

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. நாளை மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேப்போல, நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியும் கூட்டணியில் விசிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், விசிகவை சேர்ந்தவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மொத்தமுள்ள 30 வார்டுகளில் திமுக 11, சுயேட்சைகள் 7, அதிமுக 3, விசிக 2 மற்றும் மதிமுக, காங்கிரஸ், மமக, இயூமுலீக், தவாக, பாமக, தேமுதிக தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த பல தேர்தல்களாகவே ஆதிதிராவிடர் இனத்தினருக்கே தலைவர் பதவி இடம் ஒதுக்கப்பட்டது. தற்போதைய தேர்தலில் பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எனவே, திமுக பிரமுகர் ஒருவர் தலைவர் பதவியை எதிர்பார்த்து கூட்டணி கட்சியினருக்கும் சேர்த்து தேர்தல் செலவு செய்திருந்தார்.
தற்போது விசிகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 20 பேர் புதன்கிழமை மாலையில் மொத்தமாக யாரும் தொடர்பு கொள்ள இயலாத இடத்திற்கு சென்றனர்.
இந்நிலையில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு இன்று அதிமுக கவுன்சிலர்கள் 2 பேர் சென்று அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். இதனால், நாளை நடைபெறும் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் பரபரப்பான நிலையை எட்டியுள்ளது. அறிவித்தபடி விசிக தலைவர் பதவியை கைப்பற்றுமா அல்லது திமுக பறித்துக் கொள்ளுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.