நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் வடமாநிலங்களில் பாஜகவின் விஸ்வரூப வெற்றி குறித்தும் தமிழகத்தில் அந்த வெற்றி செல்லுபடியாகாமை குறித்தும் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் தமிழகப் பிரபலமும் ஆன சுப்ரமணிய சுவாமியிடம் கேள்வியொன்று முன் வைக்கப்பட்ட போது அவரளித்த பதில்;
பாஜகவின் தனித்த மாபெரும் வெற்றிக்கு இந்திய அளவில் ஒரே ஒரு காரணம் தான் முன்னணியில் இருக்கிறது. அது இந்துத்வா கொள்கை.
இன்றைய நிலையில் கடந்த தேர்தலைக் காட்டிலும் முதன்முறை ஓட்டளிக்கக் கூடிய இளம் தலைமுறையினர் 10% அதிகரித்திருக்கின்றனர். அவர்களுக்கு தேசபக்தி அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தான் என்றாலே, அவர்களிடம் அணுகுண்டு இருக்கிறது, அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது, எல்லைப்புறச் சண்டைகளில் எதிர்த்தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்குள் போன இந்திய வீரர்கள் யாரும் உயிருடன் திரும்பி வர முடியாது என்றெல்லாம் இருந்த மாயையை உடைத்து புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் மிகச்சரியாக பழிதீர்த்துக் கொண்டது இந்தியா. காரணம் நம் வீரர்களிடையேயும், இந்திய மக்களிடையேயும் நிலவிய தேசபக்தி. அகில இந்திய அளவில் பாஜகவின் கொள்கையாக இருக்கும் இந்த எழுச்சி உணர்வை தமிழகத்தில் சரியாகத் தூண்டி விட்டாலே போதும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக எந்த மாநிலக்கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாமலே கூட தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும். அது தான் எனது விருப்பமும் கூட. அதை விட்டு விட்டு பாஜகவின் தமிழகத் தலைவர்கள் தலைமையைக் கவர இப்போது செய்து கொண்டிருக்கும் வேலைகளையே மீண்டும் தொடர்ந்து செய்வார்களானால் தமிழகத்தில் பாஜக அதிமுக, திமுக என்று எவருடனாவது கூட்டணி வைத்துக் கொண்டு அடுத்தடுத்த தேர்தல்களிலும் 4 அல்லது 5 சீட்டுகள் பெற்று அடுத்தடுத்த தேர்தல்களையும் சந்திக்க வேண்டியது தான். இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி வைப்பதைக்காட்டிலும் என்னைக் கேட்டால் நான் டிடிவி தினகரனுடன் இனி வரும் தேர்தல்களில் பாஜக கூட்டணி வைக்கலாம் என்று பரிந்துரைப்பேன்.
- என்றார் சுவாமி.
அத்துடன், பாஜக தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தது கூட சந்தர்ப்பவாதக் கூட்டணியே. இனி 2 ஆண்டுகளுக்கு மட்டும் இவர்களுடனான கூட்டணி போதுமானது. அதன் பின் இவர்களை அனுசரிக்கத் தேவை இல்லை. தற்போது ஆட்சி மாற்றம் நிகழாமல் தடுக்கவே இந்தக் கூட்டணி தேவைப்படுகிறதே தவிர பிறகும் மாநில அளவில் இவர்களுடன் இணைந்திருக்க அவசியமில்லை. கிடைத்திருக்கும் இந்த 2 ஆண்டுகள் முடிவதற்குள் தமிழக பாஜகவினர், இங்கிருக்கும் மக்கள் மனதில் கோயில்களில் திராவிடர் கழகத்தினர் அடித்து வரும் கொள்ளைகள், தெய்வ நிந்தனைகள், அராஜகங்கள் குறித்து போதுமான அளவு விழிப்புணர்வை ஏற்படுத்தி, உங்களுக்கு அவர்களால் எந்த ஒரு ஆபத்து என்றாலும் உடன் இணைந்து நின்று போராட நாங்கள் உடன் இருக்கிறோம் என்கிற தைரியத்தையும் புகுத்த வேண்டும். அப்படிப் புகுத்தினால் மக்கள் வடமாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் பாஜகவை நம்பும் நிலை வரும். அப்படித்தான் தமிழகத்தில் வேரோடி இருக்கும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் வேர்களையும், இன்னும் மிஞ்சி இருக்கும் விடுதலைப் புலிகள் குழுவைச் சார்ந்தவர்களையும் அப்புறப்படுத்த வேண்டும். இதையெல்லாம் இந்த 2 ஆண்டுகளுக்குள் செய்து முடித்து விட்டால் போதும் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்து நின்றே பெரும்பான்மை தொகுதிகளில் தமிழகத்தில் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது.
- என்றும் சுப்ரமணிய சுவாமி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.