பிளஸ் 2 மாணவ, மாணவியரின் 'டேட்டாபேஸ்' விற்பனைக்கு! - வாட்ஸ்ஆப்வழி கிடைக்கிறது - EXCLUSIVE

வாட்ஸ்ஆப் வழியே உங்களுக்குத் தேவையான மாவட்டங்களின் மாணவர்,  மாணவியர்கள் பற்றிய தகவல்கள் மிகக் குறைந்த விலைக்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன.
பிளஸ் 2 மாணவ, மாணவியரின் 'டேட்டாபேஸ்' விற்பனைக்கு! - வாட்ஸ்ஆப்வழி கிடைக்கிறது - EXCLUSIVE

உங்கள் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்காக, இந்த ஆண்டு பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவியர் பற்றிய தகவல் தொகுப்பு வேண்டுமா?

வாட்ஸ்ஆப் வழியே உங்களுக்குத் தேவையான மாவட்டங்களின் மாணவர்,  மாணவியர்கள் பற்றிய தகவல்கள் மிகக் குறைந்த விலைக்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன.

நமக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் உரையாடல் ஒலிப்பதிவுகளிலிருந்து, பரபரப்பான இந்த விற்பனை மிக எளிதாக வாட்ஸ்ஆப், கூகுள்பே வழியே நடைபெறுவதாகத் தெரிகிறது.

இந்த வாட்ஸ்ஆப் தகவலில், 2021 - தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு மெட்ரிக் மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் மாணவ, மாணவியர் (அனைவரும் தேர்ச்சி) பற்றிய தகவல்கள் விற்பனைக்கு... 16 மாவட்டங்களின் தகவல்கள் கிடைக்கும்... எனக் குறிப்பிட்டு,

1. செங்கல்பட்டு - 13564 பேர்,
2. சென்னை - 15790
3. கோவை - 18551
4. தர்மபுரி - 6980
5. ஈரோடு - 13181
6. கள்ளக்குறிச்சி - 7347
7. மதுரை - 12129
8. நாமக்கல் - 10149
9. சேலம் - 14484
10. சிவகங்கை - 4563
11.தஞ்சாவூர் - 15492
12. திருவள்ளூர் - 18919
13. திருவண்ணாமலை - 7854
14. திருப்பூர் - 10240
15.திருச்சி - 8228
16. விழுப்புரம் - 5588

மொத்த எண்ணிக்கை - 1,83,059

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், சார் மருத்துவம், செவிலியர் படிப்புச் சேர்க்கை, பொறியியல் படிப்புச் சேர்க்கை, கலை - அறிவியல கல்லூரிகள், பாலிடெக்னிக், உணவு சமையற்கலை, கடற்தொழில், வெளிநாட்டுப் படிப்புகள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கு உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டு விலை விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள், வாட்ஸ்ஆப் எண்கள் எல்லாம் தரப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவருடன் ஒருவர் உரையாடியபோது, இந்தத் தகவல்களை விற்பதாகக் கருதப்படும் நபர் கூறுகிறார்:

"விவரங்கள் அனுப்பியுள்ளேன். லிஸ்ட்டில் எந்தெந்த டிஸ்ட்ரிக்ட்ஸ் இருக்கிறதோ, அந்த ட்ஸ்ட்ரிக்ட்ஸ்தான் இந்த ஆண்டு வந்திருக்கிறது. இதுதான் டிபிஇ டிபார்ட்மென்ட் ஆப் எஜுகேசன், அவங்ககிட்டேயிருந்து டேட்டாபேஸ் புரவைடர்ஸுக்குக் காசு கொடுத்து நாங்கள் வாங்கியிருந்தோம். இது லாஸ்ட் மன்த், 15 ஆயிரம் ரூபாய் சார்ஜுங்க, இப்ப நாங்க வந்து டோட்டல் டேட்டாபேஸே 5 தவுசன்ட்ஸ்க்குத்தான் கொடுத்துக்கிட்டிருக்கோம். அதிலிருந்து கம்மி பண்ணிதான் கொடுத்திட்டிருக்கோம். பாருங்க, சாம்பிள் அனுப்பியிருக்கிறேன். நாமக்கல் மாவட்டம் பக்கத்துல எல்லாமே இருக்கு. சாம்பிள் அனுப்பியிருக்கேன், பாருங்க. பார்த்துட்டு சொல்லுங்க.

"நாமக்கல் மட்டும் வேணும்னாலும் நாமக்கல் மட்டும் தருகிறேன். ஓகேன்னா சொல்லுங்க. நேத்து நான் உங்களுக்கு எவ்வளவு ரேட் சொல்லியிருக்கிறேன் எனத் தெரியும். உங்களுக்கு ஓகே என்றால் சொல்லுங்கள். ஜிபே நம்பர் அனுப்புகிறேன். அதுல டெபாசிட் பண்ணிட்டு எனக்கு ஒரு ஸ்கிரீன் ஷாட்  அனுப்புங்க, நான் உங்களுக்கு இந்த டேட்டாபேஸ் அனுப்புகிறேன். பாருங்க, அனுப்பிச்சுட்டு எனக்கு ஒரு ஸ்கிரீன் ஷாட் அனுப்புங்க."

இதுபற்றிக் கல்வியாளர்களிடம் விசாரித்தபோது, இவ்வாறு மாணவ, மாணவியர்கள் பற்றிய தகவல்கள் விற்பனைக்கெல்லாம் கிடைக்காது என்றும்  இது சட்டவிரோதம் என்றும் தெரிவித்தனர்.

ஆனால், சில மாவட்டங்களில் தாராளமாக வாட்ஸ்ஆப் வழி பேரம்பேசி விற்கப்பட்டுக்கொண்டிருக்கிறது மாணவ, மாணவியர் பற்றிய தகவல்கள்.

இவற்றைக் கொண்டு, சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியரை நேரடியாக தொடர்புகொண்டு தங்கள் கல்வி நிறுவனங்களை முன்னிறுத்தி அவற்றில் சேருவதற்கான முயற்சிகளை நிர்வாகங்களால் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com