சென்னையிலிருந்து அனுமதியின்றி காஞ்சிபுரம் வந்தால் வழக்கு: எஸ்.பி.

சென்னையிலிருந்து அனுமதியின்றி காஞ்சிபுரம் வந்தால் வழக்கு: எஸ்.பி.

சென்னையிலிருந்து இ. பாஸ் அனுமதியில்லாமல் காஞ்சிபுரம் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
Published on

காஞ்சிபுரம் : சென்னையிலிருந்து இ. பாஸ் அனுமதியில்லாமல் காஞ்சிபுரம் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா. சாமுண்டீஸ்வரி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

"காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான 5 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாகவே சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வர வேண்டும். இ. பாஸ் அனுமதியில்லாமல் சென்னையிலிருந்து யாரேனும் காஞ்சிபுரம் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

இதற்கென 5 சோதனைச் சாவடிகளிலும் ஒரு டி.எஸ்.பி. தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்மாதம் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் நகரில் தேவையில்லாமல் வெளியில் வருவோர்கள் மற்றும் வாகனங்களில் சுற்றித் திரிவோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். எனவே யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம்.

காவல்துறையும், நகராட்சியும் இணைந்து காஞ்சிபுரம் நகரில் முகக்கவசம் அணியாமல் வருவோரைக் கண்டறிந்து ரூ. 100 அபராதம் விதிக்கப்படுகிறது. இதன் மூலமாக மட்டும் இதுவரை ரூ.3லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.ரூ.100 அபராதம் வசூலிக்கும் போது 3 முகக்கவசங்களையும் இலவசமாக வழங்கி வருகிறோம்.எனவே எப்போது வெளியில் வந்தாலும் முகக் கவசம் இல்லாமல் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமுடக்க காலமாக மீண்டும்  அறிவிக்கப்பட்ட இம்மாதம் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பிற மாவட்டத்தைச் சேர்ந்த யாரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் மது வாங்க வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென மதுக்கடைகளில் கூடுதலாக காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்" என்றார் எஸ்.பி. பா.சாமுண்டீஸ்வரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com