அயோத்தியில் ராமர் கோயில் வேண்டுமென இவர்கள் எல்லாம் போராடவில்லையே ஏன்?

இங்கே இரண்டு விதமான இந்துத்வ கொள்கைகளை முன்வைக்கக் கூடிய அமைப்புகள் இருக்கின்றன. ஒன்று காந்தி கனவு கண்ட ராமராஜ்ஜியம் அமைய வேண்டும் என்று நினைக்கும் இந்துத்வ அமைப்பு. இன்னொன்று காந்தியை
rama jenma boomi
rama jenma boomi

ராமாயணத்தை எழுதியது வால்மீகி. ஆனால், அவர் சமஸ்கிருதத்தில் எழுதியிருந்த ராமாயணம் வெகுஜன மக்களைச் சென்று அடையவில்லை. அக்பர் காலத்தில் வாழ்ந்த துளசிதாஸரின் ராமாயணம் தான் பொதுமக்களைச் சென்றடைந்த ராமாயணமாகக் கருதப்படுகிறது. துளசிதாஸர் மிகச்சிறந்த கவி. ஸ்ரீராமர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். அவரது திறமையை மெச்சிய முகலாய மன்னர் அக்பர், தானே மெனக்கெட்டு அவரை கெளரவிக்க அரண்மனைக்கு அழைத்து விருந்தளித்து உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்! என்கிறார். துளசிதாஸர் வாழ்ந்தது அயோத்தியில்.. அவருக்குத் தெரியாதா ராமர் பிறந்த இடம் எதுவென்று?! அவரால் கேட்டுப் பெற்றிருக்க முடியாதா? அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஒரு இடத்தை? சரித்திரத்தில் இப்படியும் நடந்திருக்கிறது. இதற்கு ஆவணங்களும் உண்டு.

அதை விடுங்கள். பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு ஒரு உயில் எழுதுகிறார்.. அதில், இந்த நாடு பலதரப்பட்ட மக்களைக் கொண்ட நாடு. அவர்களது நம்பிக்கைகள் பலவிதம். அதில் எதையும் சிதைக்காமல் மன்னனது ஆட்சி இருக்க வேண்டும். செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதாக நீள்கிறது பாபரின் உயில். இதற்கும் ஆவணங்கள் உண்டு. அப்படிப் பட்ட கொள்கைகள் கொண்ட பாபரா இந்துக்கோயிலை இடித்து விட்டு அதன் மீது மசூதி கட்டி இருப்பார்? நாம் யோசிக்க வேண்டிய இடமிது. 

அடுத்து பிரிட்டிஷ் காலத்திலும் கூட பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் என்று இந்து கொள்கைகளை முன் வைக்கக் கூடிய அமைப்புகள் இருந்தன. இந்த அமைப்புகளைச் சார்ந்தவர்களும் ராமஜென்ம பூமி குறித்த  கோரிக்கைகளை முன் வைக்கவில்லை.

அவர்களுக்குப் பிறகு இன்று பாஜக கொண்டாடுகின்ற விவேகானந்தர் அவர் 1904 ல் இறந்தார். அவர் கூட இந்தக் கோரிக்கையை முன் வைக்கவில்லை. அவருடைய குருவாக இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் இந்தக் கோரிக்கையை முன் வைக்கவில்லை.

அப்படியானால், இந்தக் கோரிக்கையானது எப்போது எழுகிறது?

1948 - 49 காலகட்டத்தில் இந்துத்வ அமைப்புகளால் தானே முன்னெடுக்கப்படுகின்றன.

எந்த இந்துத்வ அமைப்பு என்பதையும் பார்க்க வேண்டும்.

இங்கே இரண்டு விதமான இந்துத்வ கொள்கைகளை முன்வைக்கக் கூடிய அமைப்புகள் இருக்கின்றன.

ஒன்று காந்தி கனவு கண்ட ராமராஜ்ஜியம் அமைய வேண்டும் என்று நினைக்கும் இந்துத்வ அமைப்பு. இன்னொன்று காந்தியை மறுத்த இந்துத்வ போக்கு ஒன்று. அதாவது சனாதன தர்மத்தை முன் வைக்கின்ற இந்துத்வ போக்கு.

இதில் காந்தியை எடுத்துக் கொள்ளுங்கள்.

காந்தி தாம் இறக்கும் தறுவாயில் கூட ‘ஹேராம்’ என்று சொல்லித்தானே உயிர் விட்டார் என்று நம்புகிறோம். அப்படிப்பட்டவர்களால் எல்லாம் ராமஜென்ம பூமியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் எழுப்ப வேண்டும் என்ற கேள்வி முன் வைக்கப்படவில்லையே.

இப்படிப்பட்ட வரலாற்றுப் பின்னணியில் தான் நாம் ராமர் கோயில் பற்றிய கோரிக்கையப் பற்றி பார்க்க வேண்டும். தீர்ப்பைப் பார்ப்பதற்கு முன்பு இந்தப் பின்னணியைப்பற்றிய அறிதல் அவசியம்.

அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்த போது கட்டடங்கள் கிடைத்ததாகச் சொல்கிறார்கள். அது மிகப்பழைய ஊர். எப்போதுமே அகழ்வாராய்ச்சி செய்வதற்காக நிலத்தைத் தோண்டும் போது கட்டடங்கள் கிடைக்கத்தான் செய்யும். ஆனால், அந்தக் கட்டடங்கள் இந்து சமயத்துடன் தொடர்புடைய கட்டடங்கள் இல்லை என தொல்லியல் துறை கூறியிருக்கிறது. அதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அப்படி இருக்கும் போது எந்தக் கோயிலையும் இடிக்காமல் உருவாக்கப்பட்ட ஒரு மசூதியை, அங்கு ராமர் பிறந்தார் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்து இடிப்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை. புராண ஆதாரங்களாவது இருக்க வேண்டுமில்லையா? இந்தப் புள்ளியில் தான், இந்த இடத்தில் தான், இந்த 2.77 ஏக்கரில் தான் ராமர் பிறந்தார் என்பதற்கு அங்கே புராண அடையாளமாவது இருக்க வேண்டுமில்லையா? அப்படி எதுவும் இல்லை. அயோத்தி என்பது பெரிய ஊர், அங்கே எங்கே வேண்டுமானாலும் ராமர் பிறந்த இடம் இருக்கலாம். அந்த இடத்தில் ஒரு காலத்தில் கங்கையே  கூட ஓடியிருக்கலாம். ஆற்றின் போக்கு மாறி மாறி வரக்கூடிய இடம் தானே அது!

ஆக, இந்த கோரிக்கையைத்தான் நாம் மேலும் மேலும் முக்கியமாகப் பார்க்க வேண்டிதாயிருக்கிறது.

இந்தக் கோரிக்கையை அனைத்து மக்களுமா முன் வைத்தார்கள்?

கோரிக்கையை வைத்தது இந்து அமைப்புகள் தானே?!

அயோத்தி தீர்ப்பு குறித்த கருத்துக் கேட்பின் போது திருமுருகன் காந்தி ஊடக நேர்காணல் ஒன்றில் மேற்கண்ட கேள்விகளை எழுப்பியிருந்தார். 

நியாயமான கேள்விகளே.. இந்து அமைப்புகளிடம் இதற்கான பதில் இருந்தால் சொல்லுங்கள்.

ஏனென்றால், விவேகானந்தரைக் காட்டிலும் இந்து மதத்திற்காகப் பாடுபட்ட ஒரு துறவியைக் காண்பது அரிது. அவரே இப்படிப்பட்ட கோரிக்கையை முன் வைக்காத போது இந்திய விடுதலைக்குப்பின் விஸ்வரூபமெடுத்த இந்த கோரிக்கையின் பின்னணியில் ஸ்ரீராம பிராண் மீதான பக்தியைக் காட்டிலும் அரசியல் ஆதிக்கம் பெறும் முனைப்பு தான் மேலோங்கி இருக்கிறதா? எனும் கேள்விக்கான பதிலைப் பெறும் உரிமை மக்களுக்கு இருக்கிறது தானே?!

Image Courtesy: haribhakt.com

Concept Courtesy: nakkeeran tv

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com