயகரமான போக்கை மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். பயங்கரவாதம் எந்த மதத்தின் நெறிகளுக்கும் ஏற்புடையதல்ல. எந்த மதமும் அதை ஆதரிக்கப் போவதுமில்லை. 

சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து மதத்தினரிடமும் அத்தகைய உயர்ந்த ஒருமைப்பாட்டு உணர்வும், சிறப்பான நாட்டுப்பற்றும் தழைத்தோங்கி இருக்கிறது என்பதை மத்தியில் உள்ள பாஜக அரசு புரிந்து கொண்டு-அனைத்து மதத்தினரும் நாட்டின் மீது கொண்டுள்ள அந்த மாறாப்பற்றுதான் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மாபெரும் வலிமை சேர்த்துக் கொண்டிருக்கிறது என்பதை மத்தியில் உள்ள பாஜக அரசு முதலில் உணர வேண்டும். 

தமிழகத்தில் பாஜக எப்படியாவது காலூன்றி அரசியல் செய்ய விரும்பினால்- மக்களின் மேலான ஆதரவைப் பெறுவதற்கு நேர்மையான ஜனநாயக வழிகள் பல திறந்தே இருக்கின்றன. அதை தவிர்த்து, சிறுபான்மை சமுதாயத்தினரை ஒட்டுமொத்தமாக பயங்கரவாதிகளாகச் சித்திரித்து, அதன்மூலம் பாஜகவை விதைக்கலாம் என்ற நோக்கில், தமிழகத்தில் தேசியப் புலனாய்வு முகமையை பயன்படுத்துவதும் - மாநில அரசுக்கே தெரியாமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் - ஒரு மத்திய அரசுக்கு எவ்விதத்திலும் அழகல்ல. 

தமிழகத்தில் உள்ள அதிமுக அரசும் இந்த அதிகார துஷ்பிரயோகத்தைக் கண்டு கொள்ளாமல்,எவ்வித முனுமுனுப்பும் இன்றி, அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பொறுப்புள்ள, மாநில அரசுக்குரிய அடிப்படை இலக்கணமும் அல்ல! பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியில் நின்று ஆதரவளித்துக் குரல் கொடுக்கும் போது, அந்த ஒற்றுமையைத் தவறாக எண்ணி, தனது அரசியல் லாபத்திற்காக பா.ஜ.க. பயன்படுத்திட எத்தனிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

 ஆகவே அதிமுக அரசு இது குறித்து மத்திய அரசுக்கு உரிய முறையில் தீவிர அழுத்தம் கொடுத்து - தேசியப் புலனாய்வு முகமை தமிழகத்தில் அரசியல் லாபத்தை மனதில் வைத்து, தலையிடுவதற்கும் - ஏதுமறியாத அப்பாவி இஸ்லாமிய மக்களை துன்புறுத்துவதற்கும், கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில், தேசியப் புலனாய்வு முகமை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுவது தொடர்ந்தால், பாராளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் உரிய வகையில் கடுமையான முறையில், ஜனநாயக வழிகளில், எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று அறிவித்திட விரும்புகிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com