இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் கடும் சரிவைச் சந்தித்தவர்கள் யார்?!

கோடீஸ்வரர் திலீப் ஷாங்க்வியின் சொத்து மதிப்பானது கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது தற்போது 20 சதவீதம் சரிந்து சுமார் 71,500 கோடி ரூபாயாக உள்ளது
இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் கடும் சரிவைச் சந்தித்தவர்கள் யார்?!

ஐஐஎஃப்எல் வெல்த் மற்றும் ஹுருன் இந்தியா இணைந்து வெளியிட்ட இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, ரூ. 3.80 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், தொடர்ந்து 8 -ஆவது ஆண்டாக அவர் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். 

இதுதொடர்பாக ஐஐஎஃப்எல் வெல்த் மற்றும் ஹுருன் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். ரூ. 1.86 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் எஸ்.பி. ஹிந்துஜா சகோதரர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். ரூ. 1.17 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். அதற்கு அடுத்தபடியாக, ஆர்செலார்மிட்டல் நிறுவனத்தின் சிஇஓ லட்சுமி மிட்டல், ரூ. 1.07 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 4 ஆவது இடத்திலும், ரூ. 94 ஆயிரத்து 500 கோடி சொத்து கோடி மதிப்புடன் கெளதம் அதானி 5 ஆவது இடத்திலும் உள்ளனர். அதையடுத்து, உதய் கோட்டக் (ரூ. 94,100 கோடி), சைரஸ். எஸ். பூனாவாலா(ரூ. 88,800 கோடி), பலோஞ்சி மிஸ்திரி (ரூ. 76,800 கோடி), ஷாபூர் பலோஞ்சி, திலீப் சிங்வி (ரூ. 71,500 கோடி) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் முதல் 25 இடத்தில் உள்ளவர்களின் சொத்துமதிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 10 சதவீதமாக உள்ளது. ரூ. 1,000 கோடிக்கும் மேல் சொத்து மதிப்புடையவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிகரித்து 953 ஆக உள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 26 சதவீதம் பேர், மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வசிப்பவர்களாக உள்ளனர். மேலும், 82 வெளிநாடு வாழ் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். 152 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். "ஹெச்சிஎல்' இயக்குநர் ரோஷினி நாடார், இந்தியாவின் பணக்காரப் பெண்களில் முதலிடத்தில் உள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்த ஆய்வை மேற்கொண்ட நிறுவனங்கள் கூறுகையில், "இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அடுத்த 5 ஆண்டுக்குள் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை இதைவிட 3 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றன.

தவிர;

ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா வெளியிட்ட மேற்கண்ட பணக்கார பட்டியல் 2019 இன் படி, குறைந்தது 344 நபர்கள், அல்லது இந்த ஆண்டு பட்டியலில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேறப்ட்டோர், தங்களுடைய கடந் கால வெற்றிகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் டாப் 250 பட்டியலில் இருந்து கீழிறங்கி சரிவைச் சந்தித்த காட்சிகளும் அரங்கேறி இருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர்களில் சுமார் 112 பேர் 1,000 கோடி ரூபாயை வெற்றி இலக்கை எட்டுவதில் தோல்வியுற்றனர் - இது கிட்டத்தட்ட பாதி ஆண்டுப் பட்டியல் தான் எனும் போது இன்னும் முழு ஆண்டுக்கான பட்டியலில் இந்த வரிசைகளில் சிற்சில மாற்றங்களும் நிகழ வாய்ப்பிருக்கலாம்.

உதாரணமாக, கோடீஸ்வரர் திலீப் ஷாங்க்வியின் சொத்து மதிப்பானது கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது தற்போது 20 சதவீதம் சரிந்து சுமார் 71,500 கோடி ரூபாயாக உள்ளது. 2016 ல் எடுக்கப்பட்ட சர்வே அடிப்படையில் பார்த்தால், திலீப் ஷாங்க்வி தன்னுடைய பழைய சொத்து மதிப்பில் பாதியை இழந்து 2016 ல் தான் அடைந்திருந்த இரண்டாவது இடத்திலிருந்து 2019 ல் பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

ஆர்சலர் மிட்டல் நடத்தி வரும் ஸ்டீல் மேக்னட் லட்சுமி என் மிட்டல், ரூ1.07 லட்சம் கோடி சொத்துக்களைக் கொண்ட நான்காவது பணக்காரர், ஆனால் அவரது நிகர மதிப்பானது 6 சதவீதம் குறைந்து சமீப காலங்களில் உலோகத் துறையில் நிலவும் சரிவை ஒத்துக் காணப்படுகிறது.

பணக்கார பட்டியலில் இருந்து வெளியேறியவர்களில் அனில் அம்பானியும் ஒருவர். அம்பானியின் பட்டியலிடப்பட்ட வணிக சாம்ராஜ்யத்தின் பங்கு மதிப்பு ரூ2,000 கோடியாக குறைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com