சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த சாத்தங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி சுஷில் ஹரி பள்ளி உள்ளது. அப்பள்ளியில் படித்து வந்த முன்னாள் மாணவிகளுக்கு சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா (72 )மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணையில் சிவசங்கர் பாபா மீதான புகார் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு கடந்த 13ஆம் தேதி டிஜிபி திரிபாதி சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். இவ்வழக்கின் விசாரணை அதிகாரிகளாக சிபிசிஐடி செங்கல்பட்டு டிஎஸ்பி குணவர்மன், ஆய்வாளர் ஜெய்சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையில் உடல் நலக்குறைவால் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றபோது சிவசங்கர் பாபா தலைமறைவாகி விட்டார் .

இதையடுத்து அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல இயலாத நிலையில் அவரது பாஸ்போர்ட்டை முடக்க அதற்குரிய நடவடிக்கையில் சிபிசிஐடி அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் சிவசங்கர் பாபா தில்லி சித்தரஞ்சன் பார்க் பகுதியில் ஒரு வீட்டில் பெண் உதவியாளருடன் தங்கியிருப்பதாக தெரியவந்ததை அடுத்து டெல்லி காவல்துறையினர் உதவியுடன் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை புதன்கிழமை கைது செய்து அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அவர் தென் கிழக்கு தில்லி சாகேத் நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பெறுவதற்காக ஆஜர் செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை விமானம் மூலம் புதன்கிழமை இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். வியாழக்கிழமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் கேளம்பாக்கம் சாத்தங் குப்பம் பகுதியில் உள்ள அவரது பள்ளிக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து மாலை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணை நடத்திய நீதிமன்றம் நீதிபதி அம்பிகா வருகின்ற ஜூலை 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து செங்கல்பட்டு சிறைக்கு அழைத்துச் சென்ற சிவசங்கர் பாபாவை சிறைத்துறை அதிகாரிகள் அனுமதிக்காமல் மீண்டும் செங்கல்பட்டு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே அனுமதிப்பதாக கூறியதை அடுத்து மீண்டும் சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி அறையில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை உடல்நலக்குறைவால் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நிலையில் மோசமான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com