பறவைக் காய்ச்சல்: நாமக்கல் கோழிப் பண்ணைகளில் மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பால், நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய் பரவல் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


நாமக்கல்: கேரளா, ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பால், நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய் பரவல் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் முட்டை கேந்திரமாக விளங்குவது நாமக்கல். இம்மாநிலங்களுக்கு உள்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமை அலுவலகமும் இங்கு தான் உள்ளது. நாமக்கல் மண்டலத்திற்கு உள்பட்ட 1,100 கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் சுமார் 5 கோடி கோழிகள் மூலம் தினசரி 3.50 முதல் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும், சத்துணவு, அங்கன்வாடி மையங்களுக்கும் லட்சக்கணக்கில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இங்குள்ள முட்டை கோழிகள் குஞ்சு விடுவதில் இருந்து 35 நாள்களில் முட்டை இட தொடங்கும். அதற்கேற்ப தீவனங்களை இடுவது அவசியமாகும். மேலும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப அந்த கோழிகளை பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவசியம். தற்போது குளிர்காலமாக இருப்பதால் முட்டை விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. பண்ணைகளில் ஒரு முட்டை ரூ.5.10–க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முட்டை உற்பத்தி செய்ய ரூ.4 செலவாகும். கரோனா தொற்று பரவலால் சரிவடைந்திருந்த கோழிப் பண்ணை தொழில் மூன்று மாதங்களுக்கு பின் தற்போது தான் மீண்டுள்ளது. இந்த சூழலில் கேரளா, ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காக்கை, வாத்து, மீன்கொத்தி பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது அண்மையில் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது. உயிரிழந்த பறவைகளையும், அந்த பறவைகள் வசித்த பகுதிகளில் உள்ள இதர பறவைகளையும் அழிக்கும் பணி அந்தந்த மாநில அரசுகளால் முடுக்கி விடப்பட்டுள்ளது. கேரளாவில் வாத்து மற்றும் கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
கேரளா மற்றும் பறவைக் காய்ச்சல் பாதிப்புள்ள மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களில் நோய்த் தடுப்பு மருந்து தெளிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 26 இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறை, கால்நடைத் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். லாரிகள் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. பறவைக்காய்ச்சல் கோழிகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பரவலாம் என சுகாதாரத் துறை செயலர் ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்திற்கு உள்பட்ட கோழிப் பண்ணைகளில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பண்ணைகளுக்கு வரும் வாகனங்களில் முழுமையாக ஸ்பிரே மூலம் மருந்து தெளிக்கப்படுகிறது.

அது மட்டுமின்றி அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கை, கால்களை சுத்தம் செய்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கோழிகள் அடைபட்டுள்ள கூண்டுகளிலும் கிருமி தொற்று ஏற்படாத வண்ணம் நோய்த் தடுப்பு மருந்து தினசரி தெளிக்கப்பட்டு வருகிறது.
இறந்த கோழிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்...
நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மருத்துவர் வி.பி.பொன்னுவேல் கூறியதாவது; எங்களுடைய இயக்குநரகத்தில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையில் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையாளர்களுக்கு பறவைக் காய்ச்சல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம். குறிப்பாக பண்ணைகளில் உள்ள கூண்டுகளிலும், உள்ளே வரும் வாகனங்களில் நோய்த் தடுப்பு மருந்து தெளிக்கவும், பணியாளர்களை ஒரு இடத்தில் இருந்து மாற்று இடத்திற்கு அனுப்பக் கூடாது, அவ்வாறு இருந்தபோதிலும் முழுமையாக அவர்களை தூய்மைப்படுத்த செய்ய வேண்டும். கை, கால்களை சுத்தமாக கழுவிய பிறகே பணியாளர்களை பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும்.
மேலும் கோழிகள் இறக்க நேரிட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கோ அல்லது கோழியின நோய் ஆராய்ச்சி நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் இறந்த கோழியின் உடற்கூறுகளை ஆய்வுக்காக மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி நோயின் தன்மை பற்றி கண்டறிய முடியும். பறவைக் காய்ச்சல் பாதிப்பு நாமக்கல் கோழிப் பண்ணைகளுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. பொதுமக்களும், கோழிப் பண்ணையாளர்களும் அச்சப்பட தேவையில்லை. கிருமி நாசினி மருந்து தெளித்து நோய் தடுப்பு பணிகளை பண்ணையாளர்கள் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...