டிசம்பர் 7 கொடி நாள்... தெரியும்; நமது இந்திய தேசியக் கொடி உருவான சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?

இந்திய தேசியக் கொடியை எல்லாத்துணிகளிலும் நெய்து விட முடியாது. சுத்தமான நாட்டுப்பருத்தி இழையில் மட்டுமே தேசியக் கொடி நெய்யப்பட வேண்டும் என்பது மரபு.
டிசம்பர் 7 கொடி நாள்... தெரியும்; நமது இந்திய தேசியக் கொடி உருவான சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 ஆம் தேதியை இந்தியக் கொடிநாளாக அனுசரித்து நம் நாட்டின் முப்படைகளிலும் பங்கேற்று சிறப்பாகப் பணியாற்றும் ராணுவ வீரர்களைக் கெளரவித்து வருகிறது இந்திய அரசு. கொடிநாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமே அன்றைய தினம், இந்திய தேசியக் கொடிகளை நாடு முழுவதும், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியப்பெருமக்கள், இளைஞர்கள், என அனைவர் மூலமாகவும் நாடு முழுதும் விற்பனை செய்து அதில் கிடைக்கும் தொகையை இந்திய ராணுவ வீரர்களின் நலனுக்காக பயன்படுத்துகிறது நமது அரசு. பாகிஸ்தான், சீனா, பங்களா தேஷ், உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான எல்லைப்பிரச்னைகளின் போது மூண்ட போர்களில் தமது இன்னுயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவும் பொருட்டும், போரில் உடலுறுப்புகளை இழந்து மாற்றுத்திறனாளிகளாகி விட்ட முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரின் பொருளாதாரத் தேவைகளில் உதவும் பொருட்டும், இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கொடிநாள் அன்று நன்கொடை திரட்டி ராணுவ வீரர்களுக்கு அளித்து நாட்டின் பாதுகாப்பில் அவர்களது பங்களிப்பைக் கெளரவிக்கிறது.

இந்திய எல்லைப்புறங்களில் பாலைவனங்களிலும், பனி பெய்யும் இமயத்திலும், கடல்புறத்திலுமாக இரவு பகல் பாராது அயராது உழைத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் இந்தச் சிறு மரியாதை நலிவடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துப் பொருளாதாரத் தேவைகளை தீர்க்கச் செய்யும் பேருதவியாகக் கருதப்படுகிறது.

ஆகவே இன்று பொதுமக்கள் ஏதேனும் ஒருவகையில் கொடிநாள் நிதி செலுத்தி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்ய மறவாதீர்!

எல்லையில் அவர்கள் உறங்காமல் கண்ணும் கருத்துமாக விழித்திருந்து அயராது உழைப்பதால் மட்டுமே இங்கே இந்தியாவுக்கு உள்ளே நம்மால் நிம்மதியான வாழ்வை வாழ முடிகிறது. அண்டை நாடுகளைப் பாருங்கள். இலங்கையிலும், சிரியாவிலும், இஸ்ரேலிலும், ஈரான், ஈராக்கிலும் போர் நடந்ததால் அகதிகளாக்கப்பட்ட லட்சோபலட்சம் மக்களைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம் நாம்? போர் என்பது ஒரு நாட்டைப் பாதுகாப்பதற்கான முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, தன் நாட்டு மக்களை அகதிகளாக்கும் முயற்சியாக என்றுமே இருக்கக் கூடாது. அந்த வகையில் முப்படைகளிலும் அங்கம் வகிக்கும் நமது இந்திய ஜவான்களே ஒட்டுமொத்த இந்தியர்களின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம். எனவே அவர்களைக் கொண்டாடக் கிடைத்த இத்தகைய வாய்ப்புகளை நாம் தவற விட்டு விட வேண்டாம்!

அதோடு கொடிநாளான இன்று, இந்திய தேசியக்கொடியைப் பற்றியும் சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.

இந்திய தேசியக் கொடியின் வரலாறு...

இன்று நாம் அரச விழாக்கள் தவறாது கொடி வணக்கம் செய்கிறோமே அசோகச் சக்கரத்துடன் கூடிய இந்திய மூவர்ணக் கொடி அதை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கையா.

இந்தியா வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த போது இந்துஸ்தானத்தை 56 தேச ராஜாக்கள் ஆண்டு கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தனிச்சிறப்புடன் பிரத்யேகக் கொடிகள் இருந்தன. அந்தக் கொடிகள் அனைத்தும் அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப ஏதோ ஒரு அடையாளத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டவையாக இருந்தன. ஆனால், கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலக் கிழக்கிந்திய ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டுமானால், இந்தியர்களான நாம் இப்படி ஆளுக்கு ஒரு படை, பரிவாரத்துடன் தனிக்கொடி வைத்துக் கொண்டு சிதறுண்டு கிடந்தால் கதைக்கு ஆகாது என்று கருதிய நமது சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் கலந்தாலோசித்து சுதேசக் கொடி ஒன்றை உருவாக்கத் தலைப்பட்டனர். அதில் மட்டும் உடனே ஒன்று பட்டு விடக்கூடியவர்களா நாம்?! அப்போதும் கூட;

விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதா இந்தியாவுக்கென ஒரு கொடியை வடிவமைத்தார். அதற்கு ‘நிவேதிதா கொடி’ என்று பெயர்;

1904ஆம் ஆண்டு, நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். சிவப்பு வண்ணத்தில, சதுர வடிவில், மஞ்சள் நிற உள்வடிவத்தை கொண்டு, பேரிடியை உணர்த்துமாறு, ஒரு 'வஜ்ர' வடிவத்தையும், வெள்ளை தாமரையையும் நடுவில் கொண்டது. அதில் வங்காள மொழியில், ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தைகளும் இடம்பெற்றிருக்கும். அந்தக் கொடியில் சிவப்பு நிறம் சுதந்திரப் போராட்டத்தை குறிக்கும் வகையிலும், மஞ்சள் நிறம் வெற்றியை குறிக்கும் வகையிலும், வெள்ளை நிறம் தூய்மையை குறிக்கும் வகையிலும் அமைந்திருந்தன.

முதல் இந்திய மூவர்ணக் கொடிக்கு கல்கத்தா கொடி என்று பெயர்...

முதல் மூவர்ணக் கொடி, 1906 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் நாளில், கல்கத்தாவின் பார்ஸி பகன் சதுக்கத்தில், வங்காளப் பிரிவினை எதிர்ப்பு போராட்டத்தின் போது, சிந்திர பிரசாத் போஸ் என்பவரால் கொடியேற்றப்பட்டது. அக்கொடி பிற்காலத்தில், ‘கல்கத்தாக் கொடி’ என வழங்கப் பட்டது. கொடியில், நீள் வடிவில், ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என மூன்று பாகங்கள் இருந்தன. முதல் பாகத்தில், எட்டு, பாதி விரிந்த தாமரை பூக்களும், அடி பாகத்தில், சூரிய வடிவமும், சந்திர வடிவமும் அமைந்தன. நடுவில், தேவநாகிரி எழுத்துருவில், ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

பிக்காஜி காமா அம்மையார் வடிவமைத்த இந்தியக் கொடி...

பின்னர், 22 ஆகஸ்ட் 1907ஆம் நாளில், பைக்கஜி காமா அம்மையார், ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் என்ற நகரில், மற்றுமொரு மூவர்ணக் கொடியை ஏற்றினார். அந்த கொடி, பச்சை நிறம் மேற்பகுதியிலும், இளஞ்சிவப்பு நடுவிலும், சிவப்பு நிறம் அடிப்பகுதியிலுமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கொடியின் பச்சை நிறம் இஸ்லாமியத்தை குறிப்பதாகவும், இளஞ்சிவப்பு நிறம் இந்துத்துவத்தையும், பெளத்தத்தையும் குறிப்பதாக அமைந்திருந்தன. பச்சை நிறப்பாகத்தில், ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில், வரிசையாக எட்டு தாமரைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. நடுபாகத்தில், தேவநாகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது. அடிப்பாகத்தின் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில், ஒரு பிறைநிலாவையும், இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டிருந்தது அம்மூவர்ணக் கொடி. இக்கொடியை, பிக்காஜி காமா அம்மையாருடன் சேர்ந்து, வீர் சாவர்கர், சியாம்ஜி கிருஷ்ண வர்மா ஆகியோர் வடிவமைத்தனர். முதலாம் உலகப் போர் தொடங்கிய பின்னர், அது போராட்ட கலகர்களின், பெர்லின் குழுமத்தைச் சார்ந்தவர்களுக்கான கொடி எனப் பொருள்படும்படி , பெர்லின் குழுமக் கொடி என்று குறிப்பிடப்பட்டது. முதல் உலகப் போரின் போது, இக்கொடி, இந்தியாவின் சின்னமாக, நிலை கொண்டது.

பால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசண்ட் அம்மையார் வடிவமைத்த இந்திய தேசியக் கொடி...

பால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசண்ட் அம்மையார் சேர்ந்து தொடங்கிய சுயாட்சிப் போராட்டத்தில் ஐந்து சிவப்பு நிற நீள்வடிவங்களும், நான்கு பச்சை நிற நேர் கோல் நீள்வடிவங்களும் கொண்ட மற்றுமொரு கொடி பயன்பாட்டுக்கு வந்தது. மேல் இடது மூலையில், ஆங்கிலேய பேரரசிடம் இருந்து சுயாட்சி பெறுவதை குறிக்கும் வகையில், யூனியன் ஜாக் வடிவம் அமைந்தது. வெள்ளை நிறத்தில் பிறைநிலா வடிவமும், நட்சத்திர வடிவமும், மேல் வலது பாகத்தில் அமைந்தன. மேலும் ஏழு வெள்ளை நட்சத்திரங்கள், இந்துக்கள் புனிதமாக கருதும் சப்தரிஷி நட்சத்திர குழு அமைப்பு வடிவில் உருவாக்கப்பட்டது. இக்கொடி, அநேகமாக யூனியன் ஜாக் சின்னத்தை கொண்ட காரணத்தினால் பெரும்பான்மை மக்களின் ஆதரவை இது பெறவில்லை.

பிங்கலி வெங்கையா வடிவமைத்த இந்திய தேசியக் கொடி...

1916 ஆம் ஆண்டில், அன்றைய ஒருங்கிணைந்த ஆந்திராவின் மசூலிப் பட்டிணத்தைச் சேர்ந்த பிங்கலி வெங்கய்யா என்பவர், இந்தியர்கள் எல்லோருக்கும் பொதுவானதொரு கொடியை வடிவமைக்க முயன்றார். அவரது தளராத முயற்சிகளை கண்ட உமர் சொபானியும் எஸ்.பி.பொம்மஜியும், இந்திய தேசியக் கொடி நெறி அமைப்பை தொடங்கினர். வெங்கய்யா, மகாத்மா காந்தியிடம் கொடிக்கான சம்மதத்தைக் கோரிய போது, மகாத்மா, இந்தியாவின் எழுச்சியையும் அடிமைத்தளையிலிருந்து கிடைக்கவிருக்கும் விடுதலையையும் குறிக்கும் வகையில் சக்கரத்தை சேர்க்குமாறு வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து, பிங்கலி வெங்கய்யா அவர்கள், சக்கரத்தை ஆதாரமாகக் கொண்டு சிவப்பு, பச்சை ஆகிய இரு வர்ணங்களை கொண்ட ஒரு கொடியை உருவாக்கினார்.

அக்கொடி, இந்திய மதங்கள் அனைத்தையும் நிலையுறுத்தவில்லை என மகாத்மா காந்தி கருதவே, புதிய கொடி ஒன்று வடிவமைக்கப் பட்டது. அக்கொடியில் வெள்ளை நிறம் மேலேயும், பச்சை நிறம் நடுவிலும், சிவப்பு நிறம் கீழேயும், வெவ்வேறு மதங்களைச் சமமாக குறிக்குமாறு அமைந்தன. அதில் சக்கரமோ எல்லா வர்ணங்களிலும் இடம் பெற்றன. இந்த கொடி, ஆங்கிலேயப் பேரரசிடம் இருந்து விடுதலைக்காக போராடிய அயர்லாந்தின் கொடிக்குச் சமமாக உள்நோக்கத்தை கொண்டவாறு அனுசரிக்கப்பட்டது. முதன்முதலாக அகமதாபாத்தில் நடந்த காங்கிரசு கட்சி கூட்டத்தில் ஏற்றப்பட்ட இக்கொடி, இந்திய சுதந்திர போராட்டத்தின் மையமாக பெரிதும் பயன்படுத்தப்பட்டது.

காங்கிரஸ் குழு வலியுறுத்திய காவிக்கொடி...

ஆனால் இந்தக் கொடியும் இறுதி வடிவமாக நிலைபெறவில்லை, ஏனெனில் இந்தியாவில் இருந்த ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது மத நம்பிக்கையைக் குறிக்கும் வகையில் அக்கோடியில் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதனால் சலித்துப் போன காங்கிரஸ் குழு 1932 ஆம் ஆண்டு மத அடையாளங்களைக் குறிக்கும் வகையில் வெவ்வேறு நிறங்கள் தேவையற்றவை என்று முடிவு செய்து ஒரே காவி நிறம் மட்டும் போதுமென முடிவு செய்து அக்காவி நிறத்தின் மையத்தில் கை ராட்டை இடம் பெறுமாறு ஒரு கொடியை வடிவமைக்கக் கோரியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் அதை ஏற்கவில்லை.

சுபாஸ் சந்திர போஸ் வடிவமைத்த இந்தியக் கொடி...

இரண்டாம் உலகப்போரின் போது இந்திய தேசியப் படையை வழி நடத்திய சுபாஷ் சந்திர போஸ் தமக்கென பிரத்யேகமாக புலி உருவமும் ‘ஆஸாத் ஹிந்த்’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதுமான ஒரு கொடியைப் பயன்படுத்தி வந்தார்.

காங்கிரஸ் குழு அங்கீகரித்த இந்தியக் கொடி...

ஒருவழியாகப் பல்வேறு குழப்பங்கள் மற்றும் குளறுபடிகளின் பின் பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த சிவப்பு, பச்சை, வெள்ளை நிறமும் மத்தியில் அசோகச் சக்கரமும் கொண்ட மூவர்ணக் கொடியே இறுதியானது என காங்கிரஸ் குழு முடிவுக்கு வந்தது. இவற்றின் நிறங்களுக்கு மத அடையாளங்களுக்குப் பதிலாக குண நலன்கள் சிறப்பியல்புகளாக கற்பிதம் செய்யப்பட்டன. அதன்படி காவி நிறம் தியாகத்தையும், அறத்தையும், வெள்ளை நிறம் சமாதானத்தையும், பச்சை நிறம் வளமையையும் குறிப்பதாகவும் நடுவில் உள்ள அசோகச் சக்கரம் தர்மத்தை நிலைநிறுத்துவதாகவும் முடிவு செய்யப்பட்டது. இப்படி ஆரம்பத்தில் காங்கிரஸ் குழு ஒப்புக்கொண்ட கொடியே பின்னர் நாடு முழுமைக்குமான ஒரே கொடியாக இந்திய விடுதலையின் பின் சரோஜினி நாயுடு, அம்பேத்கர், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், அபுல் கலாம் ஆஸாத், கே. எம் பனிக்கர், கே. எம். முன்ஷி ஆகியோர் அடங்கிய குழுவால் விவாதிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டது.

இன்றைய நமது மூவர்ணக் கொடி முதன்முறையாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியா விடுதலை அடைந்தா நாளன்று ஏற்றப்பட்டு பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது.

இப்படிப் பல தடைகளைத் தாண்டி இறுதி வடிவம் பெற்ற தேசியக் கொடியை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எவ்விதம் மதித்து நடக்க வேண்டியது மரபு எனப் பின்னாட்களில் அதற்கென பிரத்யேகமாக சில சட்டதிட்டங்களும் வரைவு செய்யப்பட்டன. அதை மீறுவது இந்தியாவில் தேசத்துரோகமாகக் கருதப்படுகிறது.

இந்திய தேசியக் கொடி நெய்வதற்கான மரபு...

இந்திய தேசியக் கொடியை எல்லாத்துணிகளிலும் நெய்து விட முடியாது. சுத்தமான நாட்டுப்பருத்தி இழையில் மட்டுமே தேசியக் கொடி நெய்யப்பட வேண்டும் என்பது மரபு. இந்தியாவில் மூன்று இழைகளில் நெசவு செய்யப்படவேண்டிய தேசியக் கொடிகளை நெய்ய தற்போது வெறும் 13 நெசவாளர்களே உள்ளனராம். பிற சாதாரண நெசவுகள் அனைத்தும் இரண்டு இழைகளில் நெய்யப்படுகையில் தேசியக் கொடியை மட்டும் மூவிழைகளில் நெசவு செய்ய வேண்டும் என்பதே அதற்கான சிறப்பு!

இந்திய தேசியக்கொடி இறுதி வடிவத்தை அடைந்த பின்னர் கை ராட்டைச் சின்னம் அதில் இடம்பெறாமல் போனதற்காக காந்திஜி மிகுந்த மன வருத்தம் அடைந்தாராம். இது குறித்து அவர் தனது ‘ஹரிஜன பந்து’ இதழில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தேசியக் கொடியைப் பற்றி இத்தனை விவரங்களை அறிந்து கொண்டு கொடியேற்றுகையில் பாடும் பாடலை மறந்து விட்டால் எப்படி? இதோ மகா கவி பாரதியார் பாடிய கொடிப்பாடலுடன் கட்டுரையை முடித்துக் கொள்ளலாம்.

தாயின் மணிக்கொடி பாரீர்! கொடிப்பாடல்...

பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் 
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் 

1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன் 
உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே 
பாங்கி னேழுதித் திகழும் -செய்ய 
பட்டொளி வீசிப் பறந்தது பாரிர்!

2.பட்டுத் துகிலென லாமோ?-அதிற் 
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று 
மட்டு மிகுந்தடித்தாலும் -அதை 
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்(தாயின்)

3.இந்திரன் வச்சிர மோர்பால்-அதில் 
எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால் (தாயின்)
மந்திர நடுவுறத் தோன்றும் -அதன் 
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?(தாயின்)

4.கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் -எங்கும் 
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் 
நம்பற் குரியரவ் வீரர்-தங்கள் 
நால்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார்.(தாயின்

5.அணியணி யாயவர் நிற்கும்-இந்த 
ஆரியக் காட்சியோ ரானந்த மன்றோ? 
பணிகள் பொருந்திய மார்பும் -வீறற் 
பைந்திரு வோங்கும் வடிவமுங் காணீர்!(தாயின்) 

6.செந்தழ்நாட்டுப் பொருநர் -கொடுந் 
தீக்கண் மறவர்கள் , சேரன்றன் வீரர் 
சிந்தை துணிந்த தெலுங்கர் -தாயின் 
சேவடிக் கேபணி செய்துடு துளுவர் .(தாயின்)

7.கன்னட ரொட்டியரோடு -போரிற் 
காலனு மஞ்சக் கலக்கு மராட்டர் 
பொன்னகர்த் தேவர்க் கொளப்ப- நிற்கும் 
பொற்புடை யாரிந்து ஸ்தானது மல்லர். (தாயின்)

8..பூதல முற்றிடும் வரையும் -அறப் 
போர்விறல் யாவும் மரப்புறும் வரையும் 
மாதர்கள் கற்புள்ள வரையும் -பாரில் 
மறைவரும் கீர்த்திகொள் ராஜபுத்ர வீரர் (தாயின்)

9.பஞ்ச நததுப் பிறந்தோர் -முன்னைப் 
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன் னாட்டார் 
துஞ்சும்பொழுதினுந் தாயின் -பதத் 
தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)

10.சேர்ந்ததைக் காப்பது காணீர் - அவர் 
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத -நிலத் 
தேவி துவஜம் சிறப்புற வாழ்க (தாயின்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com