இணையதள முடக்கத்தால் விவசாயிகள் தவிப்பு!

பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்துக்கான இணையதளம் (பிஎம் கிசான்) அவ்வப்போது முடங்கி விடுவதால் புதிதாக விண்ணப்பிக்கவும், விவரங்களைப் புதுப்பிக்கவும் முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
இணையதள முடக்கத்தால் விவசாயிகள் தவிப்பு!


பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்துக்கான இணையதளம் (பிஎம் கிசான்) அவ்வப்போது முடங்கி விடுவதால் புதிதாக விண்ணப்பிக்கவும், விவரங்களைப் புதுப்பிக்கவும் முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
சிறு, குறு விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டம் 2019-இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 ஊக்கத் தொகை அளிக்கப்படும். இந்தத் தொகையானது 4 மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2,000 வீதம் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதன்படி, தமிழகத்தில் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்திற்கான பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக ஒரு லட்சம் பேர் பயனாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டனர்.
போலி பயனாளிகள் மோசடி:  விவசாய நிதியுதவித் திட்டத்தின் தொடக்கத்தில், அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில், விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாவட்ட அளவிலேயே பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இதனிடையே இத் திட்டத்தில் போலி பயனாளிகள் சேர்க்கப்பட்டு பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. 

இது தொடர்பாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேளாண் துறை அலுவலர்கள், வேளாண் தொழில்நுட்ப முகமை பணியாளர்கள், தனியார் கணினி மைய உரிமையாளர்கள் பலர் கடந்த ஓராண்டுக்கும் முன்பு கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

பயனாளி தேர்வில் மாற்றம்: போலி பயனாளிகள் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்த பிறகு, பயனாளிகள் தேர்வு முறையில் கடும் கட்டுப்பாடுகளை வேளாண் துறையினர் கொண்டு வந்துள்ளனர்.  அரசு இ-சேவை மையங்களில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் கள ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, வேளாண் துறை இயக்குநரால் பயனாளிகள் இறுதி செய்யப்படுகின்றனர். 

இதன் பிறகே,  மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது. பல்வேறு கட்ட சரிபார்ப்புக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. தவறான பயனாளிகளைத் தவிர்க்க இத்தகைய நடவடிக்கை அவசியம் என்றாலும், விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவே விவசாயிகள் கடும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 

இணையதளம் முடக்கம்: பிஎம் கிசான் இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்த இணையதளம் அவ்வப்போது முடங்கிவிடுவதால், இ-சேவை மையங்களுக்குப் பல முறை செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

விவசாய நிதியுதவி திட்டத்தில் முறைகேடு கண்டறியப்பட்ட பிறகு, பயனாளிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், குறிப்பிட்ட முகவரியில் இல்லாத விவசாயிகள், கைப்பேசி எண் தவறாக அளித்தவர்கள் என ஆயிரக்கணக்கான பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், சில பகுதிகளில் ஆய்வின்போது தங்களது ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்கள் பலரும் நீக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகள் அலைக்கழிப்பு: விவசாய நிதியுதவித் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது, இடையிலேயே தவணைத் தொகை நிறுத்தப்பட்டது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.  பிஎம் கிசான் திட்டம் என்றவுடனேயே, இ-சேவை மையத்துக்குச் செல்லுங்கள் என்று வேளாண் அலுவலகங்களுக்குச் செல்லும் விவசாயிகளிடம் வேளாண் அலுவலர்கள் கூறுகின்றனர். 

இ-சேவை மையங்களுக்குச் சென்றால், இணையதள இணைப்பு கிடைக்கவில்லை எனக் கூறி அனுப்பிவிடுகின்றனர். வேளாண் அலுவலர்களிடம் ஏதாவது தகவலைப் பெற்றுவிடலாம் என நினைத்து  விவசாயிகள் அணுகும்போது, ""மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இணையதளம் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது'' என வேளாண் துறையினர் 
தெரிவிக்கின்றனர். 

 ஒட்டுமொத்தமாக இத் திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம்  அளிப்பதற்கு வேளாண் துறையினர் தயாராக இல்லை என்பதே பெரும்பாலான விவசாயிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இதனால், விவசாயிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
நிதியுதவி நிறுத்தப்படும் அபாயம்:  விவசாய உதவித் திட்டத்தில் இதுவரை 10 தவணைகள் நிதியுதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், 11-ஆவது தவணையைப் பெற பயனாளிகள் தங்களது ஆதார் எண், அதோடு இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றை பிஎம் கிசான் இணையதளத்தில் மார்ச் 31-க்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம் கிசான் இணையதளத்தில் பயனாளிகள் தாங்களாக பதிவு செய்ய இயலாது. இ-சேவை மையங்களில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆனால், இ-சேவை மையங்களுக்குச் செல்லும் விவசாயிகள், பயோமெட்ரிக் பதிவு செய்வதற்கான இணைப்பு கிடைக்காமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர். பழைய பயனாளிகள் ஏராளமானோர் ஆதார் விவரங்களை இணைக்காமல் இருக்கின்றனர். குறுகிய அவகாசமே உள்ள நிலையில், பதிவு செய்ய முடியாமல் போனால் உதவித் தொகை நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

விவசாயிகள் தகவல் பெறலாம்:  பிஎம் கிசான் இணையதளத்தை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துவதால், சில நேரங்களில் சர்வர் முடங்கி விடுகிறது. அத்தகைய நேரங்களில் விண்ணப்பப் பதிவு, ஆதார் விவரங்கள் பதிவு ஆகியவற்றைச் செய்ய முடிவதில்லை.  
பயனாளிகள் தாங்களாகவே இந்தப் பதிவுகளை மேற்கொள்ள இயலாது என்பதால்தான் இ-சேவை மையங்கள் வழியாக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. 

ஆகவே, பயனாளிகள் அனைவருக்கும் ஆதார் பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை  வட்டார வேளாண் உதவி இயக்குநர்களிடம் பெறலாம். உரிய அறிவுறுத்தல்கள் வேளாண் உதவி இயக்குநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று வேளாண் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com