சோழர் கால அரண்மனை எங்கே?

தஞ்சையில் இப்போதுள்ள அரண்மனையே சோழர் காலத்திலும் அரண்மனையாக இருந்திருக்கும் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தஞ்சாவூரில் தற்போதுள்ள அரண்மனை வளாகம்.
தஞ்சாவூரில் தற்போதுள்ள அரண்மனை வளாகம்.
Published on
Updated on
3 min read

எண்ணற்ற நாடுகளை வெற்றிகொண்டு, கட்டியாண்ட சோழப் பேரரசர்களின் அரண்மனைகள் எல்லாம் என்னவாயின?

பிற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் பல வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றது. சோழ மன்னன் விஜயாலயன் காலத்தில் தொடங்கி மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் வளர்ச்சி பெற்று உயர்ந்த நிலையை எட்டியது. பின்னர் வந்த ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாக்கினார். இதனால், கி.பி. 850 முதல் கி.பி. 1026 வரை 176 ஆண்டுகள் புகழ்பெற்று விளங்கிய தஞ்சாவூர், அதன் பிறகு தனித்தன்மை இழக்கத் தொடங்கியது.

மூன்றாம் குலோத்துங்கச் சோழன் இறப்புக்குப் பிறகு கி.பி. 1218 ஆம் ஆண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து உறையூரையும், தஞ்சாவூரையும் தீயிட்டு அழித்தான். இதில், அரண்மனை, மாளிகைகள், மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்டடங்களும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இதனால், தஞ்சாவூர் கோட்டைப் பகுதியில் இருந்த சோழ மாளிகைகளும் அழிக்கப்பட்டன.

பாண்டியரின் படையெடுப்பால் அழிந்த தஞ்சை நகரமும், கோட்டையும் மீண்டும் 1311 ஆம் ஆண்டு மாலிக்காபூரின் படையெடுப்பின்போது மேலும் அழிவுக்கு உள்ளானது. 

 தஞ்சாவூரில் தற்போதுள்ள அரண்மனையின் முகப்பு வாயில் 
 தஞ்சாவூரில் தற்போதுள்ள அரண்மனையின் முகப்பு வாயில் 

இப்போது உள்ள அரண்மனை, நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. அதன் பிறகு வந்த மராட்டிய மன்னர்களும் இந்த அரண்மனையிலிருந்து ஆட்சி செய்ததுடன், விரிவுபடுத்தினர். இப்போது அதில் மராட்டிய வம்சத்தினர் வசித்து வருகின்றனர்.

இதனால், தஞ்சாவூரில் சோழர் கால அரண்மனை எங்கே இருந்தது என்ற கேள்வி ஆய்வாளர்கள் மத்தியில் இன்னமும் தொடர்கிறது. இதற்கான ஆய்வுகளும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. 

இதையும் படிக்க | தோல்வியே காணாத ராஜராஜ சோழன்!

இப்போதுள்ள அரண்மனைதான் ராஜராஜ சோழன் காலத்திலும் அரண்மனையாக இருந்ததாக சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

மணிக் கோபுரம், ஆயுத கோபுரம்
மணிக் கோபுரம், ஆயுத கோபுரம்

தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியில்தான் அரண்மனை இருந்ததாகச் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல் தூண் இதற்கு ஆதாரமாகக் குறிப்பிடப்படுகிறது.

சீனிவாசபுரம் அருகிலுள்ள ராஜராஜன் நகரில் 1989 ஆம் ஆண்டில் தனியார் இடத்தில் வீடு கட்ட ஒப்பந்ததாரர் அடித்தளம் அமைக்கத் தோண்டினார். அப்போது 10 அடி ஆழத்தில் மிக நீண்ட கல் தூண், கல்வெட்டுகளுடன் புதைந்திருந்தது தெரிய வந்தது. இதன் முக்கியத்துவம் உணராத ஒப்பந்ததாரர் அந்தத் தூணை 70 துண்டுகளாக உடைத்துவிட்டார். பின்னர், இந்தக் கல்தூண் துண்டுகள் மீட்கப்பட்டன. இதன் பின்னர், தமிழக அரசின் தொல்லியல் துறையினரும், இந்தியத் தொல்லியல் துறையினரும் இந்தக் கல்வெட்டுத் துண்டுகளைப் படி எடுத்து பதிவு செய்தனர். இப்போது, இந்தக் கல் தூண் தஞ்சாவூர் ராஜராஜன் அருங்காட்சியகத்தில் உள்ளது.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்தது:

தஞ்சாவூரில் தற்போது உள்ள அரண்மனை நாயக்கர்களால் கட்டப்பட்டது. அதைச் சூழ்ந்துள்ள 4 ராஜ வீதிகள், கோட்டை, அகழி சூழ்ந்த நகரமே சோழர் கால அரண்மனை எனக் கருதுவது தவறு. இப்போதைய தஞ்சாவூர் சோழர் காலத்தில் ஒரு பகுதி மட்டுமே.

தர்பார் மண்டபம் 
தர்பார் மண்டபம் 

சோழர் கால அரண்மனை தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வட மேற்கே உள்ள சீனிவாசபுரம், சிங்கப்பெருமாள் குளம், செக்கடிமேடு போன்ற பகுதிகளில்தான் இருந்திருக்க வேண்டும் என்பதாகத் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் அண்மைக் காலத்தில் ஒரு தடயம் கிடைத்தது. சீனிவாசபுரம் அருகேயுள்ள ராஜராஜன் நகரில் கண்டெடுக்கப்பட்ட கல் தூண் மீட்கப்பட்டு, முனைவர் இரா. நாகசாமியின் உதவியுடன் படிக்கப்பட்டது. இதில், 3 புறங்களில் கிரந்த தமிழ் எழுத்துகளில் வடமொழிப் பாடல்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மற்ற கல்வெட்டுகள் அனைத்தும் திருக்கோயில்களுக்கும், மற்ற அரசு நடவடிக்கைகளுக்கும் உரிய சாசனமாக உள்ளது. இந்தக் கல் தூணில் உள்ள தகவல்கள் ராஜராஜனின் புகழை மட்டுமே பாடுபவையாக உள்ளன. இதுபோன்ற தூண்கள் அரண்மனை வாயிலில்தான் இருக்கும். 

இதையும் படிக்க |  பழையாறை - கிராமமாக மாறிய தலைநகரம்!

இதை எல்லாம் பார்க்கும்போது இந்தக் கல்வெட்டுத் தூண் ராஜராஜனின் அரண்மனையைச் சேர்ந்ததாக இருந்திருக்க வேண்டும். எனவே, இன்றைய தஞ்சாவூர் சீனிவாசபுரம், ராஜராஜன் நகர் பகுதிகளே சோழர்களின் அரண்மனை இருந்த இடம் எனக் கொள்ளலாம். இதை மேலும் வலியுறுத்தும் வகையில் இந்தக் கல் தூண் கிடைத்த இடத்துக்கு அருகிலேயே செங்கல் கட்டுமானப் பகுதியின் சில தடயங்களும் இருந்தன. இந்தப் பகுதியில் அகழாய்வு மேற்கொண்டால் அரண்மனை பற்றிய பல புதிய தகவல்களும் கிடைக்கும் என்றார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

மணிக்கோபுரம்
மணிக்கோபுரம்

ஆனால், கோட்டைப் பெருஞ்சுவர் மற்றும் அகழியின் அமைப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு இப்போதுள்ள அரண்மனையே சோழர் காலத்திலும் அரண்மனையாக இருந்திருக்கும் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தஞ்சை கோட்டையின் உள்பகுதி உள்ளாலை என்றும், வெளிப் பகுதி புறம்படி எனவும் குறிப்பிடுகின்றனர். எனவே, கோட்டையின் உள் பகுதியில் இப்போது இருக்கும் அரண்மனையே சோழர் காலத்திலும் அரண்மனையாக இருந்திருக்கலாம் என்பது சில ஆய்வாளர்களின் கருத்து.

இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கடல்சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சு. ராசவேலு தெரிவித்தது:

இன்றைய மராட்டியர் அரண்மனைப் பகுதியே காலங்காலமாக அரண்மனையாக இருந்துள்ளது. சோழர் கால அரண்மனையை நாயக்கர்களும் புதுப்பித்துக் கட்டியுள்ளனர். 

இதையும் படிக்க | தஞ்சையில் ராஜராஜன் சதய விழா தொடங்கியது!

சோழப் பேரரசின் அரண்மனை எந்தவித பாதுகாப்பும் இன்றி அரண்கள் இல்லாமல் இருந்திருக்காது. சோழருக்கும் முன்பாகவே கோட்டைக் கொத்தளங்களுடன் இருந்த தஞ்சாவூரின் புறப்பகுதியில் அரண்மனை இருந்திருக்க வாய்ப்புகள் குறைவு. தஞ்சை பெரிய கோயிலின் வடக்கில்தான் அணுக்க வாயில் இருந்துள்ளது. ராஜராஜன் அரண்மனையில் இருந்து எளிதில் வரவும் இப்போதுள்ள அரண்மனைப் பகுதியே மிக அருகில் உள்ள பகுதி.

மேலும், சீனிவாசபுரத்தின் மேற்குப் பகுதியில் கிடைத்துள்ள செங்கற் தொகுதிகள் மக்கள் குடியிருப்புப் பகுதி. புறம்படிப் பகுதியான இப்பகுதியில் பல்வகைப்பட்ட மக்களும், குறிப்பாக படைவீரர்களின் குடியிருப்புகளும் இருந்திருக்க வேண்டும். எனவேதான் ராஜராஜனின் புகழ்பாடும் கல்தூண் கல்வெட்டு அங்கு கிடைத்துள்ளது. அவர்கள் வாழ்ந்த வீடுகளின் எச்சங்களே இப்பகுதியில் கிடைத்துள்ளன.

தஞ்சாவூர் வடக்கில் உள்ள கருந்திட்டைக்குடி (கரந்தை) அந்தணர்கள், வீரர்கள், படையினர் வாழ்ந்த பகுதி. இதேபோல கோட்டையின் வட மேற்கிலும், மேற்கிலும் பல குடியிருப்புகள் இருந்துள்ளன.

எனவே, அகழி சூழ்ந்த மிகப் பெரிய கோட்டைச் சுவர்களை உடைய உள்ளாலைப் பகுதியில்தான் சோழர்களின் அரண்மனை இருந்துள்ளது' என்றார் ராஜவேலு.

இதுபோல, தஞ்சாவூரில் சோழர் கால அரண்மனை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இதுகுறித்த முடிவு எட்டப்படாததால் ஆய்வுகளும் தொடர்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com