ஐவர்மெக்டின் என்றோர் அருமருந்து: மறைக்கிறதா மருத்துவத் துறை?

ஒரு நோயின் வரலாற்றில் இந்த அளவுக்கு அதன் பரவலையும்  பாதிப்பையும் பட்டியலிடுவதும் அது தீவிரமடையும் காலத்தைச் சில மாதங்களுக்கு முன்பே கணிப்பதும் இதுதான் முதல் முறை. 
கரோனா மூன்றாம் அலையைத் தடுப்பது எவ்வாறு?
கரோனா மூன்றாம் அலையைத் தடுப்பது எவ்வாறு?


ஒரு நோயின் வரலாற்றில் இந்த அளவுக்கு அதன் பரவலையும்  பாதிப்பையும் பட்டியலிடுவதும் அது தீவிரமடையும் காலத்தைச் சில மாதங்களுக்கு முன்பே கணிப்பதும் இதுதான் முதல் முறை. இந்தியாவில் மிக விரைவில் மூன்றாவது அலை உருவாகும் என்று மருத்துவ நிபுணர்கள்  முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். நமது அரசு நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், நாம் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும்: கரோனாவைத் தடுப்பதில் தடுப்பூசியே மிகச் சிறப்பானது என்றாலும்; அது ஒன்று மட்டும்தான் இருக்கிறதா?

நமது நாட்டில் ஒரு கணிசமான அளவு மக்களுக்குக் கரோனா தடுப்பூசியை செலுத்தி முடிக்க 8 முதல் 10 மாதங்கள் ஆகும் என்றுதான் அனைத்து மதிப்பீடுகளும் தெரிவிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் கரோனா  தடுப்பூசிக்காகக் காத்திருக்கும் பாதுகாப்பற்ற அனைவருமே கரோனா  தொற்றுக்குள்ளாகும் அபாயத்தில் இருப்பவர்களே.  பொது முடக்கம் தளர்த்தப்பட்டுவிட்ட நிலையில் தொற்று பரவும். எனவே, மூன்றாவது அலைக்கான சாத்தியங்களையும், அதன் மோசமான பாதிப்புகளையும் கருத்தில்கொள்ள, தொற்று பரவுவதைத் தடுத்துநிறுத்துவதில் பிற சாத்தியக்கூறுகளைப் பற்றியும் நாம் கவனிக்க வேண்டியது அவசியம்.

அறிந்துகொள்வதற்கான அனைத்து உரிமையும் மக்களுக்கு இருக்கிறது: 1979-ஆம் ஆண்டில், கேம்ப்பெல் மற்றும் ஒமுரா என்ற இரண்டு விஞ்ஞானிகள் ஐவர்மெக்டின் என்ற மருந்தைக் கண்டுபிடித்தார்கள். இந்த மருந்து, பல வகைத் தொற்றுகளுக்கும் எதிராக மிகச் சிறப்பாக செயல்படுவதைக் கண்டறிந்தார்கள்.  இந்த மருந்தை மருந்து தயாரிப்பு நிறுவனமான மெர்க் தயாரித்து வருகிறது. இது பயன்பாட்டில் இருக்கும் கடந்த 40 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 370 கோடி (3.7 பில்லியன்) மாத்திரைகள்  உட்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மருந்தை அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உலக சுகாதார நிறுவனம் இணைத்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்புக்காக இவ்விரு விஞ்ஞானிகளுக்கும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.


பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவரும் ஐப்யூபுரூஃபன், பாராசிடமால், பெனிசிலின், ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைவிடவும் ஐவர்மெக்டின்  பாதுகாப்பானது. இந்தியாவில் ஒவ்வொரு மருத்துவரும்  இந்த மருந்தையும், இது குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது என்பதையும் அறிந்திருக்கிறார்கள். ஆப்ரிக்கா, ஆசியாவிலுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் தொற்றுப் பரவல்கள் மிகப் பெரும் சாபமாக இருக்கின்றன. உற்பத்தியாளரைப் பொருத்தவரை, இந்த மருந்து லாபம் ஈட்டும் மருந்தல்ல, எனவே மெர்க் நிறுவனம் ஆரம்ப காலத்துக்குப்  பிறகு இந்த மருந்துக்கான காப்புரிமையைப் புதுப்பித்துக்கொள்ளவில்லை. ஐவர்மெக்டினைத் தற்போது பல மருந்து நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

2020-ல் பேரிடர் தொடங்கிய மாதங்களில், ஆஸ்திரேலிய விஞ்ஞானியொருவர்  ஆய்வகத்தில் நடத்திய பரிசோதனையில் கரோனா தொற்றை  ஐவர்மெக்டின்  மருந்து அழித்ததைக் கண்டுபிடித்தார். இவர் தனது கண்டுபிடிப்பு குறித்து  எழுதியிருந்தார், அதை வங்கதேசத்தின் மிகப் பெரிய அரசு  மருத்துவமனையொன்றில் பணியாற்றிவரும் ஒரு மருத்துவர் கவனித்தார்.   ஐவர்மெக்டினை 60 நோயாளிகளுக்கு அளித்ததில், பெரும்பாலானோர்  குணமடைந்ததைக் கண்டறிந்தார். மேலும், அவர்களில் யாருக்கும் கரோனா  தொற்றினால் நேரிடக்கூடிய கடும் சிக்கல்கள் ஏற்படவில்லை.

கரோனா தொற்று சிகிச்சையில் இந்த மருந்து சிறப்பாகப் பயன்படுவது  பற்றிய செய்திகள் வேகமாகப் பரவிய நிலையில், உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான, தொடர்ந்து ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் முடிவுகள் மிகச் சிறப்பாக இருந்தன:  தொற்று பாதித்த ஆரம்ப நாள்களில் (முதல் ஐந்து நாள்கள்) தேவையான பிற  வைட்டமின் மாத்திரைகளுடன் கொடுத்தபோது,  அதிக விலையுள்ள மற்ற மருந்துகளைவிட பலவகையிலும் சிறப்பான பலனை ஐவர்மெக்டின் கொடுத்தது. கரோனா பாதித்த தீவிரமான பிந்தைய நாள்களிலும் இது பயனளித்தது, அதன் எதிர்ப்பாற்றலானது தொற்றால்  நேரிடக் கூடிய சிக்கல்களைத் தடுப்பதாகவும் இருந்தது.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதவாக்கில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் வேறுபல நாடுகளுடன்  வங்கதேசம், மெக்சிகோ,  தென்னாப்ரிக்கா, இஸ்ரேல், ஸ்பெயின், இத்தாலி, சுலோவாகியா, ஜப்பான்  ஆகிய நாடுகளிலும்கூட ஐவர்மெக்டின் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த  மருந்தைக் கொடுத்து, இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் தேவரியா மாவட்டத்தில் ஒரு மருத்துவர் சுமார் 4000-க்கும் மேற்பட்ட கரோனா  நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார்; மும்பையின் காண்டிவளி பகுதியில் மேலும் ஒரு மருத்துவர் 6000-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளித்தார். மங்களூருவில் காது, மூக்கு, தொண்டை நிபுணரான பேராசிரியர் ஒருவர் சுமார் 4000-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளித்தார். இன்னும் பலர், இதே மருந்தைக் கொண்டு எண்ணற்றோருக்குச் சிகிச்சையளித்தனர். சிறிய நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் பணியாற்றும் எங்களைப் போன்றோர் பல நூறு பேருக்குச் சிகிச்சையளித்துள்ளோம்.

ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் முன்களப் பணியாளர்களான மருத்துவத் துறை பணியாளர்கள், காவல்துறையினர்,  போக்குவரத்துத் துறையினர், ரயில்வே பணியாளர்கள், பேருந்து, ஆட்டோ,  வாடகை கார் ஓட்டுநர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் இன்னும் பலர் என நோய்த்  தொற்று ஆபத்துள்ளோருக்கு  முன்னெச்சரிக்கைத் தடுப்பு மருந்தாகவும்  ஐவர்மெக்டின்  பயன்படுத்தப்பட்டது.  தொடக்கத்திலேயே பயன்படுத்தும்பட்சத்தில் கரோனா பாதிப்புக்குப் பிந்தைய சிக்கல்களையும் நீண்ட கால  பாதிப்பையும் குணப்படுத்துவதில் நம்ப முடியாத அளவுக்கு நல்ல பலனை  ஐவர்மெக்டின் தந்தது. மிகத் தெளிவான அறிவுறுத்தலுடன் விரைவாக அனுமதி  அளிக்கப்பட்டு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன்,  நாடு முழுவதும் இந்த மருந்தைப்  பயன்படுத்தவும் நல்வாழ்வு (ஆஷா)  பணியாளர்களின் மருந்துப் பெட்டகத்தில், இந்த மருந்து இடம்பெற வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம். உள்ளபடியே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கும் அல்லது ஒரு தவணை மட்டும் செலுத்தியிருப்பவர்களுக்கும் ஐவர்மெக்டின்  அளிக்கப்பட வேண்டும்.

தொடக்கத்தில் தொடர்ச்சியாக மூன்று நாள்களுக்கு  மூன்று மாத்திரைகள்  எடுத்துக்கொள்வதுடன், பிறகு வாரத்துக்கு ஒரு முறை 12 மில்லி கிராம் மாத்திரையை எடுத்துக் கொள்வது கரோனாவுக்கு எதிராகத் தேவையான தற்காப்பை  வழங்கும். தடுப்பூசிக்காகக் காத்திருக்கும் காலத்தில் பயன்படுத்தத் தக்கதாக  இருக்கிற பாதுகாப்பான, மலிவான விலையில் ஒரு மருந்து கிடைக்கும்போது, அதைப் பயன்படுத்தாமல் இருக்க வேறு ஏதேனும் காரணம் இருக்க  முடியுமா? 

தொற்றுப் பரவலைத் தடுப்பதில் மிகப் பெருமளவில் மருந்துகளை அளிப்பது நல்ல பலனைத் தரும். மத்திய அரசு உடனடியாக இதனைச் செயல்படுத்த  வேண்டும், ஏனென்றால், கரோனா வைரஸ் அதிதீவிரமாக உருமாறிப் பரவுவது  நம் நாட்டின் அளவில் மட்டுமல்ல, உலகளாவிய ஒன்றும்கூட.

2020, டிசம்பரில்  டாக்டர்கள் பால் மரிக், உமெர்டோ மெடூரி, ஜோஸ்  இங்லேசியஸ், பியர் கோரி, ஜோ வரோன் ஆகிய மருத்துவர்கள்  தலைமையில்  முன்கள கோவிட் 19 தீவிர சிகிச்சைக் கூட்டணி என்ற உலகளாவிய அமைப்பை மருத்துவ வல்லுநர்கள் உருவாக்கினர். பிரிட்டனில் டாக்டர் லாரி தலைமையில்  பிரிட்டிஷ் இவர்மெக்டின் பரிந்துரை மேம்பாட்டுக்  குழுவொன்றும் உருவாக்கப்பட்டது. இதுவரை, கரோனா தொற்று பாதிப்புக்கு எதிராக ஐவர்மெக்டினைப் பயன்படுத்தி, 25 ஆயிரம் நோயாளிகளிடம் 549 ஆராய்ச்சியாளர்கள் மூலம் சுமார் 60 ஆய்வக  பரிசோதனைகள், 31 பரவலான ஆய்வக பரிசோதனைகள்  நடத்தப்பட்டுள்ளன. உலகளவில்  இந்த மருந்தைப் பயன்படுத்துவதை மிகத் திடமாக அவர்கள் உறுதி செய்தனர்.

எனினும், இதில் ஒரு சங்கடம் இருந்தது: உலகம்  முழுவதும் மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் கரோனாவுக்கு எதிராக பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்து தடுப்பூசி தயாரிப்பில்  இறங்கியிருந்தன. இந்தத் தொகையைத் திரும்ப எடுக்க வேண்டியதும்  ஒவ்வொரு நாட்டுக்கும் இந்தத் தடுப்பூசிகளை விற்று லாபம் ஈட்ட  வேண்டியதும் அவர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை எவரொருவராலும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அவர்கள் இதைச் செய்ய வேண்டும் என்பதற்காக நாம் கோடிக்கணக்கான உயிர்களைப் பலி கொடுப்பது என்றாகிவிடக் கூடாது. ஆனால், துரதிருஷ்டவசமாக இதுதான்  நடக்கிறது. உலகம் முழுவதும் உள்ள மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் மற்றும் (நகைமுரணாக) உலக சுகாதார நிறுவனமும்கூட, ஐவர்மெக்டினின்  நிலைத்த செயல்திறனை நிராகரிக்கின்றன அல்லது அதில் மாற்றாந்தாய்  மனநிலையைக் கொண்டிருக்கின்றன. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள்கூட, நோயாளிகள் மருத்துவமனையைச் சார்ந்திருப்பதை  மிகப் பெருமளவில்  ஒரு மருந்து குறைக்கிறது என்பது குறித்து  மகிழ்ச்சியடையவில்லை.இதில் மிகவும் துயரமான பகுதியென்னவென்றால், ஊடகங்களும்கூட,  நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்கின்றன.  செலவு குறைவான, பாதுகாப்பான,  தாராளமாகக் கிடைக்கக்கூடிய ஐவர்மெக்டினின் வெற்றியைப் பற்றிய கள்ள மௌனம் சாதிப்பதையும்  விலை உயர்ந்த மருந்துகளான  ரெம்டெசிவிர் உள்ளிட்ட சில புதிய மருந்துகளுக்குக் கொடுத்த  அளவுக்கதிகமான விளம்பரங்களைச் செய்வதற்கும் வேறென்ன நியாயத்தைச் சொல்லிவிட முடியும்?

இதையும் படிக்கலாமே.. மரபணுக் கோளாறு: சிறுவனுக்கு செலுத்தப்பட்டது உலகின் மிக விலையுயர்ந்த மருந்து

வீட்டிலிருந்தபடியே நோயாளிகள் ஒரு மாத்திரையை எடுத்துக்கொண்டு மிக விரைவில் குணமடைந்துவிட்டால், நாம் பொதுமுடக்கங்களை விலக்கலாம்,  வணிகங்கள், சுற்றுலாவைத் தொடங்கலாம். உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தி முடிக்கும்வரை காத்திருக்காமல் பள்ளி, கல்லூரிகளை  நடத்தலாம்.

இவற்றையெல்லாம் சொல்வது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியமல்ல  என்று கூறுவதற்காக அல்ல. நாங்கள் மீண்டும் உறுதிபடச் சொல்ல விரும்புவது என்றால், இயன்றவரை விரைவாக அனைத்து வெகுமக்களுக்கும் எதிர்ப்புத்  திறனை ஏற்படுத்த  எளிய, பாதுகாப்பான, விரைவான வழிமுறையை  ஐவர்மெக்டின் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே. மிகச் சரியாகத் திட்டமிட்டால், ஒருசில நாள்களிலேயே இதைச் செய்துமுடித்துவிட முடியும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் அதேவேளையில், உலகை ஐவர்மெக்டினின் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது மிகச் சிறப்பானதாக இருக்கும். பொருளாதார நிலையில்  மோசமான ஏழை நாடுகளில், உலகளாவிய தடுப்பூசி செலுத்துதல் என்பதற்கு நீண்ட காலமாகலாம்.  மிச்சமுள்ள ஒவ்வொரு கரோனா நோயாளியும் அவருக்கும் இந்த உலகுக்கும் பெரும் அபாயமே. 

நிறைவாக, புலிட்சர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு ஐந்து முறை தேர்வு  செய்யப்பட்ட எழுத்தாளர் மைக்கேல் கப்பூஸோ, ஐவர்மெக்டின் பற்றி எழுதிய கோவிட்டை வென்ற மருந்து (The Drug that Cracked Covid) என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதை மேற்கோள் காட்டுகிறோம். அவர் எழுதுகிறார்: "இந்த  உலகில் இதைவிடப் பெரிய கதை எதுவும் எனக்குத் தெரியவில்லை."

டாக்டர் காவேரி நம்பீசன்:
அறுவைச் சிகிச்சை நிபுணர், எழுத்தாளர் - குடகு மாவட்டம், கர்நாடகம்.
மருத்துவர் டேரெல் டிமெல்லோ: 
தொலைவசதி வழி சிகிச்சையளிக்கும் முன்னணி மருத்துவர் - காண்டிவலி, மும்பை (இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா  நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்).

தமிழில் : வாணிஸ்ரீ சிவக்குமார் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com