சுகம் தரும் சித்த மருத்துவம்: குளிர்கால ஒவ்வாமையை ஓட்டும் 'மஞ்சள்'

மஞ்சள் நீரால் குளித்து, மஞ்சள் நீரையே குடித்து தொற்றுநோய் கிருமிகள் தமக்கும், பிறர்க்கும் பரவாமல்  தடுத்து அறிவியலை ஆன்மீகத்தோடு சேர்ந்து நாம் கடைப்பிடித்து வருவது வியப்பூட்டும் ஆச்சர்யம். 
மஞ்சள் பொடி
மஞ்சள் பொடி

குளிர்காலத்தில் காலையில் தும்மலுடன் வாழ்க்கையை தொடங்குபவர்கள் ஏராளம். இது நம் நாட்டில் வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல. பிற வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பலருக்கும் இதில் அனுபவம் இருக்கும்.

பருவநிலை மாறுபடும் போதும், காற்று மாசுபாட்டின் காரணமாகவும் ஏப்போதாவது ஏற்படும் இந்த ஒவ்வாமை அடிக்கடி ஏற்பட்டு பலரை வருந்த செய்யும். டாக்டர் எனக்கு அல்ர்ஜி பிரச்னை பல வருடமாக இருக்கிறது என்று வருத்தப்படுபவர்கள் நம்மில் பலர் இருக்க, வழக்கமாக அதற்கென்று எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளால் உடல் சோர்வு, அதிக தூக்கம், சிலருக்கு மலச்சிக்கல் போன்ற பிற தொந்தரவுகள் வேறு. அவர்களுக்கு சிறந்த பயன் தருவதாக உள்ள பாரம்பரியமிக்க, நறுமணமுள்ள சித்த மருத்துவ மூலிகைகளுள் ஒன்று 'மஞ்சள்'.

அன்றாடம் நாம் உண்ணும் உணவில் மஞ்சள் இல்லாத பொருள்களே இல்லை. அன்றாட வாழ்வில் மட்டுமல்ல ஆன்மிக வாழ்விலும் நம்முடனே இருந்து நம்மை காத்து கொண்டு இருப்பது இந்த மஞ்சள். .அன்றாட வாழ்வில், மஞ்சள்  தினமும் 1  பில்லியன் மக்களால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தெற்கு ஆசியாவில் திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு மஞ்சள் பூசுவது, நறுமணத்திற்காக மட்டுமின்றி அவர்களை கிருமிகள் அண்டாமல் இருக்கவும் தான். 

நம் நாட்டிலும் பல்வேறு திருவிழாக் காலங்களில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க, குவாரன்டின் எனும் தனிமைபடுத்தும் குறியீடாக மஞ்சளை கையில் கட்டுவது நம் மரபு. மஞ்சளில் காப்பு காட்டுதலில் தொடங்கி, மஞ்சளை கையிலும் கட்டிக்கொண்டு, மஞ்சள் நீரால் குளித்து, மஞ்சள் நீரையே குடித்து தொற்று நோய் கிருமிகள் தமக்கும், பிறர்க்கும் பரவாமல்  தடுத்து அறிவியலை ஆன்மீகத்தோடு சேர்ந்து நாம் கடைப்பிடித்து வருவது வியப்பூட்டும் ஆச்சர்யம். 

அத்தனை மருத்துவ குணங்களுக்கு காரணம் மஞ்சளில் உள்ள ‘குர்குமினய்ட்ஸ்’எனப்படும் வேதிப்பொருள்களே. உலக நாடுகள் பலவற்றிலும் மிகப்பெரிய ஆராய்ச்சி  பொருளாக விளங்குவது இந்த 'குர்குமின்கள்'. 

சிறப்பான மருத்துவ குணங்கள் கொண்ட மஞ்சள்.

ஒவ்வாமையால் ஏற்படும் மூக்கடைப்பு முதல் புற்றுநோய் வரை பல்வேறு நோய்நிலைகளில் மிகச்சிறந்த மருத்துவகுணம் உடையது. பல்வேறு கிருமிகளை அழிக்கும் தன்மையால் பிராட் ஸ்பெக்ட்ரம் ஆன்டிபையாட்டிக்- ஆக செயல்படும். நம் உடலில் கிருமிகளை எதிர்த்துபோராடும் வெள்ளையணுக்கள் உற்பத்தியை அதிகரிப்பதோடு, அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கும் தன்மையும் இதற்கு உண்டு. 

சித்த மருத்துவத்தில் தோல் நோய் சிகிச்சையிலும், மூட்டு வாத சிகிச்சையிலும் மஞ்சள் முதன்மையாக  உள்ளது. மற்ற மருந்துகளுடன் மஞ்சள் சேரும் போது அந்த மருந்தின் செயல் திறனை ஊக்குவிக்கும் காரணியாக,(‘பயோ என்ஹான்சர்’) ஆக உதவுகிறது. உணவில் நோய்க்கு காரணமான திரிதோஷத்தை  சமப்படுத்தும் பொருளாக சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது. சீன மருத்துவத்தில் வயிற்று புண், வயிற்று வலி, ஒவ்வாமை, கட்டிகள் இவற்றிற்கு முதன்மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஹாங்காங்கில் நாட்டிலும் ‘மஞ்சள் தேநீர்’ மிகப்பிரபலமான ஒன்று. 

இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள் பொடியினை  தினமும் பாலுடன்  ஒரு  தேக்கரண்டி அளவு, 1/4 தேக்கரண்டி மிளகு  பொடி சேர்த்து எடுக்க,  நோய் எதிர்ப்பாற்றலை  அதிகரிக்கும் . இது அடுக்கு தும்மல் மட்டுமல்லாது அனைத்து ஒவ்வாமை நிலைகளிலும் சிறந்த பலன்  தரும். 

அல்ர்ஜி என்ற ஒவ்வாமைக்கு காரணமான மாஸ்ட் செல்களின் சிதைவை தடுத்து, ஹிஸ்டமின் உற்பத்தியை தடுக்கும் தன்மை உடையது. அழற்சி அல்லது வீக்கத்திற்கு காரணமான இன்டர்லுக்கின்-1,6 மற்றும் டியுமர் நெக்ரோசிஸ் பாக்டர் போன்ற பல சைட்டோகினின் செயல்பாட்டை தடுக்கும் தன்மை உடையது.  மிளகில் உள்ள ‘பைப்பரின்’ எனும் அல்கலாய்டு மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ செயல்திறனை மேலும் அதிகரிக்கும்.

மூட்டுவாத நோயாளிகள், முடக்கு வாதம் இவற்றில் மூட்டு வீக்கத்தை குறைப்பதிலும், ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்புகளில் கால்சியம் சத்து குறைந்த நிலை வராமல் தடுப்பதிலும் இது உதவும்.

நீரிழிவு நோயாளிகள் நெல்லிக்காய் சாறுடன் மஞ்சள் பொடி சேர்த்து அருந்த, சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். மேலும் கணைய  செல்களை தூண்டி, இன்சுலின் சுரப்பினை அதிகப்படுத்த உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் புண்ணிற்கு சிறந்த பயன் தரும். தலைபாரம், தலைவலி, சைனஸ் வீக்கம்  போன்ற நோய்களுக்கு நொச்சி இலையினை மஞ்சள் பொடி சேர்த்து வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தல் நன்மை தரும். மஞ்சள் கொம்பினை சுட்டு முகரவும் செய்யலாம். 

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏற்படக்கூடிய அலர்ஜிக்  காஃப் அதாவது ஒவ்வாமை இருமலுக்கு மஞ்சள் பொடியினை சிறிது திப்பிலி, அதிமதுரம் மற்றும்  தேனுடன் சேர்த்து  பயன்படுத்த  மிகச்சிறந்த நிவாரணம் தரும்.

கண் நோய் உள்ளவர்கள் கைக்குட்டையை மஞ்சள் நீரில் தோய்த்து பயன்படுத்த கண் நோய் நீங்குவதுடன் நோய் பரவாமல் தடுக்கப்படும். நாட்பட்ட ஆன்டி-பயோட்டிக் தெரபி எடுக்கும் போது, மஞ்சள் பொடியினை உடன் சேர்த்து எடுக்க நல்ல பலனை தரும். தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பொது மஞ்சள் கலந்த பால் குடிப்பது சிறந்தது. இதை 'கோல்டன் மில்க்' அதாவது 'தங்கப்பால்' என்று கூறுவது சிறப்பு.

இயற்கையாக  வாங்கி பொடித்து பயன்படுத்தும் மஞ்சளுக்கு சிறப்பான மருத்துவ குணங்கள் உண்டு. இவ்வாறு மஞ்சள் பொடியினை உட்கொள்வது, அல்ர்ஜி முதல் அல்சைமர் (ஒவ்வாமை முதல் மறதி நோய் வரை) பல்வேறு நோய் நிலைகளுக்கு மிகச்சிறந்த பலன் தரும். மஞ்சள் நமது பாரம்பர்ய மருத்துவ மூலிகை மட்டுமல்ல, நமது அடையாளமும் கூட தான்.

தொடர்புக்கு... மெயில் ஐ.டி: drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com