கரோனா பாதித்து இறந்த முதியவர் சடலத்தை புதைக்க மக்கள் எதிர்ப்பு

ராமநாதபுரத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படும் முதியவர் சடலத்தை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் புதன்கிழமை அதிகாலை பரபரப்பு ஏற்பட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படும் முதியவர் சடலத்தை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் புதன்கிழமை அதிகாலை பரபரப்பு ஏற்பட்டது. பல மணிநேர சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பின் முதியவர் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி 158 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் முதுகுளத்தூர் பகுதி முதியவர் மரணம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு கீழக்கரையைச் சேர்ந்த 2 மூதாட்டிகள் கரோனா உயிரிழப்பு இன்னும் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த 83 வயது முதியவர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

முதியவருக்கு கரோனா பரிசோதனை நடந்த நிலையில், அவருக்கு தீநுண்மி இருப்பது உறுதியானது. தீநுண்மி உறுதியான நிலையில் அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் அவர் உயிரிழந்தார்.

முதியவர் சடலம் பாதுகாப்பான முறையில் பெட்டிக்குள் வைக்கப்பட்டு சடலம் ராமநாதபுரம் நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதியவர் குடும்பத்தினர் சிலரும் சடலத்துடன் சிவகங்கையிலிருந்து ராமநாதபுரத்துக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வந்தனர். ராமநாதபுரம் அல்லிகண்மாய் பகுதியில் உள்ள சுடுகாட்டில் முதியவர் சடலத்தை அடக்கம்
செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதியினர் திடீரென எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பொதுமக்கள் எதிர்ப்பால் முதியவர் சடலம் அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த பஜார் காவல் நிலைய காவலர்கள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடலைப் புதைப்பதால் கரோனா பரவல் இருக்காது என சுகாதாரப் பிரிவினர் எடுத்துக்கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து புதன்கிழமை அதிகாலையில் முதியவர் சடலம் அப்பகுதியில் புதைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

முரண்பாடால் சர்ச்சை: ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 70 பேர் கரோனா தீநுண்மி பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 18 பேர் புதிதாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிகிச்சை பெறுவோர், இறந்தோர் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் தெளிவாக விளக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தினமும் முன்னுக்குப் பின் முரணாக
வெளியிடப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தாத நிலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தரப்பில் கேட்டபோது, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளே கரோனா பாதிப்பு, இறப்பு குறித்து அறிவிக்கமுடியும் என்று கூறப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com