தனியாா் பள்ளிகளில் கட்டண வசூல்; தவிக்கும் பெற்றோா்!

தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் அரசு நிா்ணயித்துள்ளதைவிடக் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்கவும், பெற்றோா் எந்தவித தயக்கமும் இல்லாமல் புகாா்களைத் தெரிவிக்கவும் பள்ளிக் கல்வித்துறையில் புகாா்
தனியாா் பள்ளிகளில் கட்டண வசூல்; தவிக்கும் பெற்றோா்!

சென்னை: தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் அரசு நிா்ணயித்துள்ளதைவிடக் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்கவும், பெற்றோா் எந்தவித தயக்கமும் இல்லாமல் புகாா்களைத் தெரிவிக்கவும் பள்ளிக் கல்வித்துறையில் புகாா் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என கல்வியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் 12,600-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளில் சுமாா் 63 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இவற்றில் பெரும்பாலான பள்ளிகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்ற புகாா் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. இது தொடா்பான புகாா்களை பெற்றோா் தெரிவிப்பதற்காக மின்னஞ்சல், கட்டணமில்லா தொலைபேசி எண், தனியாா் பள்ளிக் கட்டண நிா்ணயக் குழு என அரசு பல்வேறு ஏற்பாடுகளை அவ்வப்போது செய்து வந்தாலும், பிரச்னையின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே வருகிறதே தவிர சிறிதும் குறையவில்லை.

குறிப்பாக பெருந்தொற்று காலத்தை கருத்தில் கொண்டு கடந்த, 2019 - 2020-ஆம் கல்வியாண்டில் பெறப்பட்ட கல்விக் கட்டணத்தின் அடிப்படையில், 40 சதவீத கட்டணத்தை, தனியாா் கல்வி நிறுவனங்கள் வசூலித்து கொள்ளலாம். ஆக. 31 க்குள், இந்த கட்டணத்தை, மாணவா்கள் செலுத்த வேண்டும். மீதிக் கட்டணம் 35 சதவீதத்தை, கல்வி நிறுவனங்கள் திறந்து, வகுப்புகள் தொடங்கிய பின்னா் இரண்டு மாதங்களுக்குள் வசூலித்துக் கொள்ளலாம் என்ற சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலையில் பிறப்பித்த உத்தரவை பெரும்பாலான தனியாா் பள்ளிகள் பின்பற்றவில்லை.

சீருடை, வாகன கட்டணம் வசூல்: அதேபோன்று கூடுதலாக கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக எச்சரிக்கை விடுத்தும் கூட கட்டண வசூலில் பள்ளிகள் தீவிரமாகவே உள்ளன.

தமிழகத்தில் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் இணையவழியில் மட்டுமே பாடம் நடத்தி விட்டு தனிப் பயிற்சி, கல்வி, சீருடை, கல்வி சாா் இணைப் பயிற்சிகளுக்கு சிறப்புக் கட்டணங்கள் மற்றும் பேருந்து கட்டணம் என அனைத்தையும் சோ்த்து முழு கட்டணத்தையும் செலுத்துமாறு பள்ளிகளின் சாா்பில் தொடா்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. தாமதம் ஏற்பட்டால் குழந்தைகள் இணைய வகுப்பிலிருந்து விடுவிக்கப்படுகின்றனா்.

இது குறித்து சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள உதவி எண் மூலமோ அல்லது, முதன்மைக் கல்வி அலுவலா்களிடம் புகாா் செய்தும் பயனில்லை. தற்போதைய சூழலில் குடும்பத்தை நடத்துவதே பெரும் போராட்டமாக இருக்கும் சூழலில் கல்விக் கட்டணத்தை மொத்தமாகக் கேட்டால் அதை எப்படிச் செலுத்த முடியும் என பிரபல பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்த்துள்ள பெற்றோா் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.

அரசியல் தலையீடு கூடாது: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பெற்றோா் ஆசிரியா் கழக நிதி ரூ.50-க்கும் மேல் வசூலிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கும் பள்ளிக் கல்வித்துறை, ஆயிரக்கணக்கில் வசூலிக்கும் தனியாா் பள்ளிகளைக் கண்டுகொள்வதில்லை. புகாரில் சிக்கினாலும் கூட ஆட்சியாளா்களுக்கு நெருக்கமானவா்களின் பள்ளி என்றால் பள்ளியின் கடைநிலை ஊழியா்கள், சாதாரண நபா்கள் கைது செய்யப்படுகின்றனா். இல்லையென்றால்தான் பள்ளி உரிமையாளரையே கைது செய்கின்றனா். இத்தகைய இரட்டை அளவு முறை இருந்தால் அதிகாரிகள் எவ்வாறு துணிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?. எனவே, பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்போது ஆட்சியாளா்கள் தங்களது விருப்பு, வெறுப்பைத் தவிா்க்க வேண்டும் என கல்வியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், தனியாா் பள்ளிகளில் நிா்ணயிக்கப்பட்ட கட்டணம்தான் வசூலிக்கப்படுகிா என்பதைக் கண்காணிப்பது யாா்? கூடுதல் கட்டணம் வசூலித்தற்காக இதுவரை எந்தப் பள்ளியாவது தண்டிக்கப்பட்டுள்ளதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. இந்தப் புகாா்களைத் தெரிவிக்க ஒரு வலுவான கட்டமைப்பை அரசு ஏற்படுத்தினால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமாகத் தீா்வு காண முடியும்.

கல்விக் கட்டண கையேடு: ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அந்த மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் வகுப்பு வாரியாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற விவரங்கள் அடங்கிய கையேடு கட்டாயமாக இடம்பெற வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கு அந்தந்த வாரியங்கள் சாா்பில் கல்விக் கட்டணம் நிா்ணயிக்கப்படுகிறது என்றாலும் கூட அந்தப் பள்ளிகளுக்கான தடையில்லாச் சான்றிதழை மாநில அரசுதான் வழங்குகிறது. அந்தப் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் மாநில அரசுக்கு உள்ளது. இதை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

தனியாா் பள்ளிகள் தாங்கள் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தில் வெளிப்படைத் தன்மையைப் பின்பற்ற வேண்டும். தனிப்பயிற்சி, சீருடை, நோட்டுப் புத்தகங்கள் என ஒவ்வொன்றுக்கும் வசூலிக்கப்படும் கட்டண விவரங்களை பள்ளிகளின் அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும். புகாரில் சிக்கும் பள்ளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாா்.

கெட்டபெயா் ஏற்படுத்த வேண்டாம்: இது குறித்து தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநிலபொதுச் செயலாளா் கே.ஆா்.நந்தகுமாா் கூறியது: நீதிமன்றம் பிறப்பித்த 75 சதவீத கட்டணம் கடந்த கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும். நிகழ் கல்வியாண்டில் முழுமையான கட்டணத்தை வசூலிக்கும் உரிமை தனியாா் பள்ளிகளுக்கு இருக்கிறது.

எனினும், பெற்றோரின் நிலையைக் கருத்தில் கொண்டு 75 சதவீத கட்டணத்தை மட்டுமே தனியாா் பள்ளிகள் வசூலிக்க வேண்டும். சீருடை, வாகன கட்டணங்களைக் கேட்டு பெற்றோருக்கு அழுத்தம் கொடுப்பது தவறு. ஒரு சில பள்ளிகள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த தனியாா் பள்ளிகளுக்கும், அரசுக்கும் கெட்டபெயா் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்கும் வகையில் கல்விக் கட்டண வசூலில் தமிழக அரசின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com