தஞ்சையின் பகத்சிங்

தமிழகத்திலும் குறிப்பாகத் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பலர் விடுதலை வேள்வியில் இன்னுயிரை இழந்து போராட்டக் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டனர்.
வாட்டாக்குடி இரணியன்
வாட்டாக்குடி இரணியன்

இந்திய நாடு விடுதலை பெற்று 75ஆவது விடுதலை நாள் விழாவை இன்று இந்திய மக்களும் அரசும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். இத்தகு விடுதலை பெறுவதற்கு ஒரு நூற்றாண்டு காலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அடிமைத்தளையை உடைத்தெறிய ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பு அளப்பரியது. தமிழகத்திலும் குறிப்பாகத் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பலர் விடுதலை வேள்வியில் இன்னுயிரை இழந்து போராட்டக் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டனர்.

எப்படி இருபத்தி மூன்றே வயதில் இந்திய விடுதலைக்காகப் பாராளுமன்றத்தின் மையப்பகுதியில் குண்டு வீசி, இறந்துபோனானோ பகத்சிங் அதுபோலத்தான் பிடிபட்டு தூக்குமேடையில் 30ஆவது வயதிலேயே காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவீரன் விடுதலைப் போராளி நாடு கடந்து சென்று சிங்கப்பூரில் விடுதலைக்காகப் பாடுபட்டு அங்கேயே 12ஆயிரம் பேரை இணைத்து இயக்கம் கண்ட மாவீரன் வெங்கடாசலம்.

உலகம் போற்றும் சிந்தனையாளர் சாக்ரடீஸ். இவர் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் கிரேக்க அரசால் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதை வரலாறு கூறுகின்றது. அதேபோன்று தென்பறை இயக்கத்தின் தளபதி களப்பால் குப்பு திருச்சி சிறையில் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். களப்பால் குப்புவின் வீரம் செறிந்த வரலாற்றைப் போராட்ட முறையில் அறிந்து அவர் பிறந்த தென்பறை கிராமத்தைத் தரிசிக்க வேண்டி சிங்கப்பூரில் இருந்து தாயகம் திரும்பினார் வெங்கடாசலம்.

தஞ்சை மாவட்டத்தில் அமைந்த சிற்றூர் வாட்டாக்குடி. இவ்வூரில் பிறந்த வெங்கடாசலம் வரலாற்றில் வாட்டாக்குடி இரணியன் என்று போற்றப்படுகிறார். சிறு வயதில் பொதுவுடைமைக் கருத்திலும் பகுத்தறிவுக் கருத்திலும் தன் சிந்தையைச் செலுத்தி செயல்பட்ட வெங்கடாச்சலம் சிங்கப்பூர் சென்றதும் தன் பெயரை இரணியனாக மாற்றிக்கொண்டார். ஆண்டவனே தவறு செய்தாலும் எதிர்த்து நிற்கும் கொள்கை கொண்ட இவர் இரணியன் என்று பெயர் மாற்றம் செய்து ஆதிக்க கோட்டைகளை உடைத்தெறியும் ஈட்டி முனையாகத் திகழ்ந்தார்.

நேதாஜியின் இந்தியத் தேசிய ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற வாட்டாக்குடி இரணியன் சிங்கப்பூரிலே வெள்ளையனை எதிர்த்துப் போராடினார். இரண்டாம் உலகப் போர் நிறைவுபெற்று மீண்டும் ஆங்கிலேயர் ஆதிக்கம் தலைதூக்கிய வேளையில் சிங்கப்பூரில் இருந்த பன்னிரெண்டாயிரம் துறைமுகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி தொழிலாளர் சங்கத்தை ஏற்படுத்தியதோடு அதன் தலைவராகவும் செயலாற்றிய பெருமை இரணியனுக்கு உண்டு. ஆங்கிலேயர்களின் தொங்குதசையான மக்களைச் சுரண்டும் முதலாளிகளையும், முதலாளிகளுக்கு அடியாளாக இருந்த மனித சமூக விரோதிகளையும் எதிர்த்து நின்று நேரடி மோதலில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றார். இதன் காரணமாக அங்கிருந்த தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி குடும்பப் பெண்களுக்கும் நிரந்தர அமைதி கிடைத்தது.

<strong>வாட்டாக்குடி கிராமத்திலுள்ள நினைவுத் தூண்</strong>
வாட்டாக்குடி கிராமத்திலுள்ள நினைவுத் தூண்

சிங்கப்பூரில் வாழ்ந்த காலத்தில் மாவீரன் மலேயா கணபதி, வீரசேனன் ஆகியோரின் தொடர்பால் கல்வியறிவில் தேர்ச்சி பெற்றதோடு நல்ல மார்க்சியவாதியாகவும் தேர்ச்சி பெற்றார். சிங்கப்பூரில் இவர் கற்ற கல்வியும் தொழிற்சங்கத்தில் இவர் பெற்ற அனுபவமும் இவரைச் சிறந்த மார்க்சீயவாதியாகவும், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட உழவர் பெருங்குடி மக்களின் விடுதலைப் போராளியாகவும் மாற்றியது. உலகத் தொழிலாளர்களே ஒன்றுகூடுங்கள் என்று அறைகூவல் விடுத்த மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த மே 5ஆம் நாள்தான் இரணியன் சுட்டுக்கொல்லப்பட்ட நாளாகும். காந்தியடிகள் எவ்வாறு விடுதலைக்குப் பின் சுட்டுக் கொல்லப்பட்டாரோ அதுபோல விடுதலை பெற்ற இந்தியாவில் சுட்டுக் கொல்லப்பட்டான் இரணியன்.

சிங்கப்பூரில் இரகசியமாக இயங்கியது கம்யூனிஸ்ட் இயக்கம். வெள்ளையருடன் போராடாமல் மலேசியாவை மீட்க முடியாது என்று இவ்வியக்கம் நம்பியதால் கொரில்லா போர் முறையை இளைஞர்களுக்குக் கற்றுத் தந்தது. இதில் பயிற்சி பெற்ற இரணியனின் திறமையைப் பார்த்து பயிற்சி அளித்த மூத்த முன்னோடிகளே வியந்து போனார்கள்.

இவருக்கு வீரத்தை ஊட்டியது பகத்சிங்கின் தியாகம். இவருக்கு நேதாஜியை மிகவும் பிடிக்கும். இந்தியத் தேசிய ராணுவத்தில் இணைந்து பல்வேறு பயிற்சிகளைப் பெற்றார். இவர் திறமையைக் கண்டு ஐ.என்.ஏ. பதவி உயர்வுகளை வழங்கியது.

வாட்டாக்குடியில் பிறந்து வடசேரியில் சுடப்பட்டு, பட்டுக்கோட்டையில் இந்த மாபெரும் மனிதன் எரியூட்டப்பட்டான். வாட்டாக்குடி இரணியனைப் பற்றிய செய்தி நெகிழ்வினை ஏற்படுத்தக்கூடியது. தனிமனித வாழ்விலும் பொது வாழ்விலும் தனக்கு நிகர் தானே என்று தூய்மையாக வாழ்ந்தவன். அவன் நினைத்திருந்தால் சிங்கப்பூரில் இருந்த ரவுடிக் கூட்டத்திற்குத் தலைவனாகி கோடிகோடியாகச் சொத்து சேர்த்திருக்கலாம். பண்ணைகளில் சூறையாடியதைச் சுருட்டியிருக்கலாம். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. எளிய மக்களின் விடுதலைக்குப் போராடி மக்களின் மனம் கவர்ந்த மாமனிதனாகத் திகழ்ந்தான்.

கட்டுரையாளர்: தமிழ்ப் பண்டிதர்
சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com