நாமக்கல் நகர்மன்றத் தலைவராக து.கலாநிதி பதவியேற்பு: 3 நகராட்சிகளில் திமுக வேட்பாளர் தோல்வி

நாமக்கல் நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த து.கலாநிதி வெள்ளிக்கிழமை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நாமக்கல் நகர்மன்றத் தலைவராக து.கலாநிதி பதவியேற்பு: 3 நகராட்சிகளில் திமுக வேட்பாளர் தோல்வி

நாமக்கல்: நாமக்கல் நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த து.கலாநிதி வெள்ளிக்கிழமை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

நாமக்கல் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 8.30 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டனர். நகராட்சியின் 30-வது வார்டு கவுன்சிலரான கலாநிதி, திமுக தலைமை அறிவித்ததன் அடிப்படையில் தனது மனுவை தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக நகராட்சி ஆணையாளர் கி.மு.சுதா தெரிவித்தார்.

துணைத்தலைவர் பதவிக்கு 11-ஆவது வார்டு உறுப்பினர் செ.பூபதி கட்சித் தலைமையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராசிபுரம் நகராட்சியின் நகர்மன்றத் தலைவராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட கவிதா சங்கர் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சிகளில் திமுக போட்டி வேட்பாளர்கள் தலைவர்களாக தேர்வு: 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் பதவிக்கு கார்த்திகேயன் என்பவரை திமுக தலைமை அறிவித்திருந்தது. இன்றைய தலைவர் பதவிக்கான தேர்தலின்போது போட்டி வேட்பாளராக நளினி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வாக்கெடுப்பில் நளினி 18 வாக்குகளும், கார்த்திகேயன் 15 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் ஆதரவுடன் போட்டி வேட்பாளர் நளினி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இங்கு திமுக 19 இடங்களையும் அதிமுக 8 இடங்களையும், சுயேச்சை 5 இடங்களையும் பாஜக ஒரு இடத்தையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி.
திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி.

இதேபோல் பள்ளிபாளையம் நகராட்சியில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு அமுதா என்பவரை திமுக தலைமை அறிவித்தது. ஆனால் போட்டி வேட்பாளராக செல்வராஜ் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த தேர்தலில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் அமுதா தோல்வியுற்றார். அதிமுக, சுயேச்சைகள் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் என்பவர் வெற்றி பெற்றார். இங்கு 12 இடங்களில் திமுகவும், 7 இடங்களில் அதிமுகவும், இரண்டு இடங்களில் சுயேச்சையும் வெற்றி பெற்றன.

குமாரபாளையம் நகராட்சியில் திமுக வேட்பாளராக சத்தியசீலன் என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். நகர்மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டி வேட்பாளராக திமுக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் விஜய்கண்ணன் என்பவர் போட்டியிட்டார். இதில் திமுக வேட்பாளருக்கு 15 வாக்குகளும், போட்டி வேட்பாளருக்கு 18 வாக்குகளும் கிடைத்தன. 

நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய மூன்று நகராட்சிகளிலும் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அதிமுக மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் திமுகவை சார்ந்த போட்டி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com