‘திரிணமூலுக்கு பிரசாரம் செய்வதை சரத் பவார், தேஜஸ்வி தவிர்க்க வேண்டும்‘: காங்கிரஸ்
By ANI | Published On : 17th March 2021 03:40 PM | Last Updated : 17th March 2021 03:40 PM | அ+அ அ- |

காங்கிரஸ்
மேற்குவங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்வதை சரத் பவார் மற்றும் தேஜஸ்வி யாதவ் தவிர்க்க வேண்டும் என மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், திரிணமூல், பாஜக, காங்கிரஸ் - இடதுசாரிகள் இடையே மும்முனை போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ், பிகாரில் ஆர்ஜேடியும் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளனர்.
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், திரிணமூல் கட்சிக்காக நட்சித்திர பேச்சாளராக நீங்கள் பிரசாரம் செய்தால், அது மேற்குவங்க மக்களிடையே குழப்பத்தை உருவாக்கும் என்பதால் திரிணமூலுக்கு பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.