விவாகரத்தைப் பற்றி குழந்தைகள் முன்னிலையில் பேசிச் சண்டையிடும் பெற்றோர் கவனத்துக்கு!

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையே எந்த நொடியிலும் டிவோர்ஸ் வந்து விடக்கூடும் என்று ஒரு 3 வயதுக் குழந்தை சதா சர்வ காலமும் எதிர்பார்த்துக் கொண்டு அதை எண்ணிப் பயந்து அழுது கொண்டும் இருந்தால் அந்த
விவாகரத்தைப் பற்றி குழந்தைகள் முன்னிலையில் பேசிச் சண்டையிடும் பெற்றோர் கவனத்துக்கு!

3 வயது தியாவுக்கு பள்ளிக்கு வரவே விருப்பமில்லை. ஒவ்வொரு நாளும் அம்மா, அவளை பள்ளியில் விட வரும்போதும் அம்மாவை இறுகக் கட்டிக் கொண்டு நான் இங்கிருக்க மாட்டேன், உன்னோடு வீட்டுக்கே வந்து விடுகிறேன் என்று அழுது தீர்ப்பாள். வலுக்கட்டாயமாக அம்மா, அவளைப் பள்ளியில் ஆயாவிடம் விட்டு விட்டு விடைபெறும் போதும் கண்களில் நீர் வழிய அழுகையில் உதடுகள் பிதுங்கப் பரிதாபமாக அழுது கொண்டிருப்பாள்.

ஒவ்வொரு நாளும், குழந்தை தன்னை விட்டுப் பிரிய விரும்பாமல் அழுது கொண்டே இருப்பதைக் கண்டாலும் பொறுமையாக அவளுக்கு விளக்கி அவளது அழுகையை நிறுத்தி மகளைச் சிரிக்கச் செய்து விடைபெறும் அளவுக்கு தியாவின் அம்மாவுக்குப் என்றுமே பொறுமை இருந்ததில்லை. குழந்தையை வகுப்பறையினுள் அழ, அழ விட்டு விட்டுச் செல்லும் அம்மாவாகத்தான் தியாவின் அம்மா இருந்தார், அதனால் மீண்டும் மாலையில் அவளை அழைத்துச் செல்ல அம்மா வரும் வரை தியா விடாமல் அழுது கொண்டே இருப்பது வழக்கமாயிற்று.

தியா அழுவது அவளது அம்மாவுக்கு எப்படி இருந்ததோ என்னவோ? ஆனால், அவளது வகுப்பாசிரியைக்கு மிகுந்த தர்மசங்கடமாக இருந்தது. எல்லாக் குழந்தைகளுமே பள்ளியில் சேர்ந்த ஆரம்ப வாரங்களில் அழுவார்கள் என்பது இயல்பானதே! ஆனால், இந்தக் குழந்தை மட்டும் ஏன் இப்படி பள்ளி திறந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக இப்படி விடாமல் அழுது ஜீவனை விட்டுக் கொண்டிருக்கிறாள். அவளிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்து அவளது அழுகையை நிறுத்த வேண்டும். ஏன் இப்படி உயிர் போகும் அளவுக்கு ஒரு குழந்தை அழுது அரற்றுகிறது என்பதற்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும் என அந்தப் பொறுப்பான ஆசிரியை மனதிற்குள் எண்ணிக் கொண்டே அதற்கான நல்லதொரு தருணம் பார்த்துக் காத்திருந்தார்.

இந்தச் சூழலில் தான் திடீரென ஒருநாள், அவர் முயல்வதற்கு முன்பாகவே; தியாவின் வகுப்புத் தோழியான மற்றொரு குழந்தை பூஜா விளையாட்டுப் போக்கில், நீ ஏன் தினமும் ஸ்கூலுக்குள்ள நுழையும் போதெல்லாம் அழுதுகிட்டே இருக்க? உங்கம்மா ஸ்கூல் விட்டதும் உன்னை கூட்டிட்டுப் போக வந்துடுவாங்கல்ல, அப்புறம் ஏன் அழற? என்று கேட்டு வைக்க; தியா, தனது அழுகையைச் சற்று நிறுத்தி விட்டு, பொறுப்பாக அவளுக்கு பதில் அளிக்கிறாள். அந்த நேரம் தற்செயலாக வகுப்பறையில் நுழையும் ஆசிரியை தியாவின் பதிலைக் கேட்டு ஒரு நொடி நெக்குருகித் தனக்குள் குமைந்து போகிறார்.

இந்தப் பிஞ்சு மனதில்... இந்த வயதிற்குள் இப்படி ஒரு சுமையா?

3 வயது தானே ஆகிறது.. அதற்குள் இவள் மனதில் இப்படி ஒரு சோகமா? என்று தவித்துப் போன ஆசிரியை.. அதன் பின் பொறுமை காக்கவில்லை. மறுநாளே தியாவைப் பள்ளியில் விட அவளது அம்மா வந்த போது,

‘தியா அம்மா, நான் உங்களுடன் தியாவைப் பற்றிக் கொஞ்சம் பேச வேண்டும், இன்று மாலை அவளையும் அழைத்துக் கொண்டு அண்ணாநகர் டவர் பார்க் வந்து விடுகிறீர்களா?’

-  என்றார்.

திடீரென ஆசிரியை இப்படிக் கேட்டதும் குழம்பிப் போன தியாவின் அம்மா; ஸ்தம்பித்த முகத்துடன்; ‘ஏன் மேம், அவள் ஏதாவது தவறு செய்து விட்டாளா? என்ன ஆயிற்று? என்று தயக்கத்துடன் கேட்க; தனக்குள் சிரித்துக் கொண்ட ஆசிரியை, 

‘பாருங்க தியா அம்மா!... எப்போதுமே தவறு செய்பவர்களும், செய்யக்கூடியவர்களும் குழந்தைகளில்லை, பெரியவர்களான நாம் தான். விஷயம் அப்படி ஒன்றும் அபாயகரமானது இல்லை. அதனால், பயந்து கொள்ளாமல் நீங்கள் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். நான் பேச விரும்புவது குழந்தையைப் பற்றி அல்ல, அவளது பெற்றோர்களான உங்களைப் பற்றி. இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கக் கூடும். அதைப் பற்றி யோசியுங்கள். நாம் மாலை பார்க்கில் சந்திக்கலாம்.’

- என்று முடித்து விட்டு குழந்தைகளை அழைக்க வந்திருந்த பிற பெற்றோர்களிடம் பேசத் துவங்கி விட்டார்.

ஆசிரியை தன் அம்மாவிடம் இப்படிக் கேட்கும் அளவுக்கு தியா தன் தோழியிடம் சொன்ன காரணம் என்னவாக இருக்கும் என்று தானே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்...

தன் தோழிக்கு தியா சொன்ன பதில்; 

தியா: அம்மா என்னை பிக் அப் பண்ண மறுபடியும் ஸ்கூல்க்கு வராம போய்ட்டாங்கன்னா நான் என்ன செய்யறது?

பூஜா: வருவாங்க... எல்லா அம்மாக்களும் வந்துட்டு தானே இருக்காங்க; உங்க அம்மாவும் வருவாங்க தியா, நீ அழாத!

தியா: (தீர்மானமான குரலில்) இல்ல, எங்கம்மா தான் தினமும் அப்பாவோட சண்டை வரும் போதெல்லாம் நான் டிவோர்ஸ் வாங்கினதுக்கப்புறம் இந்த வீட்டுக்கு வரவே மாட்டேன்னு சொல்றாங்களே’ ஒரு வேலை நான் ஸ்கூல்ல இருக்கும் போது டிவோர்ஸ் வந்துட்டா, எங்கம்மா வீட்ல இல்லாம போய்டுவாங்களே!

பூஜா: (கொஞ்சம் குழம்பிப் போய்) அதெல்லாம் இல்ல... அம்மான்னா குழந்தைங்க ஸ்கூல் விட்டு வீட்டுக்குப் போகும் போது வீட்ல தான் இருப்பாங்க. நீ அழாத!

தியா: இல்ல... எங்கம்மா டிவோர்ஸ் வந்த உடனே போய்டுவேன்னு சொல்றாங்க!

பூஜா: (பதில் சொல்லத் தெரியாமல்) நீ அழுதா டிவோர்ஸ் வராம போய்டுமா?

தியா: போகாது... ஆனா எனக்கு அம்மா கூட இருக்கனும். அதான் ஸ்கூலுக்கு வர பிடிக்கல. அம்மா கூடவே இருந்தா, டிவோர்ஸ் வந்தா கூட நானும் அவங்க கூடவே போய்டலாம் இல்ல. இங இருந்தா அது வரது எனக்கு எப்படித் தெரியும்?!

பூஜா: (பெரிய மனுஷியாகக் கண்களைச் சுருக்கிக் கொண்டு யோசித்து) ம்ம்... நீ சொல்றதும் ரைட் போல இருக்கு.

தியா மறுபடியும் கண்ணோரம் தளும்பிக் கொண்டிருந்த கண்ணீரைச் சிந்தி விட்ட இடத்திலிருந்து அழத் தொடங்குகிறாள்.

இந்தச் சிறுமிக்கு என்ன சமாதானம் வழங்குவதெனத் தெரியாமல் திகைத்த இன்னொரு குட்டிச் சிறுமி பூஜா, அவளை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டே பிற சிறுவர், சிறுமிகளுடன் விளையாடத் தொடங்குகிறாள். அவளுக்குப் பிரச்னை இல்லை. அவளது அம்மா தான் அவள் பள்ளி விட்டுச் செல்லும் எல்லா நாட்களிலும் வீட்டில் தானே இருப்பார். அவள் வீட்டிற்குத்தான் டிவோர்ஸ் எல்லாம் வரப்போவது இல்லையே!

சிறுமிகளின் இந்தச் சம்பாஷணை தான் தியாவின் வகுப்பாசிரியையிடம் தியாவின் அம்மாவைப் பார்த்து அப்படிப் பேச வைத்தது.

மாலையில் அவர்கள் இருவரும் சந்தித்து என்ன பேசி முடிவெடுப்பார்களோ, அது அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் யோசித்துப் பாருங்கள்;

கணவன், மனைவி சச்சரவுகள் இல்லாத வீடு தான் எங்கே இருக்கிறது? அப்படியோர் வீடு சொர்க்கத்தில் கூட இருக்க வாய்ப்பில்லை. ஆதியில் கணவனை எதிர்த்துக் கொண்டு தந்தை செய்த யாகத்தில் கலந்து கொள்ளச் சென்ற ஆதி சக்தியிடம் கோபித்துக் கொண்டு சிவன் ஆடிய ருத்ர தாண்டவக் கதை அறியாதோரா நாம்?!

அந்தச் சண்டைகளுக்கெல்லாம் எந்த ஜென்மத்திலும் முடிவென்ற ஒன்று கிடையவே கிடையாது. ஆனால், அதெல்லாமும் வளர்ந்தவர்களான பெரியவர்களுக்குள்ளாக மட்டுமே இருக்க வேண்டிய வாழ்வியல் அனர்த்தங்கள். அதன் பலாபலன்கள் நிச்சயமாக குழந்தைகளைப் பாதிக்கும் அளவுக்கு விட்டு விடக் கூடாது.

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையே எந்த நொடியிலும் டிவோர்ஸ் வந்து விடக்கூடும் என்று ஒரு 3 வயதுக் குழந்தை சதா சர்வ காலமும் எதிர்பார்த்துக் கொண்டு அதை எண்ணிப் பயந்து அழுது கொண்டும் இருந்தால் அந்தக்குழந்தையின் மிச்ச வாழ்க்கை என்ன ஆகும்? பொறுப்பான பெற்றோர் எனில் என்ன முடிவு எடுத்திருப்பார்கள் என்பதை வாசகர்களின் கற்பனைக்கே விடலாம்.

குழந்தைகளுக்கிடையில் வரக்கூடிய சண்டைகளை தீர்த்து வைக்க வேண்டிய நேரத்தில் பெற்றோரான நாமே நமக்குள் சண்டையிட்டு நம் குழந்தைகளின் எதிர்காலத்தை இருளில் தள்ளுவது நல்லதா?

யோசியுங்கள் பெற்றோரே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com