ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் துணை மருத்துவ படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு புதிய சிக்கல்
By ஜி.சுந்தரராஜன் | Published On : 30th December 2021 01:39 PM | Last Updated : 30th December 2021 01:41 PM | அ+அ அ- |

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கு துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் கோரப்படாததாலும், ஏற்கனவே பயின்று மாணவர்கள் தங்களது படிப்புக்கு அங்கீகாரம் கிடைக்குமா என அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை அரசு ஏற்று சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வந்துள்ளது.
மேலும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனை, அரசு பல் மருத்துவக்கல்லூரி, அரசு செவிலியர் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டு தமிழக அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்வி ஆண்டிற்கு மருத்துவப்படிப்புகள் எம்ஜிஆர் மருத்துவக்கல்லூரி மருத்துவ கவுன்சிலிங் மூலம் அனுமதி சேர்க்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மருத்துவக்கல்லூரியில் உள்ள துணை மருத்துவப் படிப்புகளான எம்ஐடி. டிஎம்எல்டி, பிஓடி, பிபிடி, பிஎஸ்சி எம்எல்டி, பிஎஸ்சி எம்ஐடி., பிஎஸ்சி எம்பிடி உள்ளிட்ட படிப்புகளுக்கு அரசின் அனுமதி விண்ணப்ப அறிவிப்பில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி சேர்க்கபடவில்லை.
இதையும் படிக்க | நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: தஞ்சாவூரில் முதல்வர் அறிவிப்பு
இதுகுறித்து பல்கலைக்கழக ஊழியர் சங்க நிர்வாகிகளை கேட்ட போது மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்ற பிறகு துணை மருத்துவப்படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை குறித்த அறிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் தமிழக அரசுக்கு அனுப்பப்படாததால், இந்நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தெரிவிக்கையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை அரசே ஏற்றுக் கொண்ட பிறகு தமிழக அரசின் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி மருத்துவ கவுன்சிலிங் மூலம் அனுமதி சேர்க்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், துணை மருத்துவ படிப்புகளுக்கான மருத்துவ கவுன்சிலிங் அனுமதி சேர்க்கையில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி சேர்க்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவ படிப்புகள் பயின்று வரும் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் துணை மருத்துவ படிப்புகள், 3 ஆண்டுகள் படிப்பும், ஒரு ஆண்டு பயிற்சியும் சேர்த்து மொத்தம் 4 ஆண்டுகள் என விதிமுறை உள்ளது. ஆனால் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் துணை மருத்துவ படிப்புகளுக்கு 3 ஆண்டுகள் படிப்பு என அனுமதி சேர்க்கை செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளதால் மாணவர்கள் மேலும் அதிர்ச்சியுற்றுள்ளனர்.
துணை மருத்துவ படிப்புகளில் நடப்பு ஆண்டில் சேர்ந்து பயில மாணவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே தமிழக முதல்வர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் மேற்கண்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப அறிவிப்பை வெளியிட்டு இந்த ஆண்டு அனுமதி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்கிறார் தில்லை ஆர்.மக்கீன்.
இதையும் படிக்க | ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் சமூக நல அலுவலகத்தில் வேலை வேண்டுமா?