
திருவள்ளூர்: மாணவ, மாணவிகள் கணிதம் மற்றும் அறிவியலில் கல்வித்திறனை வளர்க்கும் நோக்கத்தில் பூண்டி ஒன்றியத்தில் உள்ள 16 அரசு பள்ளிகளுக்கு தனியார் தொண்டு நிறுவன பங்களிப்புடன் தொழில்நுட்ப உபகரணங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கினார்.
திருவள்ளூரில் செயல்பட்டு வரும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம், குழந்தைகள் கல்விக்கான சில்ரன் பீலிவ் நிறுவனம் சார்பில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் நோக்கத்தில் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கவும் முன்வந்தது. அதன் அடிப்படையில் பூண்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம் தலைமை வகித்து ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து, 16 அரசு பள்ளிகளுக்கு மடிக்கணினி மற்றும் புரெஜெக்டர்களையும் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் எளிதாக கற்பிக்க உதவும் நோக்கத்தில் பல்வேறு வசதிகளை அரசு ஏற்படுத்தி தருதிறது. அந்த வகையில் உபகரணங்களை நல்லமுறையில் பயன்படுத்தி மாணவ, மாணவிகள் வாசிப்பு திறனையும், அறிவியல், கணித திறனையும் சமூகஅறிவியல் குறித்த விளக்கங்களையும் வளர்க்க தொழில்நுட்ப உபகரணங்களை சிறந்த முறையில் பயன்படுத்தவும் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய சில்ரன் பிலீவ் திட்டமேலாளர் லாவண்யா கேசவராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபால முருகன், ஒருங்கிணைந்த கல்வியின் கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் அசோகன், மாவட்டஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, பூண்டி வட்டார கல்வி அலுவலர் பொற்கொடி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முரளிதரன், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன நிர்வாக செயலாளர் ஸ்டீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.