‘ஆப்ரேஷன் பனானா’ சிரிக்க அல்ல சிந்திக்க வைக்கும் போலீஸ் நடவடிக்கை!

திருடன் விழுங்கிய தங்கச் சங்கிலியை வயிற்றில் இருந்து வெளிக்கொண்டு வர வேண்டுமென்றால் அவனது குடல் சுத்தமாக வேண்டும். இயற்கையான முறையில் அது நிறைவேற வேண்டுமென்றால் அதற்குத் தேவை பொட்டாசியம் சத்துக்கள்
‘ஆப்ரேஷன் பனானா’ சிரிக்க அல்ல சிந்திக்க வைக்கும் போலீஸ் நடவடிக்கை!

ராஜஸ்தான் பிகானிர் போலீஸ்காரர்கள் கடந்த செவ்வாயன்று இரண்டு திருடர்களுக்கு வாழைப்பழங்களை சாப்பிடத் தந்து கொண்டிருந்தார்கள். அன்பு மிகுதியால் அல்ல. திருடப்பட்ட பொருளை கண்டுபிடிக்க. 

ராஜஸ்தான், பிகானிரில் கங்காசாகர் பகுதியில் செவ்வாயன்று ஷாப்பிங்கில் ஈடுபட்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பைக்கில் வந்த திருடர்கள் இருவர் பறித்துச் சென்றனர். திருட்டு குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாகப் போலீஸாரிடம் தெரிவித்ததில் சம்பவம் நடந்த ஓரிரு மணி நேரங்களுக்குள் அந்த திருடர்கள் பிடிபட்டு விட்டார்கள். அவர்களில் ஒருவன் திருடிய தங்கச் சங்கிலியை போலீஸாரிடம் இருந்து மறைக்கும் பொருட்டு விழுங்கி விட்டான். இதை அறிந்து கொண்ட போலீஸ்காரர்கள் திருடப்பட்ட பொருளை மீட்க நடத்தியது தான் மேலே சொல்லப்பட்ட ‘பனானா ஆப்ரேஷன்’

திருடர்களைப் பிடித்த ராஜஸ்தான் போலீஸார் உடனடியாக அவர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதில் சங்கிலியை விழுங்கியவனைப் பரிசோதித்த மருத்துவர் எக்ஸ்ரே எடுக்கச் சொல்லிப் பரிந்துரைத்தார். எக்ஸ்ரேவில் திருடன் விழுங்கிய தங்கச் சங்கிலி அவனது குடல் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. குடலில் இருந்து தங்கச் சங்கிலியை வெளியில் எடுக்க வேண்டுமென்றால் ஒன்று எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அல்லது திருடனை மலம் கழிக்கச் செய்ய வேண்டும். இரண்டில்... இரண்டாவதாகச் சொல்லப்பட்டதே துன்பமற்ற முறை என்று மருத்துவர் பரிந்துரைக்க அதை உடனே சிரமேற்றுக் கொண்டு செயல்படுத்தத் தொடங்கியது போலீஸ்.

சங்கிலியை விழுங்கிய திருடனுக்காக 2 டஜன் வாழைப்பழங்களும், பப்பாளிப்பழங்களும் வாங்கப்பட்டன. அதை திருடனை வற்புறுத்தி சாப்பிடச் செய்தார்கள். ஒருவழியாக திருடன் கக்கா போனார். மலத்துடன் சேர்ந்து சங்கிலியும் சுலபமாக வெளியேறியது.

‘ஆப்ரேஷன் பனானா’ என்றால் என்ன?

திருடன் விழுங்கிய தங்கச் சங்கிலியை வயிற்றில் இருந்து வெளிக்கொண்டு வர வேண்டுமென்றால் அவனது குடல் சுத்தமாக வேண்டும். இயற்கையான முறையில் அது நிறைவேற வேண்டுமென்றால் அதற்குத் தேவை பொட்டாசியம் சத்துக்கள் நிரம்பிய பழங்கள். அதற்கு மட்டுமே குடலை வாரி, வழித்து சுத்தப்படுத்தும் திறன் உண்டு. தினமும் படுக்கைக்குப் போகுமுன் வாழைப்பழங்களை உண்ணும் வழக்கமுள்ளவர்களுக்கு இது நன்றாகவே தெரிந்திருக்கக் கூடும். அதனால் திருடர்களுக்கு பொட்டாசியம் சத்து நிறைந்த வாழை மற்றும் பப்பாளிப் பழங்கள் அளவுக்கு அதிகமாக  உண்ணத் தந்தனர். இதை வாழைப்பழ சிகிச்சை என்றும் சொல்லலாம். இதில் திருப்திகரமான முடிவு என்பது அந்த நிமிடம் வரை நாம் விழுங்கி குடலில் சேகரமான அத்தனை பொருட்களும் முழுவதுமாக குடலை விட்டு வெளியேறுவது தான்.

பிகானிர் சங்கிலிப் பறிப்பு சம்பவத்தில் ராஜஸ்தான் போலீஸாரின் ‘ஆப்ரேஷன் பனானா’ நடவடிக்கை ஒருவழியாக சச்சஸில் முடிந்தது.

இது போன்ற சங்கிலிப் பறிப்பு திருட்டுகளில் போலீஸார் ஆப்ரேஷன் பனானா நடவடிக்கையில் இறங்குவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் இத்தகைய நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு போலீஸ் ரெக்கார்டுகள் உள்ளன. முன்பொருமுறை இதே விதமாக திருட்டில் ஈடுபட்ட திருடனுக்கு 4 டஜன் வாழைப்பழங்களை வற்புறுத்தித் தின்னக் கொடுத்து திருடிய பொருளை மீட்ட உதாரணங்களும் போலீஸாருக்கு உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com