சிலிண்டர் மானியம் ரூ.200 யாருக்கு கிடைக்கும்?

ரஷியா-உக்ரைன் போர், வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனை என உலக அரசியல் நகர்ந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

ரஷியா-உக்ரைன் போர், வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனை என உலக அரசியல் நகர்ந்து வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை தற்போதைய ஒரே பிரச்னையாக இருப்பது, விலைவாசி உயர்வு. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தொடங்கி சமையல் எண்ணெய், கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வரையிலான விலைஉயர்வு, சாமானிய மக்களின் பட்ஜெட்டை பதம்பார்த்துள்ளது. 

இவை ஒருபுறமிக்க வீட்டு வாடகை உயர்வு, கடன்களுக்கான வட்டி விகித உயர்வு உள்ளிட்டவற்றாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சூழலே இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம் என விளக்கமளித்து வந்த மத்திய அரசு, மக்களின் துயர்துடைக்கும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படுவதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. 

மத்திய அரசின் அறிவிப்பினால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50-யும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-யும் குறைந்துள்ளது. மத்திய அரசைத் தொடர்ந்து மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீது விதித்து வரும் மதிப்புகூட்டு வரியை சற்று குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக எரிபொருள் மீதான விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. 

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதைப் பெற சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. நாட்டில் சுமார் 30 கோடி பேர் சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மானியம் கிடைக்கப் போவதில்லை.

மாறாக, மத்திய அரசு செயல்படுத்தி வரும் உஜ்வலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்றவர்கள் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தலா ரூ.200 மானியத்தைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். 

அதன்படி, உஜ்வலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள பயனாளர்கள் பெறும் ஒவ்வொரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் ரூ.200 மானியம் வழங்கப்படவுள்ளது. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் ரூ.1,000-ஆக இருக்கும் நிலையில், உஜ்வாலா திட்டப் பலனாளர்களுக்கு மானியமாக ரூ.200 கிடைக்கும். அதனால், அவர்களுக்கு எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் ரூ.800-ஆக மட்டுமே இருக்கும். அவர்களுக்கு மானியம் வழங்குவதன் மூலமாக சுமார் ரூ.6,100 கோடி கூடுதலாக செலவாகும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

உஜ்வலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டரைப் பெற்றுள்ள சுமார் 9 கோடி பேருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படவுள்ளது. 

மற்ற 21 கோடி பேருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்காக எந்தவித மானியமும் கிடைக்கப் போவதில்லை. உஜ்வலா திட்டப் பலனாளர்களும் மானிய விலையில் சிலிண்டரைப் பெறுவதில் நிபந்தனை உள்ளது. ஆண்டுக்கு அவர்கள் பெறும் 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படவுள்ளது. அதற்கு அதிகமாக வாங்கும் சிலிண்டர்களுக்கு மானியம் கிடைக்காது. மானியத் தொகையானது பயனாளர்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாகச் செலுத்தப்படவுள்ளது. 

உஜ்வலா திட்டப் பயனாளிகள் விறகு, மண்ணெண்ணெய் ஆகியவற்றை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் பெண்களின் உடல்நலமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வந்தது. அதைத் தடுக்கும் நோக்கில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்தது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அடுப்பின் விலையும் அதிகமாக இருந்ததால், ஏழைகள் தொடர்ந்து விறகு அடுப்பையும் மண்ணெண்ணெய் அடுப்பையுமே பயன்படுத்தி வந்தனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் நோக்கில் உஜ்வலா திட்டத்தைக் கடந்த 2016-ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, கிராமப்புற ஏழைகளுக்கு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரும் அடுப்பும் இலவசமாக வழங்கப்பட்டது. பட்டியலினத்தோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 18 வயதுக்கும் அதிகமான பெண்கள் பெயரில் சமையல் எரிவாயு இணைப்பை இத்திட்டத்தின் கீழ் பெற முடியும். கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் சுமார் 9.17 கோடி பேர் உஜ்வலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ளனர். 

தொடரும் சவால்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அண்மையில் பெறப்பட்ட தகவலின்படி, கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் சுமார் 90 லட்சம் உஜ்வலா திட்டப் பயனாளர்கள் 2-ஆவது சமையல் எரிவாயு சிலிண்டரைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. 1 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்கள் 2-ஆவது முறை மட்டுமே சிலிண்டரைப் பெற்றுள்ளனர்.

அதற்கு அதிகமாக சிலிண்டரை அவர்கள் பெறவில்லை. இதன் மூலமாக, உஜ்வலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டும் முதலாவது சிலிண்டர் காலியாகிவிட்டால், அடுத்த சிலிண்டரை விலைகொடுத்து வாங்க முடியாத பொருளாதார சிக்கலில் பல குடும்பங்கள் தவித்து வருவது தெரிகிறது. 

இத்தகைய பிரச்னைகளைப் போக்குவதற்கு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு அதிகரித்து வழங்க வேண்டும் என நிபுணர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.200 மானியத்தை நடுத்தர குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

நாட்டில் நடுத்தர குடும்பங்களே அதிகமாக உள்ள நிலையில், அவர்களுக்குத் திட்டங்களின் பலன்கள் கிடைக்காவிட்டால், பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பது கடினமே என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com