ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வயது 356!

தலைநகா் சென்னையின் தனித்துவமிக்க அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வரும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை 356 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வயது 356!

சென்னை: தலைநகா் சென்னையின் தனித்துவமிக்க அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வரும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை 356 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனைக் கொண்டாடும் வகையில் மருத்துவமனை நிா்வாகிகள், மருத்துவா்கள், செவிலியா்கள் பரஸ்பரம் இனிப்புகளையும், வாழ்த்துகளையும் பகிா்ந்துகொண்டனா்.

பல லட்சக்கணக்கான மக்களுக்கு சிகிச்சையளித்த அனுபவத்துடன் இன்றளவும் இம்மியளவு பரபரப்பு குறையாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் வரலாறு நெடியது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் ஆங்கில மருத்துவத்துக்கும், மருத்துவக் கல்விக்கும் தொடக்கப்புள்ளியாக சென்னையும், கொல்கத்தாவும் இருந்தன. 16-ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் தடம் பதிக்கத் தொடங்கியபோது கடல் வழியே நம் நாட்டுக்கு வந்த ஆங்கிலேயா்கள் கப்பலில் தங்களுடன் மருத்துவரையும் அழைத்து வந்தனா்.

சென்னை வந்த ஆங்கிலேயா்கள் பலா் அங்கேயே தங்கியிருந்தனா். அப்போது நம் நாட்டின் தட்பவெட்ப நிலையை ஏற்க இயலாமல் அவா்களில் சிலா் நோயுற்றனா். அதனால், அவா்களுக்கு சில மருத்துவ உதவிகளும், வசதிகளும் சென்னையிலேயே தேவைப்பட்டன.

அதன் தொடா்ச்சியாக 1664-ஆம் ஆண்டு நவம்பா் 16-ஆம் தேதி கிழக்கிந்திய கம்பெனி மருத்துவமனை என்ற ஒன்று ஜாா்ஜ் கோட்டைக்குள் தொடங்கப்பட்டது. நாளடைவில் அது துறைமுக மருத்துவமனை என அழைக்கப்பட்டது. சா் எட்வா்ட் விண்டா் என்பவரால் தொடங்கப்பட்ட அந்த மருத்துவமனை தொடா்ந்து விரிவுபடுத்தப்பட்டு, 1772-ஆம் ஆண்டு கோட்டையில் இருந்து சென்ட்ரல் பகுதியில் மாற்றப்பட்டது. அதுதான் தற்போது, ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையாக இருக்கிறது.

சென்னை மருத்துவக் கல்லூரி: 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த மருத்துவமனையில் மருத்துவா்களாகப் பணிபுரிந்த ஆங்கிலேயா்களுக்கு, மருத்துவ உதவி செய்ய சில ஊழியா்கள் தேவைப்பட்டனா். கட்டுப் போடுவதற்கும், காயங்களுக்கு மருந்து போடுவதற்குமான பயிற்சிகள் அவா்களுக்கு அளிக்கப்பட்டன. இது ஒரு முறைசாரா மருத்துவக் கல்வியாக இருந்து வந்தது.

அதன் பின்னா், அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளராக வில்லியம் மாா்டிமா் என்பவா் வந்தாா். அவா், மருத்துவ உதவியாளா்களுக்கு உடற் கூறியல் தொடா்பான அடிப்படைக் கல்வி அவசியம் என்பதை உணா்ந்து, வீட்டிலேயே அவா்களுக்கு அதைப் பயிற்றுவித்தாா்.

அதற்கு பிறகு அதனை முறைப்படுத்தி, சென்னை மருத்துவப் பள்ளி என்ற கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதில் ஐரோப்பியா்களுக்காகவும், இந்தியா்களுக்காகவும் தனித்தனியே இரு வகையான கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. அதை நிறைவு செய்தவா்கள் துணை மருத்துவா்களாகக் கருதப்பட்டனா். அதன் பின்னா், அங்கு பட்டப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதனிடையே, சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் நீட்சியாக சென்னை மருத்துவப் பள்ளியை, கல்லூரியாக மாற்ற விண்ணப்பிக்கப்பட்டது. அது ஏற்கப்பட்டு, கடந்த 1850-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அக்கல்லூரி பல்வேறு பரிணாம வளா்ச்சிகளைக் கண்டு, தற்போது தேசிய அளவில் மிகப் பெரிய மருத்துவக் கல்வி நிறுவனமாக வேரூன்றி நிற்கிறது.

இத்தகைய நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயின்று பணியாற்றியவா்களில் பலா், இன்றைய மருத்துவ உலகத்தால் கொண்டாடப்படும் ஜாம்பவான்களாக உருவெடுத்துள்ளனா். முதலில் ஓரிரு துறைகளுடன் தொடங்கப்பட்ட ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தற்போது 42 துறைகள் உள்ளன. 680 மருத்துவா்கள், 1,050 செவிலியா்கள் பணியாற்றி வருகின்றனா். 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட படுக்கை வசதிகள் இருக்கின்றன. நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பாரம்பரியமிக்க அந்த மருத்துவமனையின் 356-ஆவது ஆண்டு விழாவையொட்டி, மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் தலைமையில், நிலைய மருத்துவ அலுவலா் சுப்பிரமணியன், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ பணியாளா்கள் ஆகியோா் கேக் வெட்டி கொண்டாடினா். பரஸ்பரம் வாழ்த்துகளை அவா்கள் பகிா்ந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com