உஷாபதியிலிருந்து உப ராஷ்டிரபதியாவதால் வெங்கய்யா நாயுடு பெற்றதும், இழப்பதும்?!

இதுவரை மிகப் பரபரப்பான அரசியல்வாதியாக இயங்கிக் கொண்டிருந்த வெங்கய்யா இனி சற்றே அந்தப் பரபரப்பிற்கு ப்ரியாவிடை கொடுக்கலாம். அரசியல்வாதிகளுக்கு இருக்கக் கூடிய பயண நிர்பந்தங்களும், நெருக்கடிகளும்
உஷாபதியிலிருந்து உப ராஷ்டிரபதியாவதால் வெங்கய்யா நாயுடு பெற்றதும், இழப்பதும்?!

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஆளும்கட்சி வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப் பட்டபோதே அவரது வெற்றி உறுதியாகி விட்டது. அவரது மிக நீண்ட அரசியல் வாழ்வில்... சுய பகடியாக அவர் சிலமுறை, தனக்கு ராஷ்டிரபதியாகும் ஆசை எல்லாம் இல்லை தான் எப்போதும் உஷாபதியாக இருந்தாலே போதும்’ என்று தன்னைத் தானேகேலியாகக் குறிப்பிடுவது வழக்கம். அவரது ஆசையோ... இல்லை பாஜக வின் ஆசியோ எப்படிச் சொல்வதென்றாலும் இனி அவர் ஆட்சேபிக்க வாய்ப்பில்லை. இன்று இந்தியாவின் துணை ஜனாதிபதி @ உப ராஷ்டிரபதியாக அமோகமாக வெற்றி பெற்று விட்டார். அதிகாரப் பூர்வ அரசு விழாவில் நாளை 11.08.2017 அன்று நிகழப்போகும் பதவியேற்பு வைபவத்தின் பின் அவர் இனி உஷாபதி மட்டுமில்லை உபராஷ்டிரபதியும் தான்.

இழப்பது...

வெங்கய்யாவின் அரசியல் வாழ்வில் அவருக்குப் பயணங்கள் என்றால் கொள்ளைப் ப்ரியம். குடும்பத்தினரைப் பொறுத்தவரையில் அவர் எந்த நேரம் எங்கிருப்பார்? என்பதை தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்துத் தான் தெரிந்து கொள்வார்கள்... என அவரது மகளே ஒரு ரியாலிட்டி ஷோ வில் தெரிவித்திருக்கிறார். அப்படிப் பரபரப்பாக வாழ்ந்த தீவிர அரசியல்வாதியான வெங்கய்யா தற்போது எந்தக் கட்சி சார்பானவராகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. உபராஷ்டிரபதியாக கட்சி சார்பற்றவராகப் கடமையாற்ற வேண்டிய அவசியம் அவருக்கு இப்போது உண்டு. அது மட்டுமல்ல ‘நடப்பு நிகழ்வுகளைப்’ (current affairs) பொறுத்தவரை உடனுக்குடன் தனது கருத்தை ஊடகங்களில் பதிவு செய்து விடும் பழக்கமுள்ள சுறுசுறுப்பான அரசியல் தலைவரான அவர் இனி அந்த த்ரில் அனுபவத்தை இழக்கப் போகிறார். முன்னைப்போல பாஜக சார்பாகவோ அல்லது சுய சார்பாகவோ தனது கருத்துக்களை சூட்டோடு சூடாகப் போல்டாகப் பதிவு செய்ய அவரது பதவி அனுமதிக்குமா? எனத் தெரியவில்லை. இந்திய ஜனாதிபதியைப் போலவே, உப ஜனாதிபதி பதவி வகிப்பவர்களுக்கும் தங்களது பதவிக் காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்? எனப் பல முறைமைகள் இந்திய அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் அவர்கள் முறையாகக் கடைப்பிடித்தாக வேண்டும். அப்படிப் பார்த்தால் வெங்கய்யா இனி பாதுகாவலர்கள் இல்லாமல் எங்கேயும் செல்ல முடியாது. அவரைச் சந்திக்க அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்குமே கட்டுப்பாடுகள் விதிக்கப் படலாம். முன்னைப் போல ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் கட்சிக்காரர்களின் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் குடும்ப உறுப்பினரைப் போல சர்வ சகஜமாக பயணித்து சொந்த மாநில மக்களுடன் நேரடி, நெருங்கிய தொடர்பில் இருக்க முடியாது. நினைத்த மாத்திரத்தில் தமிழக, கர்நாடக, கேரள லோக்கல் அரசியல் விவகாரங்களில் தனது இன்ஸ்டண்ட் கருத்துக்களைப் பதிவு செய்ய முடியாது. மொத்தத்தில் தீவிர பாஜக விசுவாசியான தன்னை அரசியல் சார்பற்றவராகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இனி வெங்கய்யாவுக்கு உண்டு. தனது பழுத்த அரசியல் ஞானத்தால் அதையும் அவர் இயல்பாகக் கடந்து வர இயலலாம். என்ன இருந்தாலும் பாஜகவில் அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், போன்ற நாடறிந்த பிரபலங்களை முந்திக் கொண்டு வெங்கய்யா உபராஷ்டிரபதியானது ஒரு திறமையான அரசியல்வதியாக அவருக்கு கிடைத்த வெற்றியே!

பெற்றது...

இதுவரை மிகப் பரபரப்பான அரசியல்வாதியாக இயங்கிக் கொண்டிருந்த வெங்கய்யா இனி சற்றே அந்தப் பரபரப்பிற்கு ப்ரியாவிடை கொடுக்கலாம். அரசியல்வாதிகளுக்கு இருக்கக் கூடிய பயண நிர்பந்தங்களும், நெருக்கடிகளும் உப ராஷ்டிரபதிக்கு இருக்கப் போவதில்லை. இந்திய அரசியல் சாசன விதிகளின் படி உபராஷ்டிரபதிக்கு மாதச் சம்பளம் ரூ 1,25,000. தவிர மருத்துவச் செலவுகள், பயணச் செலவுகள் உள்ளிட்டவை அரசால் ஏற்றுக் கொள்ளப்படும். நன்கு ஃபர்னிஷ் செய்யப்பட்ட வீடு ஒன்று ஒதுக்கப்படும். தனது 5 ஆண்டு பதவிக்காலம் முழுவதும் அவர் அங்கு தங்கி இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல ராஜ்ய சபாவில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் மற்றும் மசோதாக்கள் அனைத்திலும் உறுப்பினர்களிடையே ஒத்த மனது இல்லையெனில் துணை ஜனாதிபதியின் ஒப்புகைக்குப் பின்னரே நிறைவேற்றப்படும். எனவே அந்த அதிகார வரம்புக்குட்பட்டு துணை ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை முடிவு செய்யலாம். பதவிக்காலம் முடிந்த பின் துணை ஜனாதிபதியாக இருந்தவர்களுக்கு அவர்களது மாதச் சம்பளத்தில் பாதித் தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும். இவை எல்லாவற்றையும் தாண்டி, இதுவரை வெறும் அரசியல்வாதியாக மட்டுமே இயங்கிய வகையில் வெங்கய்யா இந்தியா தாண்டி பிற நாட்டு அரசியல்தலைவர்களுக்கு அறிமுகமற்ற நபராகவே இருந்திருக்கக் கூடும். ஆனால் இனி அப்படி இல்லை. இந்தியா எனும் தீபகற்ப நாட்டின் 13 வது துணை ஜனாதிபதியாக வெங்கய்யாவின் பெயர் வரலாற்றில் இடம் பெற்று விட்டது. இந்தியாவின் துணை ஜனாதிபதியாக உலகத் தலைவர்கள் அனைவரும் இனி வெங்கய்யாவை அறிந்தவர்கள் ஆவார்கள். 

மக்கள் தலைவராக இனி தான் இழக்கப் போவதையும், பெறப்போவதையும் அறிந்தவராக வெங்கய்யா என்ன சொல்கிறார் தெரியுமா? 

“துணை ஜனாதிபதி பதவியில் எனது முன்னோடிகளான சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன், ஜாஹிர் ஹுசைன் உள்ளிட்டோரை முன் மாதிரியாகக் கொண்டு, எனது பதவிக்காலத்தை எப்படியெல்லாம் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நான் கற்றுக் கொள்வேன். தீவிரமாக அரசியலில் இயங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் எனது பிள்ளைகளுடன் நான் நேரம் செலவளித்தது இல்லை. அவர்களுடன் நான் அணுக்கமாக இருந்த நேரங்கள் குறைவு. எப்போதும் பயணம், பயணம் என்று இந்தியா முழுதும் சுற்றிக் கொண்டிருப்பேன். உள்ளூர் மக்களுடனும் எப்போதும் நேரடித் தொடர்பிலிருக்க வேண்டி நான் எனது பயணங்களைத் தவிர்த்ததே இல்லை. இதனால் என் மனைவி, மக்களுடன் இருந்த நேரம் குறைவு. ஆனால் இப்போது எனக்கு நேரமிருக்கிறது. அந்த நேரத்தை என் பேரன், பேத்திகளுடன் செலவளிப்பதில் ஆனந்தப்பட்டுக் கொள்கிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள்; ஓய்வு கிடைத்தால் இப்போதெல்லாம் நான் என் பேரன், பேத்தியுடன் ரிலாக்ஸாக அவர்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் பார்ப்பேன், பிடித்த உணவகங்களுக்குச் சென்று அவர்களுடன் சேர்ந்து உண்பேன் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம்.” என்கிறார் 68 வயது வெங்கய்ய நாயுடு. 

அவரது இத்தனை வருட நேர்மையான அரசியல் வாழ்வுக்கு கிடைத்த பரிசாகத் தான் இந்தப் பதவியைப் பற்றி கருதுகிறார்கள் வெங்கய்யாவை நன்கறிந்தவர்களும் அவரது நண்பர்களும்.

Image courtesy: first post. google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com