சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆஸ்துமாவை அடிபணியச் செய்யுமா ‘துளசி’?

‘மூலிகைகளின் இளவரசி’ என்ற பெயர் பெற்ற துளசியின் மருத்துவ குணங்கள் அனைத்தும் கூறினால் அதுவே நம்மை பெருமூச்சு வாங்கச் செய்யும்.
துளசி
துளசி

மழைகாலத்தோடு, குளிரும் சேர்ந்து நம்மை வதைக்க துவங்கிவிட்டது. பருவ நிலை மாறுபாடு , இயற்கை சீற்றங்களால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ துவங்கும் காலம் இது. தொற்றா நோய்களில் மிக முக்கியமான சுவாசப்பாதை நோய், ஆஸ்துமா பாதிப்பு அதிகமாகும் தருணம் இந்த குளிர்க்காலம். 

அதிகரித்த சுற்றுசூழல் மாசும், குளிர்காற்றும் ஒன்று சேர்ந்து நம் நுரையீரல் காற்றுப்பைக்குள் சென்று, ஒவ்வாமை அழற்சியை மூச்சுக்குழலிலும் ஏற்படுத்தி, மூச்சு விட சிரமத்தை ஏற்படுத்தும். அவசர நேரத்தில் உதவும் இந்த இன்ஹேலரை மாதக்கணக்கில் எடுத்தும், குறையாத பெருமூச்சு, ஆஸ்துமா நோயாளிகளை அச்சத்தில் ஆழ்த்தும். 

இது தவிர, அதிக இன்ஹேலர் எடுப்பதால் தசை நடுக்கம், எலும்பு வலி போன்ற பல்வேறு பின்விளைவுகள் வேறு. இன்னும் எத்தனை காலம் தான் உயிர் மூச்சோடு இந்த போராட்டம் என்று அவர்களை செயற்கை சுவாசத்தை நாட வைக்கும்.

அடிக்கடி வீசிங் வருகிறது டாக்டர், காலை இரவு என்று இருவேளையும் பஃப் (puff) எடுத்தும் குறையவில்லை, இரவில் தூங்கியே நெடுநாள் ஆகிவிட்டது, என்று மன அழுத்தத்துடன் வாழ்நாளை கடக்கும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் ‘துளசி’ என்கிற மூலிகை அமுதம். 

இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லா ஒன்று, முந்தைய தலைமுறையினர் வரைக்கும் பழக்கப்பட்ட ஒன்று ‘துளசி மாடம்’. அதிகாலையில் எழுந்து துளசி மாடத்தை சுற்றி வந்து இயற்கையான காற்றை சுவாசித்து , அதில் நான்கு இலைகளை பறித்து மென்று தின்று ஆரோக்கியமாக மூச்சு விட்ட காலம் , மறைந்து போன ஒன்று. அந்த அளவிற்கு மணம் மட்டுமல்ல, மருத்துவ குணமும் வாய்ந்தது இந்த துளசி. அதனால் தான் என்னமோ, அதனை ஆன்மிகத்தோடு சேர்த்து நம்முடனே பழக்கப்படுத்தி இருந்தனர்  நம் முன்னோர்கள். 

‘மூலிகைகளின் இளவரசி’ என்ற பெயர் பெற்ற துளசியின் மருத்துவ குணங்கள் அனைத்தும் கூறினால் அதுவே நம்மை பெருமூச்சு வாங்கச் செய்யும். துளசி, நுரையீரல் தொற்றுக்கு காரணமான பல்வேறு நோய்க்கிருமிகளை அழிக்கும், அதாவது  பிராட் ஸ்பெக்ட்ரம் கிருமிக்கொல்லியாக செயல்படும்  தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும், புற்று நோய் செல்களுக்கு எதிராக செயல்படும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் உடையது. 

சுவாசப்பாதை நோய்களை சீராக்குவது மட்டுமின்றி மனதிற்கும் புத்துணர்ச்சி தரும் ஆன்டி- ஸ்ட்ரெஸ் செய்கையும் இதற்குண்டு.  இதன் இலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும்  வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ இயற்கையாகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள யூஜீனால் எனும் மணமுள்ள முதன்மை வேதிப்பொருள் பல மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளது.

கிட்டத்தட்ட கற்பூர வாசனையும் , காரச் சுவையும் கொண்ட துளசியை வாயிலிட்டு மென்றால் சாதாரண சளி, இருமல், கோழைக்கட்டு விலகும். துளசியில் பல வகைகள் உள்ளன. நாம் பெரும்பாலும் அறிந்தது நல்துளசியும்,கருந்துளசியும். 'கபத்தினை அல்லாது காசம் சுவாசம் காணாது' என்று இருமல், ஆஸ்துமாவிற்கு காரணம் நுரையீரலில் சேரும் கபமே (சளி) என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. அனைத்து வகை துளசிக்கும் இந்த கபத்தை போக்கும் தன்மை உள்ளது. “இருமலோடு நெஞ்சிலிழுப்பு சுவாசம் -இவை போக்கும்” என துளசியை பற்றி அகத்தியர் குணவாகடம் கூறுகின்றது. 

சுவாசப்பாதை நோய்களில் இதன் பங்கு அளப்பரியது. ஆஸ்துமா நோயாளிகளின் கவலையை போக்கும் எளிய சித்த மருத்துவ மூலிகை என்றே ‘துளசியை’ சொல்லலாம். சுவாசப்பாதை தொற்றுகிருமியான ப்ளூ வைரசுக்கு எதிராக செயல்படும் தன்மை உடையது . நுரையீரல் மூச்சுகுழலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து ,மூச்சு குழாயை விரிவடைய செய்து சுவாசத்தை சீராக்கும். இருமலை குறைக்கும். 

துளசி இலையோடு, அதிமதுரம்,சுக்கு, மிளகு, திப்பிலி, மஞ்சள் மற்றும் சிறிதளவு தேன் சேர்த்து தேநீராக்கி குடித்து வர ஆஸ்துமா உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும். நீரிழிவோடு ஆஸ்துமாவால் அவதியுறும் நபர்கள் இதில் சிறிது லவங்கப்பட்டை சேர்த்து குடிக்க ரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்படும். காலம்காலமாக இன்ஹலேர் எடுப்பவர்களும் இதனை சேர்த்து பயன்படுத்த நல்ல முன்னேற்றம் தரும்.

வீட்டின் அறைகளில் மாடங்கள் இல்லாமல் கூட இருக்கும் , ஆனால் துளசி மாடங்கள் இல்லாத வீடே இருக்காது என்கிற அளவிற்கு நம் வீட்டில் ஒரு அங்கமாய் இருந்தவை அவை. அத்தகைய காலம் மாறியது வருத்தம் தான். நாம் எப்போது நம் பாரம்பரியத்தை மறந்தோமோ அப்போதே நோய்கள் நம் பரம்பரை மரபணுவில் ஒன்றிணைந்து நம்மை ஆளத்துவங்கிவிட்டன. ஒவ்வொரு வீட்டிலும் மீண்டும் துளசி மாடம் அமைத்து, ஆன்மீகத்தோடு அறிவியலை உற்றுநோக்கி பயன்படுத்த துவங்கினால் ஆஸ்துமாவை மட்டுமல்ல, பல்வேறு நோய்களையும் அடிபணிய செய்யமுடியும்.

மருத்துவரின் தொடர்புக்கான இ-மெயில்- drthillai.mdsiddha@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com