அளவில்லா கடன்: அதானி குழுமத்துக்கு சிவப்பு எச்சரிக்கை

அதானி குழுமத்துக்கு கடன் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கௌதம் அதானி
கௌதம் அதானி


புது தில்லி: அளவில்லா கடன், அதிதீவிர வணிக விரிவாக்கம், அறிமுகமில்லாத பல துறைகளில் கால்பதிப்பது போன்றவற்றை மேற்கொண்டு வரும் அதானி குழுமத்துக்கு கடன் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் போட்டி போட முயலும் அதானி குழுமத்தின் அதிகப்படியான கடன்சுமை, வணிக விரிவாக்கம், தொடர்பில்லாத வணிகங்களில் நுழைவது போன்றவை குறித்து அபாய எச்சரிக்கை விடுக்கிறது இந்த ஆய்வறிக்கை.

பல்வேறு கடன் நிலுவைகள், அதானி குழுமத்தின் அதிதீவிர விரிவாக்கப் பணிகள், போன்றவை சுற்றுச்சூழல், சமூக, அரசு ரீதியிலான அபாயங்களை உருவாக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில், ரிலையன்ஸ் மற்றும் டாடா குழுமங்களைத் தொடர்ந்து மிகப்பெரிய வணிக நிறுவனங்களின் வரிசையில் தற்போது அதானி குழுமம் மூன்றாவது இடத்தில் உள்ளது. 1988ஆம் ஆண்டு சரக்கு வர்த்தகத்தின் மூலம் கௌதம் அதானி தனது வணிகத்தைத் தொடங்கினார். பிறகு, இது எரிசக்தி, பல்வேறு பயன்பாடுகள், போக்குவரத்து என விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது அதானி என்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், அதானி பவர், அதானி மொத்த எரிவாயு மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் என பல நிறுவனங்களை ஒன்றிணைத்த அதானி குழுமமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மிக-அதிகமான சுமை என்ற வார்த்தையுடன் பிட்ச் குழுமத்தின் பிரிவான கிரெடிட்சைஸ் என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை பல அபாயங்களை எடுத்துரைப்பதாக உள்ளது. 

ஆனால், அதானியின் நிதி தொடர்பான பல்வேறு தரவுகளை ஆய்வு செய்துள்ள கிரெடிட்சைட்ஸ் என்ற நிறுவனம் குறிப்பிடுவது என்னவென்றால், அதானி குழுமத்தின் மிகப்பெரிய கடன்-நிதி பெற்று விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகள் மிக எச்சரிக்கையுடன் கவனிக்கத்தக்கது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"பொதுவாக, இந்தக் குழுமமானது ஏற்கனவே இருக்கும் மற்றும் புதிய தொழில்களில் மிகத் தீவிர முதலீடுகளை மேற்கொள்கிறது, அதிகப்படியான முதலீட்டுத் தொகையை கடன் பெற்றே செய்கிறது, இதன் விளைவாக அதிகப்படியான அந்நியச் செலாவணி மற்றும் கடனைத் திரும்பச் செலுத்தும் விகிதங்களில் சிக்கல் எழலாம். இது ஒட்டுமொத்தக் குழுமத்தின் செயல்பாடுகள் மீதான கவலையை ஏற்படுத்துவதை புரிந்துகொள்ள முடியும். இதில் மிக மோசமானது என்னவென்றால், அதிகப்படியான கடன்பெற்று வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும்போது, அது ஒரு மிகப்பெரிய கடன் பொறியில் சிக்கிக் கொள்ளும் அபாயம் நேரிடலாம், இதனால் கடனைத் திரும்ப செலுத்தமுடியாத ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழுமங்கள் என்ற அதிகபட்ச நிலையை அடையலாம்" என்று தெளிவுபடுத்துகிறது.

அதானி குழுமம், வங்கிகளிலிடமிருந்து பல கோடி ரூபாய் கடன் மூலமே வணிகத்தில் ஈடுபடுகிறது. பல தொழில்களின் விரிவாக்கத்துக்கு தனது சொந்தப் பணத்தைப் பயன்படுத்தாமல், வங்கிகளிடம் அளவில்லாத தொகையைக் கடனாகப் பெற்றுத்தான் முதலீடு செய்கிறது.

தொடர்பில்லாத பல வணிகங்களில் ஈடுபடுவதால், பல ஆயிரம் கோடி வங்கிக் கடனை திரும்பி செலுத்த முடியாமல் அதானி குழுமம் மாட்டிக் கொள்ளக் கூடும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

யாருக்குக் கவலை?
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அதானி குழுமத்துக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், சந்தை ஆய்வாளர்கள் மற்றும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களை கவலையடையச் செய்துள்ளது. 

அறிக்கை வெளியான பிறகு அதானி குழும பங்குகள் பெரும் சரிவினைக் கண்டன. அதானி பவர், அதானி வில்மர், அதானி கிரீன் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவடைந்தன.

அதானி குழுமம் செய்வது என்ன?

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில், அதானி குழுமம் தனது வணிகத்தை விரிவாக்கும் பணியில் மிக அதிகவேகத்தைக் காட்டி வருகிறது. 

மிகப்பெரிய மூலதனத் தொகையைக் கொண்டு தாங்கள் தற்போது ஈடுபட்டு வரும் தொழிலுக்கும், வணிகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத புதிய தொழில்களிலும் வணிகத்திலும் கால்பதித்து வருகிறது. தொழில்களிலிருந்து வரும் லாபத்தைக் கொண்டில்லாமல், பல்வேறு வங்கிகளிலிருந்து, பெரும் கடன் மூலமாகவே இதனை செய்து வருவதால், இது அதானி குழுமத்துக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்ற கவலையை அந்த அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com