Enable Javscript for better performance
Ankit cold blodded murder at new delhi|காதலித்த பெண்ணையே பகடைக்காயாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்!- Dinamani

சுடச்சுட

  

  சுப்ரமண்யபுரம் ஸ்டைலில் காதலித்த பெண்ணையே பகடைக்காயாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 05th February 2018 11:26 AM  |   அ+அ அ-   |    |  

  ankith_murder

   

  டெல்லி, கியாலா பகுதியின் ரகுபீர் நகர் குடியிருப்பு வாளாகத்தைச் சேர்ந்த அங்கித் சக்ஸேனாவுக்கும், இஸ்லாமிய பெண்ணான சஹானாவுக்கும் இடையே ஐந்தாறு வருடங்களாகவே காதல். ஆரம்பகாலத்தில் இருவரும் அருகருகே இருந்த வீடுகளில் வசித்திருந்தனர், பின்னர் சஹானா குடும்பம் அதே குடியிருப்பில் வேறு ஒரு வீட்டுக்கு குடி பெயர்ந்த போதும் அவர்களது காதல் மட்டும் மாறாமல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.  அங்கித்தைப் பொறுத்தவரை அவர் ரகுபீர் நகர் குடியிருப்புவாசிகளின் செல்லப்பிள்ளை. அவரைப் பிடிக்காதவர்களோ, வெறுப்பவர்களோ அங்கு யாருமில்லை. 23 வயது இளம் ஃபோட்டோகிராஃபரான அங்கித், தனது நீளமான சிகையலங்காரம்,  பிறருடன் எளிதில் கலகலப்பாகப் பேசிச் சிரித்துக் கொண்டாடும் குணம் போன்றவற்றால் ஏரியாவாசிகளால் ‘மோக்லி’ எனச் செல்லப்பெயரிட்டு அழைக்கப்பட்டவர் அங்கித். 

  அப்படி ஏரியாவே கொண்டாடிய இளைஞனைத்தான் கடந்த வியாழன் அன்று இரவில் அடித்துக் காயப்படுத்தி கழுத்தறுத்து கொன்று போட்டிருக்கிறார்கள். இவ்வளவும் நடந்தது வேறெங்கோ கண்காணாத தொலைவில் அல்ல, அங்கித்தின் குடியிருப்பு வளாகத்தினுள்ளெயே தான். படுகொலையைச் செய்தது வேறு யாரும் அல்ல, யாரை அங்கித் தனது உயிராக நேசித்தாரோ அந்தப் பெண்ணின் இளைய சகோதரனால் தான் இந்த வன்கொலை நிகழ்த்தப் பட்டிருப்பதாகச் செய்தி.

  வெள்ளியன்று மாலை அப்பகுதியின் பாஜக தலைவர் மனோஜ் திவாரி அங்கித்தின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் இளைஞரின் கொலையுண்டதைப் பற்றி விசாரித்து அங்கித் மரணத்துக்கான தனது இரங்கலைப் பதிவு செய்தார். அன்று மாலையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அங்கே வருகை தர இருந்ததால் ஏரியாவில் எங்கும் பதற்றம் நிரம்பியிருந்தது. ஏனெனில் கொலையுண்டது  ஒரு இந்து இளைஞர். கொலையைச் செய்தது ஒரு முகமதிய இளைஞன் என்பதால் அந்தப் பகுதியில் மதக்கலவரத்தைத் தூண்டும்விதமான சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து விடக் கூடாதே! என்பதில் காவல்துறை மிகுந்த கவனம் செலுத்தியது. கொலையுண்ட இளைஞர் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது தனக்குத் தோணும் போதெல்லாம் பாஜகவின் துணை அமைப்புகளில் ஒன்றான பஜ்ரங்தளத்தில் ஈடுபாட்டுடன் இணைந்து பணியாற்றக் கூடியவர் என்பதால் அவருடைய மரணம் இஸ்லாமியர்களுக்கு எதிரான மதக்கலவரமாகி விடக் கூடது என காவல்துறையினர் எண்ணினர்.

  அங்கித், சஹானா காதல் விவகாரம் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகத் தொடர்ந்த போதும் இருவரது குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது 8 மாதங்களுக்கு முன்பு தான். விஷயமறிந்ததும் அங்கித் தரப்பில் காதலுக்கு பெரிதாக எதிர்ப்புகள் எழவில்லை. ஆனால், சஹானா குடும்பத்தார் இந்தக் காதலை முற்றிலுமாக எதிர்த்திருக்கிறார்கள். சஹானாவைப் பற்றி வெளிவந்த தகவல்களைப் பொருத்தவரை, அவர் மிகவும் அமைதியான பெண், அனாவசியமாக யாருடனும் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாத சுபாவம் கொண்ட பெண். தனது வீட்டிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த டியூசன் சென் ட்டருக்குச் செல்லும் போது மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வரக்கூடிய பெண்ணாக சஹானா இருந்திருக்கிறார். அப்படி டியூசன் சென் ட்டருக்கு செல்லும் போது சஹானாவை அவரது இளைய சகோதரர் தான் தனது இருசக்கரவாகனத்தில் இறக்கி விடுவது வழக்கமாம். அந்த சந்தர்ப்பத்தில் சஹானாவின் சகோதரர் அவ்விடத்தை விட்டு அகன்றதும், டியூசன் தொடங்குவதற்கு சற்று முன்பே அங்கு வந்து சஹானாவுக்காகக் காத்திருக்கும் அங்கித்துடன் சஹானா சில நிமிடங்கள் பேசுவது வழக்கம். இப்படித் தொடர்ந்த சந்திப்புகள் சஹானா வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து கொண்டு தான் இருந்திருக்கின்றன. சமீபத்தில் சஹானாவுக்குத் தனது வருமானத்தில் புதிதாக அலைபேசி ஒன்றையும் அங்கித் பரிசளித்திருக்கிறார். அந்த அலைபேசி தான் தற்போது அங்கித் உயிருக்கு எமனாகி இருக்கிறது.

  அங்கித்தைப் பொருத்தவரை அவரது ஏரியாவாசிகளுக்கு அவர் ஒரு செல்லப்பிள்ளையாகத் தான் வலம் வந்திருக்கிறார். 23 வயது இளைஞர், கலகலப்பானவர், புகைப்படக்காரர், தலைமுடியை சற்று நீளமாக வளர்த்துக் கொண்டு துறுதுறுப்பாக காலனியில் திரிந்தகாரணத்தால் அவருக்கு ‘மோக்லி’ என்ற பட்டப்பெயரும் உண்டாம். சம்பவ தினத்தன்று சஹானா, அங்கித்தை தனது வீட்டுக்கு அருகிலுள்ள ஓரிடத்தில் வந்து காத்திருக்கச் சொல்லி இருக்கிறார். அப்படிச் செய்யச் சொல்லி அவரை அவரது குடும்பத்தார் வற்புறுத்தி இருக்கிறார்கள். பின்பு சஹானாவை அடித்து, மிரட்டி அறைக்குள் வைத்துப் பூட்டி விட்டு, சஹானாவுக்காகக் காத்திருந்த அங்கித்தை பின்னாலிருந்து தாக்கி தடுமாறி விழச்செய்து கழுத்தறுத்துக் கொன்றிருக்கிறார்கள். கொலை நடந்த இடம் அங்கித்தின் வீட்டுக்கு மிக அருகில் இருந்த பகுதி தான். தமிழில் சசிக்குமார் இயக்கத்தில் சுப்ரமண்யபுரம் என்றொரு திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் காதலிக்கும் பெண்ணை விட்டே காதலனை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச்செய்து, அவனைக் கழுத்தறுத்துக் கொன்ற கொடூரம் புது டெல்லி, ரகுபீர் நகர் வளாகத்தையே தற்போது அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai