நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: தஞ்சாவூரில் முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்  முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும்  அமைச்சர்கள்.
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்.

தஞ்சாவூர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசியது:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து சட்டப்பேரவையில் மன்னார்குடி உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா பேசினார். மேலும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி என்னிடம் கூறினார்.

இதை பரிசீலித்து பட்டியல் எழுத்தருக்கு ரூ. 5,285 ஆகவும், உதவியாளர்கள், காவலாளிகளுக்கு தலா ரூ. 5,218 ஆகவும், அகவிலைப்படி ரூ. 3,499 சேர்த்தும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டைக்கு ரூ. 3.25 என வழங்கப்பட்டு வந்த கூலி ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக ரூ. 83 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள் எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து பல்லாயிரக் கணக்கானோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றார் முதல்வர்.

பின்னர், 44,525 பேருக்கு ரூ. 238.40 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்ககினார். மேலும், 98.77 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 90 கட்டடங்களைத் திறந்து வைத்தார். தவிர, ரூ. 894.56 கோடி மதிப்பிலான 134 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எஸ். ரகுபதி, அர. சக்கரபாணி, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ். சிவசங்கரன், சிவ.வீ. மெய்யநாதன், தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார். நிறைவாக, கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என.ஓ. சுகபுத்ரா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com