சென்னை அன்றும்..இன்றும்.. சுவாரசிய தகவல்கள்!

சென்னை உருவாகி 382 ஆண்டுகள் தான் ஆனதாக இன்று கொண்டாடினாலும் குறைந்தது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சென்னை மாநகரம் இருந்ததற்கு பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. 
சென்னை அன்றும்..இன்றும்.. சுவாரசிய தகவல்கள்!

சென்னை உருவாகி 382 ஆண்டுகள் ஆனதாக இன்று கொண்டாடினாலும் குறைந்தது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சென்னை மாநகரம் இருந்ததற்கு பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. 

கி.மு. 31 ஆம் நூற்றாண்டில் மயிலாப்பூர் பகுதியில் வள்ளுவர் பிறந்ததாகவும் தற்போதுள்ள செயின்ட் தாமஸ் தேவாலயம் கி.பி. 52-70 நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலை நந்திவர்மன் எனும் மன்னன் கி.பி. 806ல் கட்டியதாகவும் வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பல வரலாற்று ஆவணங்களும் சென்னை, இந்தியாவிலேயே மிகப் பழமையான  நகரம் என்று கூறுகிறது. 

முற்காலத்தில் தொண்டை மண்டல மாகாணத்தில் கடலூர், பெண்ணாறு நதிக்கும் நெல்லூர் பெண்ணாறு நதிக்குமிடையில் அமைந்திருந்த சென்னை மாகாணத்தின் தலைநகராக காஞ்சிபுரம் இருந்தது. பல்லவர்கள், சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளதாகவும் தகவல்கள் இருக்கின்றன. 

1639ல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு ஹோகன் ஆகிய இருவரும் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவுவதற்காக அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரிடமிருந்து  செயின்ட் ஜார்ஜ் கோட்டை/தலைமைச் செயலகம் இருக்கும் இடத்தை வாங்கினர். இவர்களது தந்தையின் பெயரான  சென்னப்ப நாயக்கர் நினைவாகவே கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மதராசப் பட்டினம், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 1996ல் 'சென்னை' என்று அதிகாரபூர்வமாக பெயர்மாற்றம் மாற்றப்பட்டது. 

தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நினைவூட்டும் பொருட்டு கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 'மெட்ராஸ் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. 

தற்போது தில்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னை நான்காவது மிகப்பெரிய நகரமாக இருக்கிறது. உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை மெரினா, மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு, வரலாற்று சிறப்புமிக்க ரிப்பன் மாளிகை, தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம் ஆகிய கட்டங்களை கொண்டிருக்கிறது. 

அவற்றில் சென்னைவாசிகளின் மனதிற்கு நெருக்கமான முக்கிய சில இடங்கள்..

சென்னை சென்ட்ரல்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 1873 ஆம் ஆண்டு உருவானது. பின்னர் 1959, 1998ல் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. முதல்முதலாக 1856ல் ராயபுரம் முதல் ஆற்காடு வரை ரயில் சேவை தொடங்கப்பட்டது. 'மெட்ராஸ் சென்ட்ரல்' என்ற பெயர் 1996ல் 'சென்னை சென்ட்ரல்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 17 நடைமேடைகளுடன் 30 வழித்தடங்களைக் கொண்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 6.50 லட்சம் முதல் 10 வரை பயணிகள் வருகின்றனர்.

சென்னை புறநகர் ரயில் சேவை 1931ம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

எழும்பூர் ரயில் நிலையம்: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 1905 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையம் உருவாகி 33 ஆண்டுகளுக்குப் பிறகே எழும்பூர் ரயில் நிலையம் உருவாகியுள்ளது.

அந்தவகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பழமை வாய்ந்தது. எழும்பூர் ரயில் நிலையம் 11 நடைமேடைகளைக் கொண்டுள்ளது. தென்பகுதிகளுக்குச் செல்லும் பெரும்பாலான ரயில்கள் இங்கிருந்தே செல்கின்றன. நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். 

சென்னையின் 3வது ரயில் நிலையமாக தாம்பரம் ரயில் நிலையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

சென்னை உயர்நீதிமன்றம்: இந்தியாவின் மிகப்பழமையான நீதிமன்றம் என்ற புகழைப்பெற்ற மெட்ராஸ் ஹைகோர்ட் உருவாக பிரிட்டிஷ் குயின் ராணி விக்டோரியா 26, ஜூன் 1862ல் அனுமதி அளித்தார். ஆனால் 1892ல் தான் தற்போதுள்ள கட்டிடம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. 

ரிப்பன் மாளிகை: ரிப்பன் மாளிகை 1909ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1913ம் ஆண்டு வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டது.  இதனை லோகநாத முதலியார் என்பவர் ரூ.7,50,000 செலவில் காட்டிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதனை உருவாக்க பிரிட்டிஷின் ரிப்பன் பிரபு முக்கிய காரணமாக இருந்ததால் அவரது நினைவாக 'ரிப்பன் மாளிகை' என பெயரிடப்பட்டது. சென்னை மாநகராட்சியின் அனைத்து முக்கிய அலுவல்களும் இங்குதான் நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. 

மெரினா கடற்கரை: உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரை 13 கி.மீ நீளம் கொண்டது. வார இறுதி நாள்களில் சென்னை மக்களின் ஆகச்சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருக்கிறது. 

இங்குள்ள எம்ஜிஆர் நினைவிடம், அண்ணா நினைவிடம், கலைஞர் கருணாநிதி நினைவிடம், ஜெயலலிதா நினைவிடத்தைக் காண மற்ற மாநிலங்களில் இருந்தும் வருவது வழக்கம். கலங்கரை விளக்கம் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. மெரினாவை சுற்றியுள்ள சாலை 1885ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

சேப்பாக்கம் மாளிகை: 1768ம் ஆண்டு முதல் 1855ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 'சேப்பாக்கம் பேலஸ்' தான் ஆற்காடு நவாப் தங்கியிருந்த இடமாகும். முன்னதாக இப்பகுதிகள் ஆற்காடு நவாபின் வசம் இருந்தது. 

முகமது அலி கான் வாலாஜா என்ற ஆற்காடு மன்னர்தான் 1764ம் ஆண்டு ஜார்ஜ் டவுனில் ஒரு அரண்மனை கட்ட வேண்டும் என்று விரும்பினார். அதன்படியே கட்டி முடித்து வாழ்ந்த அவர் பிற்காலத்தில், பட்ட கடனை அடைக்க முடியாமல் அதை ஆங்கிலேயே அரசுக்கு கொடுத்துவிட்டார். 1871ல் பொதுப்பணித்துறை கட்டிடமாக மாற்றப்பட்டது. தற்போதுள்ள எழிலகத்தின் பெரும்பாலான பகுதிதான் நவாப் அரண்மனை. 

சென்னை பல்கலைக்கழகம்: 1857ல் உருவாக்கப்பட்ட மெட்ராஸ் யூனிவர்சிட்டி இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகமாகும்.  தன்னாட்சிக் கல்லூரிகளை முதல் முறையாக தொடங்கியது சென்னை பல்கலைக்கழகம். முன்னதாக 1864-65ம் ஆண்டு மெட்ராஸ் பிரெசிடென்சி கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது

அரசு மருத்துவமனை: 1664ம் ஆண்டு ஜார்ஜ் டவுனில் ஆரம்பிக்கப்பட்டதுதான் சென்னை அரசு மருத்துவமனை. 1772ம் ஆண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்பாக மாற்றப்பட்டது. தற்போது ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையாக உலகின் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. 

நேப்பியர் பாலம்: சென்னை ஜார்ஜ் கோட்டையையும், மெரினா கடற்கரையையும் இணைக்கும் பாலமாக நேப்பியர் பாலம் கட்டப்பட்டுள்ளது. 1869ல் பிரான்சிஸ் நேப்பியர் என்ற மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநரால் கட்டப்பட்டது. பின்னர் 1999ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. 149 மீட்டர் நீளத்தில், 6 வளைவுகளுடன் பிரம்மாண்டமாக இந்தப் பாலம் கட்டப்பட்டது. முன்னதாக இது இரும்புப்பாலம் என்றும் அழைக்கப்பட்டது. 

ஜார்ஜ் கோட்டை: 1638ம் ஆண்டு காலகட்டத்தில் உருவான சென்னையின் பழமையான நகரம் ஜார்ஜ் டவுன். ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தல் கட்டப்பட்ட முதல் கோட்டை ஜார்ஜ் கோட்டை. இதைச் சுற்றியே சென்னை நகரம் உருவாக்கப்பட்டது. அப்போதைய வணிக நடவடிக்கைகள் இவ்விடத்தில் நடைபெற்றன. அப்போதைய ஜார்ஜ் கோட்டைதான் இன்றைய தலைமைச் செயலகம். 

சென்னையும் அதன் பகுதிகளும்- சில சுவாரசியமான தகவல்கள்

►17ம் நூற்றாண்டுக்கு முன்னரே மயிலாப்பூர், செயின்ட் தாமஸ் மவுண்ட்(பரங்கிமலை) ஆகிய இடங்கள் இருந்துள்ளதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 

►1646ம் ஆண்டு மெட்ராஸின் மொத்த மக்கள் தொகை 19,000 மட்டுமே. 

►1668ல் திருவல்லிக்கேணி பகுதி இணைப்பு. 

►1693ம் ஆண்டு எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை பகுதிகளும் இணைக்கப்பட்டன. 

►1678 ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ளே செயின்ட் மேரி தேவாலயம் கட்டப்பட்டது. இதே ஆண்டு தான் காளிகாம்பாள் கோயிலும் கட்டப்பட்டது. 

►மெட்ராஸ் மாநகராட்சி தொடங்கப்பட்ட ஆண்டு 1688. 

►1708ம் ஆண்டு திருவொற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, கொட்டிவாக்கம், சாத்தங்காடு ஆகிய 5 பகுதிகளும் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 

►1735ல் சிந்தாதிரிபேட்டை , 1742ல் வேப்பேரி,  பெரியமேடு, பெரம்பூர், புதுப்பாக்கம் இணைப்பு. 

►1749 வரை மயிலாப்பூர் தனி நகராக இருந்த நிலையில், சென்னையுடன் சேர்க்கப்பட்டது. சாந்தோம் பகுதியும் இந்தாண்டே சென்னையுடன் இணைந்தது. 

►1751ல் தண்டையார்பேட்டையை கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றி சென்னையுடன் இணைத்தது. 

►1841ல் ஐஸ் ஹவுஸ், 1928ல் தாம்பரம் சானடோரியம், 1952ல் ஐ.சி.எப் என உருவாகி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. 

►  1946ல் சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக, மாம்பலம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், சாலிகிராமம், அடையார், ஆலந்தூர், அயனாவரம், அமைந்தகரை, மடுவாங்கரை, வேளச்சேரி ஆகிய முக்கிய நகரங்கள் இணைக்கப்பட்டன. 

► 1784ல் முதல் பத்திரிகையாக 'மெட்ராஸ் கொரியர்' உருவானது. 1785ல் முதல் அஞ்சல் அலுவலகம் உருவாக்கப்பட்டது. 

► 1795ல் திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி கட்டப்பட்டது. 

►1842ல் கலங்கரை விளக்கம் ஏற்படுத்தப்பட்டது. 

► 1835ல் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, 1857ல் மெட்ராஸ் பல்கலைக்கழகம், 1864-65ல் மெட்ராஸ் பிரெசிடென்சி கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. 

► சுதந்திரத்திற்குப் பின்னரே 1952ல் நேரு ஸ்டேடியம், 1954ல் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம், 1956ல் காந்தி மண்டபம், 1959ல் கிண்டி தேசியப்பூங்கா, 1960ல் கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி, 1966ல் ஸ்டெட்போர்டு மருத்துவமனை, 1975ல் வள்ளுவர் கோட்டம், காமராஜர் மண்டபம் கட்டப்பட்டன. 

►  1977ம் ஆண்டு தரமணி, திருவான்மியூர், விருகம்பாக்கம், கோயம்பேடு, திருமங்கலம், வில்லிவாக்கம், எருக்கஞ்சேரி, கொளத்தூர், கொடுங்கையூர் உள்ளிட்ட இடங்கள் இணைக்கப்பட்டன. 

►  முன்னதாக ஜார்ஜ் டவுனில் இயக்கிக்கொண்டிருந்த சென்னை பேருந்து நிலையம், 2002ம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் உருவாகி ஆசியாவிலே இரண்டாவது பெரிய பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது. 

►   கடந்த 2018 பிப்ரவரி மாதம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டத்தின் அரக்கோணத்தின் சில பகுதிகள் சென்னை பெருநகரத்துடன் இணைக்கப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com