கரோனா சிறப்புப் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும்  கரோனா நோயாளிகளுக்கான  கால் சென்டர்களில் பணிபுரிய, கரோனா தொற்று கண்டறிய  அரசு பள்ளி ஆசிரியர்கள்  
கரோனா சிறப்புப் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
கரோனா சிறப்புப் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

தம்மம்பட்டி:    தமிழகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய கால் சென்டர்களில் பணிபுரிய  அரசு பள்ளி ஆசிரியர்களை தன்னார்வலர்கள் அடிப்படையில் ஈடுபடுத்திட தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.    

தமிழகம் முழுவதும் தற்போது நாளொன்றுக்கு 36 ஆயிரம் பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் நாளொன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு மேல் குணமாகி வருகின்றனர்.

இந்நிலையில் தொற்றுக்கு ஆளானவர்கள், குணமானவர்கள் என இரு வகைப் பட்டவர்களும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மனதைத் தேற்றவும், மனம் தைரியம் தரவும், அவர்களை உற்சாகமூட்டவும்  நபர்கள் தேவைப்படுகின்றனர்.

அதே வேளையில் தமிழகத்தின் அரசு பள்ளி ஆசிரியர்கள் தற்போது பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும், அதனால் அவர்களது ஊதியத்தை பாதியாக குறைக்க வேண்டும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிடப்பட்டுவந்தது.

அதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஊதியம் பாதியாக குறைக்கப்படுமா என்று முதலமைச்சரிடம் கேட்கப்பட்டபோது, அது வதந்தி என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களை, கட்டாயப்படுத்தாமல் அவர்களை கரோனா தடுப்புப்பணியில் ஈடுபடுத்த தமிழக அரசு திங்கள்கிழமை முடிவுசெய்துள்ளது. அதனையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் 45 வயதுக்குள்பட்ட ஆசிரியர்களை, தன்னார்வலர்களாக கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளில் 45 வயதுக்குள்பட்டவர்களாகவும், அவர்கள் இரண்டு கட்ட தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும் எனவும், அவர்களில்
 தன்னார்வலர்களாக செயல்பட விருப்பமுள்ளவர்கள் விவரங்களை உடனடியாக அனுப்பிட அனைத்துக்கல்வி அதிகாரிகளுக்கும் வாட்ஸ்ஆப் மூலமும், மின்னஞ்சல் மூலமும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் திங்கள்கிழமை மதியம் அனுப்பியுள்ளனர்.

தன்னார்வலர்களாக செயல்பட விருப்பமுள்ள ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரையும்  மூன்றுவித கரோனா பணிகளில் ஈடுபடுத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது  தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவனைகள், அரசு ஆரம்பசுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களது விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்துதல், பொதுமுடக்கத்தினை மீறி வெளியே சுற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு அபராதம் விதித்தல், மாவட்ட எல்லையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினருடன் இணைந்து செயல்படுத்துதல், கரோனா கட்டுப்பாட்டு அறையிலிருந்து, கரோனா நோயாளிளுக்கு தொலைபேசியில் ஆறுதலாக பேசுவது   மூன்று வித பணிகளில் முக்கியமாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.மேலும் கரோனா விழிப்புணர்வுப்பணிகளில் ஈடுபடுத்தப்படவும் உள்ளனர்.

 இப்பணிகளுக்காக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர் ஆகிய கல்வி அலுவலர்கள் மூலம் திங்கள்கிழமை, தன்னார்வலராக பணிபுரிய வேண்டிய ஆசிரியர்களது விவரம்,வேகமாக சேகரிப்பட்டுவருகிறது. அந்தந்த மாவட்டங்களில் இதற்கான பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டவுடன் ஓரிரு நாட்களில் ஆசிரியர்களுக்கு பணிகள் வழங்கபட உள்ளது.

 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று எளிதில் பரவக்கூடும் என்பதால், 45 வயதுக்குள்பட்ட ஆசிரியர்களுக்கு இப்பணி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மே 24-ம் தேதி திங்கள்கிழமை, ஈரோடு மாநகராட்சி மற்றும் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் வீடுவீடாகச்சென்று கரோனா தொற்று இருப்பவர்களை கண்டறியும் பணியில் ஆசிரியர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்க்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com