திருச்சியில் 7 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 7 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.


திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 7 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
திருச்சி மாநகராட்சி, மணப்பாறை, துறையூர், துவாக்குடி, லால்குடி, முசிறி ஆகிய 5 நகராட்சிகள், பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர், கூத்தப்பார், மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளூர், எஸ். கண்ணனூர், சிறுகமணி, தா.பேட்டை, தொட்டியம், உப்பிலியபுரம் ஆகிய 14 பேரூராட்சிகளில் மொத்தம் 401 வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், துறையூர் நகராட்சி, தா.பேட்டை, தொட்டியம் நகராட்சிகளில் தலா ஒரு வார்டுகளுக்கு போட்டியின்றித் தேர்வு நடைபெற்றது. மீதமுள்ள 398 வார்டுகளுக்கு கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு இயந்திரங்கள் 7 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
செவ்வாயக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 65 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறுகிறது.

துவாக்குடி நகராட்சி, கூத்தப்பார், பொன்னம்பட்டி, சிறுகமணி பேரூராட்சிகளுக்கு காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியிலும், துறையூர் நகராட்சி, பாலகிருஷ்ணம்பட்டி, உப்பிலியபுரம் பேரூராட்சிகளுக்கு கரட்டாம்பட்டி ஜெயராம் பொறியியல் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மணப்பாறை நகராட்சிக்கு மணப்பாறை குறிஞ்சி பொறியியல் கல்லூரி, லால்குடி நகராட்சி, கல்லக்குடி, புள்ளம்பாடி, பூவாளூர் பேரூராட்சிகளுக்கு லால்குடி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முசிறி நகராட்சி, காட்டுப்புத்தூர், தா.பேட்டை, தொட்டியம், மேட்டுப்பாளையம் பேரூராட்சிகளுக்கு முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூர், ச. கண்ணனூர் பேரூராட்சிகளுக்கு கொணலை சூர்யா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மாநகராட்சியில் தலா 8 மேஜைகளில் 2 சுற்றுகளாக வாக்கு எண்ணப்படுகிறது. நகராட்சிகளில் தலா 4 மேஜைகள், பேரூராட்சிகளில் தலா ஒரு மேஜை அமைக்கப்பட்டு வாக்கு எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆட்சியர் சு.சிவராசு, காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் உள்ளிட்டோர் மேற்பார்வையில் உள்ளனர். முதலில் தபால் வாக்குகள் பெட்டி திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...