முட்டை விலை ஏறிக்கொண்டே போகிற இத்தருணத்தில்; யோசியுங்கள்... மனிதர்கள் நாம் எப்போதிருந்து முட்டை சாப்பிடத் தொடங்கினோம்?!

இந்தியர்களும், சீனர்களும் வெகு பழங்காலத்திலேயே முட்டை உற்பத்தியை வீட்டிலேயே தொடங்கி இருந்தாலும், கி.பி 800 ஆம் ஆண்டுவரையிலும் கூட மேற்கு ஆசியா, ஐரோப்பா, எகிப்து உள்ளிட்ட பிரதேசங்களில் கோழி முட்டை பயன்
முட்டை விலை ஏறிக்கொண்டே போகிற இத்தருணத்தில்; யோசியுங்கள்... மனிதர்கள் நாம் எப்போதிருந்து முட்டை சாப்பிடத் தொடங்கினோம்?!

‘இந்த வைட் லகான் முட்டை கெட்ட கேட்டுக்கு, அது கூட இன்னைல இருந்து 6 ரூபாய் 50 பைசாவாம்!’

இது முட்டையின் மீதான வெறுப்பில் வந்த வார்த்தைகளல்ல, அன்றாடங்காய்ச்சிகளின் பவர் பூஸ்டர்களான இந்த வெள்ளை வஸ்துவை நினைத்த மாத்திரத்தில் தங்களால் வாங்கிச் சாப்பிட முடியாமல் போய் விடுமோ என்ற ஆதங்கத்தில் கடைத்தெருவில் இருவர் உதிர்த்துச் சென்ற பொன்மொழி தான் மேற்கண்ட வாக்கியம்.

80 களின் இறுதியில் வெறும் 60 பைசாவுக்கும், மிஞ்சிப்போனால் 75 பைசாவுக்கும் விற்ற முட்டை. ஆனால் இன்று ஒரு முட்டை சில்லறை விலையில் 6.15 ரூபாய். அதுவே மொத்தமாக வாங்கினால் 5.15 ரூபாய் என்று காலைக் காஃபியுடன் செய்தித்தாட்களை இணையத்தில் மேயும் போதே அனைத்து ஊடகங்களும் நாட்டு மக்களுக்கொரு நற்செய்தியாக இதை கட்டியம் கூறி விட்டன.

அட... எந்த உணவுப் பொருளின் விலை தான் குறைந்திருக்கிறது. பறவைக் காய்ச்சல் வந்த காலங்கள் தவிர்த்து பிற எல்லா நாட்களிலுமே முட்டைகளின் விலை உயர்ந்து கொண்டே தானே செல்கின்றன.

அதற்காக அசைவப் பிரியர்கள் முட்டை சாப்பிடுவதை விட்டுவிடப்போகிறார்களா என்ன? என்கிறீர்களா?

அதுவும் சரிதான். முட்டை அசைவப் பிரியர்களுக்கு மட்டுமல்ல பெருமளவில் முட்டை வாசத்தைச் விரும்பி சகிப்புத்தன்மையுடன் அதை ஏற்றுக் கொண்ட சைவ பட்ஷிணிகளுக்கும் முட்டை மிக மிக விருப்பமான உணவே!

6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பறவைகளின் முட்டைகளை மக்கள் உணவாகக் கொள்ளத் தொடங்கி விட்டனர். முட்டைகள் புரதச் சத்து நிறைந்தவை. அவற்றிலிருக்கும் அல்புமின், குளோபுலின் எனும் இருவகைப் புரதங்களும் மனித உடலுக்கு மிக மிக அத்யாவசியமான புரதங்கள் என்பதால் மட்டுமே அல்ல, ஆதியில் மனிதன் வேட்டையாடி தனக்கான உணவைத் தேடி  உண்ணும் வழக்கமிருக்கையில் முட்டைகளே அவனுக்கு போராட்டங்கள் ஏதுமின்றி எளிதில் கிடைக்கும் உணவுப் பொருட்களாக இருந்தன.

‘வேட்டை’ என்றாலே அது மனிதனுக்கும், மிருகங்களுக்குமான ஒரு போர் என்று தான் கொள்ள வேண்டும். அப்படி எந்த விலங்குகளுடனும் போராடாமல் பறவைகள் தங்களது கூட்டில் இட்டு வைத்திருக்கும் முட்டைகளை நைஸாக அவை இரை தேடச் சென்றதும் லவட்டிக் கொண்டு வந்து ஆரம்பத்தில் அப்படியே பச்சையாக உடைத்துக் குடித்தார்கள் மனிதர்கள். மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நெருப்பைக் கண்டுபிடித்ததின் பிறகே முட்டைகளைத் தீயில் வாட்டி உண்ணும் பழக்கம் வந்தது. அதையடுத்து கிறிஸ்து பிறப்பதற்கு 5000 ஆண்டுகளுக்கு முன் மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே உணவில் அவித்த முட்டை வழக்கம் வந்தது.

இப்படி காடுகளில் பறவைகளின் முட்டைகளைத் தேடி மனிதன் அலைந்த காலம் சில மில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம்.

கிறிஸ்து பிறப்பதற்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே சீனாவிலும், இந்தியாவிலும் மக்கள் முட்டைகளுக்காகவும், இறைச்சிக்காகவும் கோழிகளை தங்களது வசிப்பிடத்தில் வளர்க்கத் துவங்கி விட்டதாக முட்டைகளுக்கான உணவியல் வரலாறு கூறுகிறது. அதனால், அப்போதிலிருந்து இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் தேவையின்றி காட்டுப் பறவைகளின் முட்டைகளை உணவுக்காக வேட்டையாட வேண்டிய அவசியம் இல்லாது போயிற்று. 

இந்தியர்களும், சீனர்களும் வெகு பழங்காலத்திலேயே முட்டை உற்பத்தியை வீட்டிலேயே தொடங்கி இருந்தாலும், கி.பி 800 ஆம் ஆண்டுவரையிலும் கூட மேற்கு ஆசியா, ஐரோப்பா, எகிப்து உள்ளிட்ட பிரதேசங்களில் கோழி முட்டை பயன்பாடு புழக்கத்திற்கு வந்திருக்கவில்லை. தெற்கு ஆப்ரிக்காவிலும் கூட கி.மு 500 வரையிலும் கோழி முட்டை பயன்பாட்டில் இல்லாமல் தான் இருந்தது. அந்த காலகட்டத்தில் மேற்கு ஆசியாக் கண்டத்திலும், ஐரோப்பாவிலும் வாழ்ந்த மக்கள் முட்டைகளுக்காகவும், இறைச்சிக்காகவும் வாத்துக்களை வளர்க்கத் தொடங்கி இருந்தார்கள். பிறகு படிப்படியாக முட்டை உலகெங்கும் பிரசித்தி பெற்ற உணவுப் பொருளானது.

கி.மு 300 ஆம் ஆண்டில் எகிப்திலும், சீனாவிலும் இருந்த முட்டை உற்பத்தியாளர்கள் முதன்முறையாக கோழி அடைகாக்காமல் சூடான களிமண் ஓவன்கள் மூலமாக இங்குபேட்டர் முறையில் முட்டைகளை அடைகாக்கும் அறிவியல் வித்தையைக் கண்டுபிடித்தனர். இதன் மூலமாக முட்டைகளை அடைகாக்க கோழிகள் தேவையற்று போனதால் அந்தக் கோழிகளை வைத்து அவர்களால் மேலும், மேலும் முட்டை உற்பத்தியைப் பெருக்க முடிந்தது. இதனால் உற்பத்தி மலிந்து முட்டைகளின் விலை குறைந்ததால் அதை உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.

கோடையில் நமக்கெல்லாம் மாம்பழ சீஸன் வருவதைப் போலத்தான் அந்தக்காலத்தில் கோழிகள் முட்டையிட வேண்டுமென்றால் வசந்தகாலம் வர வேண்டும் என மக்கள் காத்திருந்தனர் என்கிறது வரலாறு. ஏனென்றால் கோழிகள் முட்டையிட வேண்டுமென்றால் அதற்கு நிறைந்த வெளிச்சமும், சூடில்லாத சீதோஷ்ணமும் தேவைப்படும். வசந்தகாலத்தில் தான் பூமி அப்படி இருக்கக்கூடும். எனவே முட்டை உற்பத்திக்காக மக்கள் ஒவ்வொரு ஆண்டிலும் எப்போதடா வசந்தகாலம் வரும்? என்று காத்திருக்க வேண்டியதாயிருந்தது. அப்படியே... வசந்தகாலம் வந்ததும் மக்கள் அதை முட்டைகளுக்கான ஸ்பெஷல் மாதமாகக் கருதி ஈஸ்டர் எக்ஸ், எக் ஆன் தி செடெர் பிளேட் என்று சிறந்த முட்டை உணவுகளுக்காக மாதமாகக் கொண்டாடி மகிழவும் தவறவில்லை. இன்று நாம் பின்பற்றி வரும் பல பாரம்பரிய முட்டை ரெஸிப்பிகள் அன்றிலிருந்து தொட்டுத் தொடரும் பாரம்பரிய வெரைட்டிகள் தானாம்.

இன்றைக்கு முட்டை உற்பத்தியில் அப்படியெல்லாம் எந்த கட்டுப்பாடுகளோ, காத்திருத்தலோ இல்லை. வருடம் முழுக்க நமக்கு முட்டைகள் கிடைக்கின்றன. ஏனென்றால் இன்றைய முட்டை உற்பத்தியாளர்களின் உற்பத்தி கூடங்கள் அல்ட்ரா மாடர்ன் தொழில்நுட்ப வசதிகளுடன் 24 மணி நேரமும் செயற்கையான மின்விளக்கு வசதி மற்றும் குளிர்ச்சாதன வசதிகள் கொண்டவை என்பதால் முட்டைகளுக்காக நாம் வசந்தம் எப்போதடா வரும்? என்று காத்திருக்கவே தேவையில்லை. நினைத்ததும், நினைத்த விதத்தில் முட்டையைச் சமைத்து சாப்பிடும் நிலைக்கு இப்போது நாம் வந்தாயிற்று.

இந்த முட்டை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாம்... அதைப் பாடம் செய்து வைக்கும் எப்படி மாறி விடுகிறதென்று பாருங்கள்; மஞ்சள் கரு பச்சை நிறமாகவும், வெள்ளைக்கரு பிரெளன் நிறத்திலும் இருக்கிறது.

பண்டைய ரோம் நகரில், நன்றாக அவித்த முட்டைகளை பசியைத் தூண்டக்கூடிய உணவாகக் கருதி மெயின் கோர்ஸ் உணவை சாப்பிடும் முன்பாக இப்போது சூப் அருந்துகிறோமே அதைப் போலவே முட்டையை உண்டு தொடங்குவார்களாம். இந்தப் பழக்கத்தை அவர்கள் ‘ab ova ad mala' அதாவது ‘முட்டையில் தொடங்கி ஆப்பிளில் முடி’ என்ற பதத்திலான சொல்வழக்காக எடுத்தாள்கிறார்கள். ஆனால்; இப்போது முட்டையை நாம் பிரெட், கேக், கஸ்டர்ட் பானங்கள் என எல்லாவற்றிலுமே இணைத்து பயன்படுத்தத் தொடங்கி விட்டோம்.

முட்டைகளை அவை உற்பத்தியான தேதியிலிருந்து எடுத்துக் கொண்டால் கூடுமானவரை ஒரு மாதம் வைத்திருந்து பயன்படுத்தலாம், பிறகு அவற்றைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் நிச்சயம் அவை கெட்டுப் போகும். ஒருவேளை முட்டைகளை நீண்டகாலம் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்களானால் சீனர்களைப் போல முட்டைகளையும் ஊறுகாய் போட வேண்டியது தான். சீனர்கள் முட்டைகளை உப்பு நிறைந்த நீர் மற்றும் வினிகர் சேர்த்து புளிக்க வைத்து நீண்டகாலம் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்கிறார்களாம். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் ‘ஆயிரம் ஆண்டுகள் பழமையான முட்டை’. ஆனால், நிஜத்தில் அவை சில வாரங்களோ அல்லது ஒரு மாதமோ ஆன பழைய முட்டைகளாகத்தான் இருக்க வாய்ப்புண்டு என்கிறார்கள்.

முட்டைகளைப் பற்றி இவ்வளவு பேசி விட்டு மிக மிக முக்கியமான ஒரு குறிப்பைச் சொல்லாமல் விட முடியுமா?

அதாவது, முட்டைகளை வாங்கி குளிர்ச்சாதனப் பெட்டியில் அடுக்க நினைப்பவர்கள் முதலில் அவற்றை நன்கு நீரில் கழுவித் துடைத்து விட்டு, பிறகு தான் குளிர்ச்சாதனப் பெட்டியில் அடுக்க வேண்டுமாம். கழுவாத முட்டைகளை குளிர்ச்சாதனப் பெட்டியில் அடுக்கவே கூடாது என்கிறார்கள் அமெரிக்கர்கள். ஏனெனில், கழுவாத முட்டைகள் அப்படியே கோழியில் இருந்து வெளிவந்தவை. அவற்றில் நிச்சயம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்க்கிருமிகளின் தாக்கம் இருக்கும். அவற்றை கழுவாமல் அப்படியே குளிர்ச்சாதனப் பெட்டியில் வைத்தால் அவை மேலும், மேலுமென பல்கிப் பெருகி வேண்டாத நோய்த்தொற்றில் நம்மைத் தள்ளவும் வாய்ப்புகள் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com