பல பத்தாண்டுகளாக அயோத்தி என்றாலே ஒன்று ராம ஜென்ம பூமி அல்லது பாபர் மசூதி என்ற இரண்டு விஷயங்கள் மட்டுமே மக்கள் மனதில் பதிவாகியுள்ளன. அங்கும் மக்கள் வசிக்கிறார்கள். மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் நகர்களுக்கும் கிடைக்கக் கூடிய அத்யாவசிய வசதிகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பாபர் மசூதியை முன்னிட்டு இந்து, முஸ்லிம் கலவரங்கள் அதிகமாக நிகழ வாய்ப்பிருப்பதாகக் கருதியே அயோத்தியை வந்தடைய வேண்டிய நல்ல நல்ல திட்டங்கள் அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். இந்நிலை மாற வேண்டும். உண்மையான ராமராஜ்யம் என்பது அங்கு வாழும் மக்களுக்கு கிடைக்கக் கூடிய அமைதியான வாழ்க்கைச் சூழலை ஒட்டியே கணக்கிடப்பட வேண்டும்.
எனவே அயோத்தியில் ராமர் கோயிலோ அல்லது பாபர் மசூதியோ கட்டுவதற்காக போராடுவதை விட்டு விட்டு அந்த இடத்தில் இரு மதத்தைத் சார்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது அயல்நாட்டு மாணவர்களும் வந்து பயின்று பயன்பெறும் வகையில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கலாமே என தில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மனிஷ் சிசோடியா ஆம் ஆத்மி மூத்த தலைவர்களில் ஒருவர். அக்கட்சியின் பிரதான கொள்கைகளில் ஒன்று...அனைவருக்கும் அவரவர் வசிக்கும் பகுதியிலேயே முழுமையான கல்வி வசதிகளைச் செய்து தருதல் என்பது. அக்கொள்கைக்கு ஏற்ப மனிஷ் சிசோடியா தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போது மேற்கண்ட கருத்துக்களைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மனிஷ் சிசோடியாவிடம் ராமர் கோயில் விவகாரம் பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர் தனது தரப்பு கருத்தாக வெளியிட்டது;
அங்கே ராமர் கோயிலும் வேண்டாம், பாபர் மசூதியும் வேண்டாம். இரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் பொதுவாக பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டி அனைவரும் சென்று புழங்கக் கூடிய விதத்திலான கல்விச்சாலையாக அதை மாற்றலாம். என்றார். மேலும் அவர் பேசியதிலிருந்து; ராம ராஜ்ஜியம் என்பது ராமர் கோயில் கட்டுவதில் இல்லை மாணவர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி அவற்றை மேம்படுத்துவதில் தான் இருக்க முடியும் எனவே அயோத்தியில் ராமர் கோயில், மசூதி கட்டுவதற்கான போராட்டங்களைக் கைவிட்டு இரு மதத்தைச் சார்ந்த கரசேவகர்களும், இஸ்லாமிய அன்பர்களும் அங்கு பல்கலைக்கழகம் அமைக்கப் போராடலாம். என்றார்.
கடந்த சனிக்கிழமை அன்று ஆர் எஸ் எஸ் கர சேவகர்கள் பலர், ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை வற்புறுத்தும் வகையில் ‘சங்கல்ப் யாத்ரா’ என்ற பெயரில் ரத யாத்திரை ஒன்றைத் துவக்கியுள்ள இச்சமயத்தில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும் தில்லி துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ள இக்கருத்து முக்கியத்துவம் கொண்டதாகக் கருதப்படுகிறது.