மறைந்தும் மங்கையர்களின் மனதில் வாழும் 103 வயது கைராசி மூதாட்டி!
By பெரியார்மன்னன் | Published On : 04th November 2021 01:30 PM | Last Updated : 04th November 2021 01:30 PM | அ+அ அ- |

மூதாட்டி ஜெயகாந்தம்.
வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில், கடந்த 80 ஆண்டுகளாக, திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், கோயில் திருவிழா மற்றும் வாரச்சந்தைகளிலும், பண்டிகை தருணங்களில் கிராமங்களுக்கு கால்நடையாய் நடந்து சென்றும், 3 தலைமுறை பெண்களுக்கு வளையல் அணிவித்த 103 வயது மூதாட்டி மறைந்தும், கிராமப்புற பெண்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
வாழப்பாடி அடுத்த பேளூரை சேர்ந்த துரைசாமி மனைவி ஜெயகாந்தம் (103), வாழப்பாடி பகுதி வாரச்சந்தைகளுக்கும், கோயில் திருவிழாக்களுக்கும் சென்று, வளையல் வியாபாரம் செய்து வந்த இத்தம்பதியருக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். மகன் பிறந்த 3 ஆவது மாதத்திலேயே எதிர்பாராதவிதமாக துரைசாமி இறந்து போனார்.
இதையும் படிக்க | நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!
கணவரை இழந்தாலும் மனம் தளராத ஜெயகாந்தம், பிள்ளைகளை கரைசேர்க்க உறுதி கொண்டு, கணவர் கற்றுத்தந்த வளையல் வியாபாரத்தை கைவிடாமல் தொடர்ந்தார். இதில் கிடைத்த வருவாயை கொண்டு தனது மகன் ராஜா கண்ணனை ஆசிரியர் பயிற்சி படிக்க வைத்தார். வாழப்பாடியை சேர்ந்த ஜெயபால் என்பவருக்கு, தனது மகள் ரேணுகாதேவியை திருமணம் செய்து வைத்தார். இவரது மகன் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மகள் ரேணுகாதேவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து போனார். மகளின் குழந்தைகளை வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்து வைத்த மூதாட்டி ஜெயகாந்தம், கொள்ளு பேரன் பேத்திகளையும் வளர்த்து ஆளாக்கினார்.
கடந்த 80 ஆண்டுக்கும் மேலாக வாழப்பாடி பகுதி கிராமங்களில் திருமணம், வளைகாப்பு, காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளிலும், கோயில் திருவிழாக்கள் மற்றும் வாரச்சந்தைகளிலும் முகாமிட்டு, மூன்று தலைமுறை பெண்களுக்கு வளையல் அணிவித்துள்ள ஜெயகாந்தம், விதவை என்ற மூடத்தனத்தை விரட்டி, கைராசி மூதாட்டி என்ற பெருமையோடு வலம் வந்தார்.
100 வயதை கடந்தும் கைராசி வளையல் மூதாட்டி ஜெயகாந்தம், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தருணங்களில், வாழப்பாடி பகுதி கிராமங்களுக்கு கால்நடையாய் நடந்து சென்று, 3 தலைமுறை பெண்களுக்கு வளையல் அணிவித்து கலாச்சாரத்தை காத்து வந்தார்.
இதையும் படிக்க | உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் காருண்யா பேராசிரியர்கள்
"103 வயது கடந்தும் தனது அன்றாட பணிகளை தானே செய்து கொள்கிறேன். நோய்நொடியின்றி என்னை வாழவைக்கும் தெய்வத்திற்கு தினந்தோறும் நன்றி சொல்வேன். தள்ளாத வயதிலும், யார் கையையும் எதிர்பார்க்காமல் உழைத்து சம்பாதித்து உண்பது தனி சுகமமென', பெருமிதத்தோடு தெரிவித்து வந்த கைராசி வளையல் மூதாட்டி ஜெயகாந்தம், அண்மையில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.
வாழப்பாடி பகுதி கிராமப்புற பெண்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த மூதாட்டி ஜெயகாந்தம், தீபாவளி தருணத்தில், இப்பகுதி பெண்களின் நினைவில் நிற்பதில் வியப்பொன்றும் இல்லை.