சீர்காழி: சீர்காழி நகர்மன்றத் தலைவர் மறைமுக தேர்தலில் தலைவர் பதவியை பெற 13 நகர்மன்ற உறுப்பினர்கள் தேவையான நிலையில் தனிப் பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறாததால் சீர்காழி நகர்மன்றத்தை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
சீர்காழி நகராட்சி 1.10.1972-ம் ஆண்டு 3-ஆம் நிலை நகராட்சியாக அமைக்கப்பெற்றது. பின்னர் 1979-ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சீர்காழி நகரின் மக்கள்தொகை 34,880 ஆகும். இதில் ஆண்கள் 17,215 மற்றும் பெண்கள் 17,663 பேர் உள்ளனர்.
சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்மன்றத் தேர்தலில் சீர்காழி நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டதில் திமுகவை சேர்ந்த 11 பேர், அதிமுகவை சேர்ந்த 3 பேர், பாமகவை சேர்ந்த 2 பேர், தேமுதிக, மதிமுகவில் தலா ஒருவர் மற்றும் சுயேச்சைகள் 6 பேர் வெற்றிபெற்றுள்ளனர். வரும் மார்ச் 4-ம் தேதி சீர்காழி நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனிடையே நகர்மன்றத் தலைவர் பதவியை பெற 13 உறுப்பினர்கள் தேவையான நிலையில் தனிப் பெரும்பான்மையில்லாத திமுக மேலும் தேவையான இரண்டு சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவை பெற்று சீர்காழி நகர்மன்றத் தலைவர் பதவியை பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனிடையே திமுக கூட்டணி கட்சியான மதிமுகவை சேர்ந்த முழுமதி வெற்றிபெற்றுள்ளார்.
இவர் மதிமுக மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர் மார்கோனி தாயார் ஆவார். திமுக தலைமையிடம் கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு சீர்காழி நகர்மன்றத் தலைவர் பதவியை கேட்டு பெற மதிமுக தரப்பில் முயற்சி நடைபெறுவதாக தெரிகிறது. அவ்வாறு சீர்காழி நகர்மன்றத் தலைவர் பதவி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டால் திமுகவின் 11 உறுப்பினர்கள் மற்றும் தேவையான சுயேச்சைகளின் ஆதரவை பெற்று மதிமுக நகர்மன்றத் தலைவர் பதவியை பெற்றிட முனைப்பு காட்டிவருகின்றனர்.
இவ்வாறு சீர்காழி நகர்மன்றத் தலைவர் பதவிக்கு தேவையான தனிப் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காததால் யார் சீர்காழி நகராட்சியை கைப்பற்ற உள்ளார்கள் என எதிர்பார்ப்பு சீர்காழி மக்களிடம் மேலோங்கியுள்ளது.
1972-ல் சீர்காழி நகராட்சி அமைக்கப்பட்ட பின்னர் 1985-ம் ஆண்டில் திமுக சார்பில் சம்பத் நகர்மன்றத் தலைவராக பதவி வகித்தார். பின்னர் 1990 முதல் 1995 வரை நகர்மன்றம் இடம்பெறவில்லை. 1996-2000-ஆம் ஆண்டு வரை திமுகவை சேர்ந்த அருண்சிங் நகர்மன்ற தலைவராக பதவிவகித்தார். 2001-2006 வரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கணிவண்ணன், 2006-2011 வரை திமுகவை சேர்ந்த பொன்முடி, 2011-2016 வரை திமுகவை சேர்ந்த இறைஎழில் (தற்போது அதிமுகவில் உள்ளார்) நகர்மன்றத் தலைவராக பதவிவகித்தனர். தற்போது 6 வருடங்களுக்கு பிறகு சீர்காழி நகராட்சி தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் யார் சீர்காழி நகராட்சியை கைப்பற்றப்போகிறார்கள் என ஆவல் மக்களிடையே கூடியுள்ளது.