30 ஆண்டுகால தாராளமயமாக்கல்: நாம் எங்கே இருக்கிறோம்?
By சுதர்சனன் | Published On : 29th July 2021 03:11 PM | Last Updated : 29th July 2021 04:19 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
'ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கான நேரம் வந்துவிட்டால் பூமியில் உள்ள எந்த சக்தியாலும் அதனை தடுக்க முடியாது' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹியூகோவின் வாக்கியத்தை மேற்கோள்காட்டி ஜூலை 24ஆம் தேதி 1991 ஆம் ஆண்டு அன்றைய நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் தான் இந்தியாவின் வரலாற்றையே பின்வரும் காலத்தில் புரட்டிப்போட்டது. அப்படி என்ன புரட்டிப்போட்டது என கேள்வி எழுப்புவர்களுக்கு அன்றைய சூழல் குறித்து விளக்குவது அவசியமாகிறது.
மிக மோசமான நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், சோவியத் யூனியன் சிதைந்தது, வளைகுடா போரின் காரணமாக எண்ணெய்ப் பொருள்களின் விலை உயர்வு போன்ற சவால்களுக்கிடையே பிரதமர் நரசிம்ம ராவ் அரசு பதவியேற்றிருந்தது.
ஆட்சி அமைத்து ஒரு மாதமே ஆன நிலையில், 2,500 கோடி ரூபாய் மதிப்பில்தான் அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தது. அதாவது, 15 நாள்களுக்கு மட்டுமே நம் தேவைக்கு ஏற்ற பொருள்களை இறக்குமதி செய்தவற்கான பணம் இந்தியாவிடம் இருந்தது. இப்படிப்பட்ட, சூழலில்தான் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தாராளமயமாக்கல் கொள்கையின் அவசியம்
தாராளமயமாக்கல் கொள்கை பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன், முதலில், இந்தியாவின் பொருளாதார கொள்கை என்னவாக இருந்தது என்பது குறித்து அறிந்துகொள்ள வேண்டும். தற்போது, தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையில் கொடி கட்டி பறக்கும் இந்தியாவில், ஒரு காலத்தில், ஐடி நிறுவனம் கணினியை இறக்குமதி செய்வதற்கு அரசின் ஒப்புதலை வாங்க பல மாதங்கள் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது. தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளில் அரசின் கட்டுப்பாடு என்பது தேவைக்கு அதிகமாகவே இருந்தது. எதற்கெடுத்தாலும் அரசின் அனுமதி தேவைப்பட்டது.
இதையும் படிக்க | தீா்ப்புக்கு அப்பால்... | கூட்டுறவு சங்கங்களின் சட்டத் திருத்த மசோதா குறித்த தலையங்கம்
ஒரு இடத்தில் போட்டி என்பது இருந்தால்தான் அங்கு திறன் என்பது அதிகரிக்கும். ஏகபோகமாக சிலரிடம் மட்டுமே அதிகாரம் குவிந்திருந்தால் அங்கு வெளிப்படைத்தன்மை பாதிப்புக்குள்ளாகும். இதற்கு மிக பெரிய சான்று, தொலைக்காட்சி நிறுவனங்கள். 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு, பல தனியார் செய்தி நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, போட்டி உருவானதன் காரணமாக ஆற்றல் அதிகரித்தன. வேலைவாய்ப்புகள் பெருகின.
ஒரு குறிப்பிட்ட கால அளவில், பொருள்களின் விலை எந்தளவுக்கு ஏற்றம் கண்டிருக்கிறது என்பதைக் குறிப்பதுதான் நுகர்வோர் விலை குறியீடாகும். நுகர்வோர் விலை குறியீடு உயரும்பட்சத்தில், பணவீக்கம் அதிகருக்கும், இதன் காரணமாக பொருள்களின் விலை உயரும். அக்டோபர் மாதம் 1990 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் 1992 ஆம் ஆண்டு வரை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு இரட்டை இலக்கத்தில் இருந்தது.
1990-91 காலகட்டத்தில் 11.2 சதவிகிதமும் 1991-92 காலகட்டத்தில், 13.48 சதவிகிதமும் நுகர்வோர் விலைக் குறியீடு உயர்ந்திருந்தது. 1960-70களில், எண்ணெய் நெருக்கடியின்போது, இந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரிய சிக்கலைச் சந்தித்திருந்தது.
பொருளாதார சீர்திருத்தத்திற்கு பிறகான வளர்ச்சி
நாட்டின் வளர்ச்சியில் தனியார் நிறுவனங்களின் பங்கு என்பது மிக முக்கியம். வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதிலிருந்து வளத்தைப் பெருக்குவது வரை அதற்கான தேவை என்பது இன்றியமையாதது.
தாராளமயமாக்கல் கொள்கையின் ஒரு அங்கமாக, நாட்டின் பாதுகாப்பு சார்ந்த 18 தொழிற்துறைகளைத் தவிர்த்து மற்ற அனைத்திற்கும் தொழில் துறை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலம், உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் முதலீடுகள் குவிந்தன.
(பண மதிப்பிழப்பு, பெருந்தொற்று போன்றவை நாட்டின் வளர்ச்சியில் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில், 1991 முதல் 2016 வரையிலான தரவுகளைக் கொண்டு பின்வரும் தகவல்கள் கணக்கிடப்பட்டுள்ளன).
பொருளாதார சீர்திருத்தம் மேற்கொண்டதிலிருந்து பண மதிப்பிழப்புக்கு முன்பு வரை, இந்தியர்களின் தனிநபர் வருமானம் 6,270 ரூபாயிலிருந்து 93,293 ருபாயாக ஏற்றம் கண்டது. அதாவது, 1388 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மக்களிடம் பணம் இருந்தால்தான் ஒரு பொருளை வாங்க முடியும். அந்தப் பொருளை வாங்கும் திறனும் வாழ்க்கைத் தரமும் தொடர்ந்து அதிகரித்துவந்துள்ளது.
இதையும் படிக்க | நோக்கம் நிறைவேறவில்லை! - தாராளமயக் கொள்கை நடவடிக்கை குறித்த தலையங்கம்
ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பல அளவுகோல்களை வைத்து மதிப்பிட வேண்டும். அவற்றில் மிக முக்கியமானது, உள்நாட்டு மொத்த உற்பத்தி, ஜிடிபி (ஓர் ஆண்டில், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பொருள்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு). 1991 ஆம் ஆண்டு, 5 லட்சத்து 86 ஆயிரத்து 212 கோடியாக இருந்த ஜிடிபி, 2016 ஆம் ஆண்டு 1 கோடியே 35 லட்சத்து 76 ஆயிரத்து 086 கோடியாக அதாவது 2,216 சதவிகிதம் உயர்வு கண்டது. 2050 ஆம் ஆண்டுக்குள், உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஜிடிபி கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என கணக்கிடப்பட்டது.
ஒரு நாட்டில் வளர்ச்சியை சாத்தியப்படுத்த வெளிநாட்டு முதலீடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. இதன்படி, பொருளாதார சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட 1991ஆம் ஆண்டு, 7 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டது. உலக பொருளாதார மந்த நிலை காலகட்டத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்துவந்துள்ளது.
1991 முதல் 2016 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், வெளிநாட்டு நிறுவனங்கள் மொத்தம் 371 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக, 2015ஆம் ஆண்டு, சீனாவை காட்டிலும் அதிகளவில் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டது.
2016 ஆம் ஆண்டு, இந்தியாவில் வேலை செய்வோரின் எண்ணிக்கை 49.7 கோடியாக இருந்தது. 1991 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், வேலையின்மை விகிதம் 4.3 சதவிகித்திலிருந்து 3.6 சதவிகிதமாகக் குறைந்தது.
தாராளமயமாக்கல் மீதான விமர்சனங்கள்
தாராளமயமாக்கலுக்கு மிக முக்கிய காரணமாக கூறப்பட்டது அந்நிய செலாவணி கையிருப்பு. ஆனால், 1990-க்குப்பிறகுதான், அந்நிய செலாவணி கையிருப்பு மாதாமாதம் கணக்கிடப்பட்டது. 1990க்கு முன்பு வரை, ஆண்டுக்கு ஒரு முறைதான் அது கணக்கிடப்பட்டது. மாதாந்திர அந்நிய செலாவணி கையிருப்பு குறித்த தரவுகள் இந்தியாவிடம் இல்லை.
இப்படியிருக்க, இதுகுறித்த தரவுகள் இல்லாதபோது, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என மன்மோகன் சிங் தெரிவித்தது குழப்பும் விதமாக உள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறினார்கள்.
ஆனால், ஆண்டுக்கு ஒரு முறை எடுக்கப்பட்ட அந்நிய செலாவணி கையிருப்பு குறித்த தரவுகளின் அடிப்படையில், மாத சராசரி கணிக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில்தான் பொருளாதாரம் மிகப் பெரிய நெருக்கடியில் இருப்பதாக கூறப்பட்டதாகவும் ஒரு சாரார் குறிப்பிடுகின்றனர்.
தாராளமயமாக்கலால் சமமற்ற தன்மை பெரிய அளவில் ஏற்பட்டதாகவும் வளம் என்பது சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்றும் பெரும் குற்றச்சாட்டு ஏற்பட்டது. குறிப்பாக, இந்திய மக்கள்தொகையின் மேல்தட்டில் இருக்கும் 1 சதவிகித கோடீஸ்வரர்கள் நாட்டின் மொத்த வளத்தில் 73 சதவிகிதத்தைத் தங்கள் சொத்துகளாக வைத்துள்ளார்கள் என ஆக்ஸ்பம் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இப்படி, தாராளமயமாக்கலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டுவருகின்றன. ஒன்றின் அவசியமே அதன் தேவையை நிர்ணயிக்கிறது. எதற்காகப் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவோ அதற்கான நோக்கத்தை நாம் இன்னும் அடையவில்லை. காலத்திற்கு ஏற்றார்போல், பொருளாதார கொள்கைகளை மாற்றி அனைவருக்குமான வளர்ச்சியை சாத்தியப்படுத்துவதே இன்றைய தேவை.